பட்ஜெட்: பெரிதாக ஒன்றும் இல்லை

பட்ஜெட்: பெரிதாக ஒன்றும் இல்லை
Updated on
1 min read

நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 3-வது நிதிநிலை அறிக்கை ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலின்போது சொன்னது ஒன்று, செய்வது வேறு என்ற விமர்சனத்தை முறியடிக்க இது நல்ல வாய்ப்பு. ஆனால் தவறவிடப்பட்டுவிட்டது.

வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்க்க அடுத்தடுத்து வரும் மத்திய அரசுகள் புதிது புதிதாகச் சட்டங்களை இயற்றினால் போதும் என்று நினைப்பது வியப்பளிக்கிறது. 1985-ல் தொழில்துறைகள் நலிவு பற்றி அரசிடம் முறையிட்டபோது, ‘நலிவுற்ற தொழில்பிரிவுகள் (சிறப்புப் பிரிவு) சட்டம்-1985’ என்று ஒன்றை இயற்றினார்கள், நலிவு தீரவில்லை. கடனைக் கட்ட முடியாமல் பலர் சுமையை அதிகமாக்கிக்கொண்டதுதான் மிச்சம். வங்கித் துறையில் வாராக் கடன்கள் அதிகமாகிவிட்டன என்றதும் 2002-ல் கடன் மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றினார்கள். வாராக் கடன்கள் நிலைமை என்ன என்று நமக்குத் தெரியும். இப்போது, திவாலாகும் நிறுவனங்கள் தொடர்பாகப் புதிய சட்டம் இயற்றப்போவதாகக் கூறியிருக்கிறார்கள்.

இப்போதைய நிதிநிலை அறிக்கையில் புரட்சிகரமாகவோ, புரட்டிப்போடும்படியாகவோ எதுவுமே இல்லை. இங்கே வெட்டுவது, அங்கே ஒட்டுவதுதான் நடந்திருக்கிறது. நீதிபதி ஆர்.வி. ஈஸ்வர், பார்த்தசாரதி சோம் ஆகியோர் தலைமையிலான குழுக்களின் பரிந்துரைகள் அமல் படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நிதிநிலை அறிக்கையின் எல்லா இணைப்புகளையும் பொறுமையாகப் படித்தால்தான் விளங்கும்.

வரி விதிப்புகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்குத் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், ஆட்சேபத்துக்கு உள்ளாகும் தொகையை முழுதாகச் செலுத்தி விட்டுத்தான் அணுக வேண்டும் என்ற விதியால் யாரும் மேல் முறையீட்டு மன்றத்துக்குச் செல்ல மாட்டார்கள். சென்வாட் வரியிலும் கலால், சுங்க வரிகளிலும் செய்துள்ள மாற்றங்களும் குழப்பத்துக்கும் வழக்குகளுக்கும்தான் இட்டுச் செல்லும்.

குறைந்தபட்ச மாற்றுவரி (மே.ஏ.டி.) ரத்து செய்யப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யானது. பொது வரி தவிர்ப்பு (ஜி.ஏ.ஆர்.ஆர்.) விதிகள் 2017 ஏப்ரல் 1 முதல் அமலாகும் என்ற உத்தேச அறிவிப்பு கவலை அளிக்கிறது.

தொழில்துறையில் முதலீடு செய்ய விரும்பும் உள்நாட்டவருக்கோ, வெளிநாட்டவருக்கோ ஊக்குவிப்பு ஏதும் இல்லை. ரூ.25 கோடி முதலீட்டில் புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு வரி விடுமுறை தரப்படும். ஆனால், குறைந்தபட்ச மாற்று வரியைப் பொறுத்தது என்ற அறிவிப்பு ஆட்சியாளர்களின் குறு மதியைத்தான் காட்டுகிறது.

அரவிந்த் பி. தத்தார், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in