Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

எம்ஐடிஎஸ் நிறுவனமும் தமிழும்

ஆ.இரா.வெங்கடாசலபதி,பேராசிரியர், எம்ஐடிஎஸ்

ஐம்பதாண்டுகளுக்கு முன் எம்ஐடிஎஸ் என்ற ஆய்வு நிறுவனத்தை மால்கம் ஆதிசேசய்யா தொடங்கியபோது, அவருடைய நோக்கங்களில் ஒன்று, சமூக அறிவியலைத் தமிழில் பரவலாக்க வேண்டும் என்பது. இதற்குப் பெரிய தடைக்கல்லாக இருப்பது, உயர் கல்வித் துறையில் உள்ள பெரும்பாலானோர் தாய்மொழி மீது கொண்டிருக்கும் உதாசீனமும் பாராமுகமுமாகும்.

ஆதிசேசய்யா காலத்திலேயே இதன் தொடர்பில் சில முன்னெடுப்புகள் நடந்தன. சி.டி.குரியன் தமிழக கிராமப்புறப் பொருளாதார மாற்றங்கள் பற்றி எழுதிய முக்கியமான ஆய்வை 1980-களின் கடைசியில், சென்னை புக்ஸ் நிறுவனம் தமிழாக்கி வெளியிட்டது. தமிழக அரசின் நிதிச் செயலாளராக இருந்து, பின்னர் எம்ஐடிஎஸ் பேராசிரியரான எஸ்.குகன், நாட்டிய மேதை பாலசரஸ்வதியின் கட்டுரைகள் சிலவற்றையும் உ.வே.சாமிநாதையரின் சுற்றுச்சூழல் சார்ந்த ‘இடையன் எறிந்த மரம்’ என்ற கட்டுரையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழுக்கும் ஆங்கிலத்துக்குமான உரையாடலில் குகன் கொண்டிருந்த அக்கறைக்கு இது சான்று. 1990-களில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய கட்டுரைகள்- முக்கியமாக, தேசியம் பற்றிய பெரியாரின் பார்வை, தமிழ்த் திரைப்பட வரலாறு குறித்தவை - ‘காலச்சுவடு’ இதழில் மொழிபெயர்க்கப்பட்டன. ‘பராசக்தி’ பற்றி பாண்டியன் எழுதிய கட்டுரையை ‘முரசொலி’ தொடராக வெளியிட்டது.

புத்தாயிரம் முதல், ஆங்கிலத்தில் உருவான சமூக அறிவியல் அறிவைத் தமிழாக்குவது என்ற நிலை மாறி, எம்ஐடிஎஸ் ஆய்வாளர்கள் நேரடியாகவே தமிழில் எழுதலானார்கள். என்னுடைய கட்டுரைகளில் செம்பாதி நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டவை. லி.வெங்கடாசலம், கி.சிவசுப்பிரமணியன், ச.ஆனந்தி, சி.லட்சுமணன் முதலான பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், வெகுசன இதழ்களிலும் எழுதிவருகிறார்கள். எம்ஐடிஎஸ் முன்னாள் இயக்குநர் எஸ்.நீலகண்டன் எழுதிய நூல்களை இங்கு தனித்துக் குறிப்பிட வேண்டும். கரூர் பகுதியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் பற்றிய அவருடைய ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும்’ என்ற நூல் அவருக்குத் தமிழ் அறிவாளர்களிடையே நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து, நீலகண்டன் எழுதிய ‘ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’, ‘நவசெவ்வியல் பொருளியல்’ ஆகியவை முதுநிலைப் பாடநூல்களாக மட்டுமல்லாமல், பொதுவாசகர்களும் படிக்கும்வண்ணம் அமைந்த சிந்தனை வரலாற்று நூல்கள் என்ற அறிந்தேற்பைப் பெற்றுள்ளன.

சென்ற பத்தாண்டுகளில் தமிழகத்தின் முக்கிய பொதுச் சமூக அறிவாளராகக் கவனம்பெற்றுள்ள ஜெ.ஜெயரஞ்சன், எம்ஐடிஎஸ் மாணவர். தமிழகப் பொருளாதாரச் சிக்கல்களை இந்திய/ உலகச் சூழலில் பொருத்திக்காட்டும் அவருடைய பார்வை தனித்துவமானது. ஆ.கலையரசனும் எம்.விஜயபாஸ்கரும் முன்வைத்துள்ள ‘திராவிட மாதிரி' என்ற தமிழ்நாட்டின் சமூக-பொருளாதாரத்தின் மேம்பட்ட மாற்றத்தை விளக்கும் சட்டகத்தை அவர்கள் தமிழிலும் முன்வைத்துள்ளனர். தமிழ் இதழியலுக்குத் தலித்துகளின் பெரும்பங்களிப்பை ஆவணப்படுத்திய ஜெ.பாலசுப்பிரமணியம் எழுதிய ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை' என்ற நூல் எம்ஐடிஎஸ் ஆய்வேடாகத் தொடங்கியது என்பதும் சுட்டத் தகுந்தது. தமிழ்ச் சமூகம் சார்ந்த முக்கிய அயல்நாட்டு ஆய்வுகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியின் பகுதியாக தாமஸ் டிரவுட்மன் எழுதிய ‘திராவிடச் சான்று’ நூலையும் எம்ஐடிஎஸ் வெளியிட்டுத் தமிழ்ப் புலமையுலகில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இனிவரும் ஆண்டுகளிலும், எம்ஐடிஎஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பணிகள் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x