Last Updated : 21 Nov, 2021 03:06 AM

 

Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

என் வாழ்வின் நல்வாய்ப்பு

ஜெ.ஜெயரஞ்சன், துணைத் தலைவர், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு

அடையாறில் தற்போது எம்ஐடிஎஸ் செயல்பட்டுவரும் 79, இரண்டாவது பிரதான சாலைக் கட்டிடமானது, அதன் நிறுவனர் மால்கம் ஆதிசேசய்யாவுக்குச் சொந்தமானது. ஆய்வு மையத்தையும்கூட முதலில் அவரது சொந்தப் பணத்திலிருந்துதான் நடத்திவந்தார். இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம் (ஐசிஎஸ்எஸ்ஆர்), ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆய்வு மையத்தைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது, அம்மன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில், தனது சொந்தச் செலவில் நடத்திக்கொண்டிருந்த ஆய்வு மையத்தை அரசின் ஆய்வு மையமாக மாற்றிவிட்டார். தற்போது ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து அந்த ஆய்வு மையத்துக்கு நிதி நல்கைகள் அளித்துவருகின்றன.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, மொழியியல் என்று பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதே எம்ஐடிஎஸ் ஆய்வு மையத்தின் முக்கியமான பணி. முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான நல்கைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுவருகின்றன.

1983-ல் நடந்த நுழைவுத் தேர்வில் முதல் மாணவராக வெற்றிபெற்று நல்கையைப் பெற்று, அங்கு நான் ஆய்வு மாணவராகச் சேர்ந்தேன். நான்கைந்து ஆண்டுகள் அங்கு நான் ஆய்வு மாணவராக இருந்தேன். அதன் பிறகு, உடனடியாகப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு, புதுவை அரசுக் கல்லூரி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு, மீண்டும் எம்ஐடிஎஸ் திரும்பிவந்து ஆய்வுத் திட்ட ஆலோசகராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். நான்கு ஆண்டுகள் ஆய்வு மாணவராக இருந்ததும் நான்கு ஆண்டுகள் ஆய்வுத் திட்ட ஆலோசகராகப் பணியாற்றியதும் என்னுடைய வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள். என் வாழ்வின் நல்வாய்ப்பு என்றே அதை நான் சொல்வேன். ஏனென்றால், என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்புகள் ஒரே ஊரில் அமையவில்லை. என் தந்தையின் பணி காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நான் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்திருக்கிறேன். கல்லூரிப் படிப்பை மட்டும் மதுரையில் படித்தேன். பெரும்பாலும் சிறுநகரங்களிலேயே படித்த மாணவனான எனக்கு, இங்கு நிலவிய ஆய்வுச் சூழல் ஆச்சரியம் அளித்தது. என் கல்விக் கண்ணைத் திறந்துவிடும் இடமாக அது அமைந்தது. அங்கு படித்ததன் தாக்கத்தை இன்று வரையிலும் என்னால் உணர முடிகிறது. பார்வை விசாலமடைந்தது மட்டுமின்றி, பல துறைகளைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளவும் பேசவும் விவாதிக்கவுமான ஒரு பண்பாட்டுடன் வளர முடிந்தது. அதன் தாக்கத்தோடு வாழ்நாள் அளவும் பயணிக்க முடிகிறது. அந்த அரும்பெரும்பேற்றை எம்ஐடிஎஸ் எனக்கு வழங்கியது.

அங்கு படித்துவிட்டு வந்த என்னைப் போன்ற மாணவர்கள் பலரும் என்றென்றும் நினைவுகூரும் இடமாக எம்ஐடிஎஸ் அமைந்துள்ளது. இந்த ஐம்பதாண்டுகளை மட்டுமல்ல, இன்னும் பல ஐம்பதாண்டுகளை அந்நிறுவனம் சமாளித்து வெற்றிகரமாகப் பயணிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போன்று, ஆய்வு மாணவர்களைத் தயாரித்து உலகெங்கும் அனுப்பிவைத்து, அங்கிருக்கும் அறிவுச் செல்வங்களால் அவர்கள் தத்தம் துறைகளுக்கு வளம்சேர்க்கும் பணிகளும் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x