Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

பெரியாறு அணை: அரசியலும் பொறியியலும்

கடந்த இரண்டு வாரங்களில் முல்லைப் பெரியாறு அணை மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இதை மூன்று நிகழ்வுகளாகச் சுருக்கிப் பார்க்கலாம். முதலாவது, அக்டோபர் 29-ம் தேதி அணையின் கலிங்குகளிலிருந்து உபரி நீர் கேரளாவுக்குத் திறந்து விடப்பட்டது. அணை தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், சில ஊடகங்கள் கேரள அரசு ‘தன்னிச்சை’யாக நீரைத் திறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டன. இரண்டாவதாக, 30-ம் தேதி கூடுதல் கலிங்குகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டுக்கு நீரைப் பயன்படுத்தாமல், கேரளத்துக்குத் திறந்துவிடுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன. மூன்றாவதாக, நவம்பர் 7-ம் தேதி பெரியாறு அணையை ஒட்டியுள்ள சிற்றணையை மேம்படுத்துவதற்குத் தடையாக இருந்த மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை நல்கியிருந்த அனுமதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்த மூன்று நிகழ்வுகளிலும் அரசியல் தலைதூக்கி இருக்கிறது; பொறியியல் பின்தள்ளப்பட்டுவிட்டது. இரண்டையும் நாம் சற்று நெருங்கிப் பார்க்கலாம்.

விதிவிலக்கான அணை

“அனாதி காலந்தொட்டு மதுரை ஜில்லா பாசனநீர்ப் பற்றாக்குறையால் துயரப்பட்டுவருகிறது.” - இது ஜான் பென்னிகுயிக் 26 ஜனவரி, 1897 அன்று லண்டன் பொறியாளர் சங்கத்தில் வாசித்த கட்டுரையின் முதல் வரி. மதுரை ஜில்லாவையும் இடுக்கி ஜில்லாவையும் பிரிப்பது ஒரு மலைத் தொடர். மலைக்கு மறுபக்கம், இயற்கை மழையை வாரி வழங்குவதையும் பெரியாறு புரண்டு ஓடுவதையும் பென்னிகுயிக் அதே கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். மேற்கே ஓடிக் கடலில் கலந்த நதியை மறித்து, கிழக்கே மதுரை மாவட்டத்துக்குத் திருப்பிய பொறியியல் சாதனைக்குப் பெயர்தான் பெரியாறு அணை.

பொதுவாக, அணைக்கட்டுகள் ஆற்றின் போக்கில் அதன் குறுக்காகக் கட்டப்படும். அணைக்கட்டின் பின்புறத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதி இருக்கும். பாசனக் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கான மதகுகள் அணைக்கட்டின் ஒரு புறமும், உபரிநீரைக் கடத்துவதற்கான கலிங்குகள் ஒரு புறமும் இருக்கும். ஆனால், பெரியாறு அணை விதிவிலக்கானது. இதன் மதகுகளும் கலிங்குகளும் அணைக்கட்டில் இருக்காது. அணைக்குச் சற்றுத் தள்ளி, உபரி நீரைக் கேரளத்துக்கு வெளியேற்றும் கலிங்குகள் இருக்கும். அணையிலிருந்து நீர்ப்பிடிப்புப் பகுதி வழியாக 14 கி.மீ. பயணித்தால் வரும் தேக்கடியில்தான் தமிழ்நாட்டுப் பாசனக் கால்வாய்க்கு நீரைத் திறந்துவிடும் மதகுகள் இருக்கும். தமிழ்நாட்டு அணையின் உயர்மட்ட அளவான 152 அடி வரை நீரை நிறுத்திக்கொண்டிருந்தது-1979 வரை.

அப்போதுதான் அணையின் வலு குறித்துக் கேரளம் ஐயங்களை எழுப்பியது. அணையை ஆய்வுசெய்த ஒன்றிய நீர் ஆணையத்தின் வல்லுநர்கள் அணை பலமானதுதான் என்று சான்றளித்தார்கள். எனினும், அணையின் பாதுகாப்பை மேம்படுத்த நான்கு விதமான பணிகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு முன்வந்தது; அந்தப் பணிகள் முடியும் வரை உயர்மட்டமான 152 அடியை 136 அடியாகக் குறைத்துக்கொள்ளவும் சம்மதித்தது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் நீர்மட்டத்தை உயர்த்த கேரளம் சம்மதிக்கவில்லை. 2014-ல் உச்ச நீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும், அருகேயுள்ள சிற்றணையை மேம்படுத்திய பின் 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் ஆணையிட்டது.

நீர் மேலாண்மை

அதன் பிறகு மூன்று முறை, நீர் மட்டம் 142 அடியை எட்டியது: 2014, 2015, 2018. இதில் 2018, கேரளம் பெரு வெள்ளத்தை எதிர்கொண்ட நேரம். தமிழ்நாடு திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதால்தான் தங்கள் மாநிலத்தில் வெள்ளத்தின் பாதிப்பு மோசமானதாக உச்ச நீதிமன்றத்தில் கேரளம் முறையிட்டது. தமிழ்நாட்டு அரசு ஆதாரங்களோடு அதை மறுத்தது. எனினும், பிரச்சினை தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. மழைக் காலத்தில் உயர்மட்டம் வரை நீரைத் தேக்குவது நீர் மேலாண்மைக்கு எதிரானது; அபாயகரமானது. நீர் வரத்து அதிகமாக இருக்கும்போது உயர்மட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே, படிப்படியாக நீரை வெளியேற்றுவதுதான் சரியானது.

ஆனால், அனைத்து அணைக்கட்டுகளிலும் உயர்மட்டம் வரை நீரைத் தேக்குவது வழமையாகியிருக்கிறது. 2018-ல் இதுதான் கேரளத்தின் எல்லா அணைகளிலும் நடந்தது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இனி நீரைத் தேக்க முடியாது என்ற நிலை வந்தபோதுதான், கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்தது. 2015-ல் முழுக் கொள்ளளவை எட்டிய பிறகுதான் செம்பரம்பாக்கம் திறந்துவிடப்பட்டது. 2018-ல் பெரியாறிலும் இதுதான் நடந்தது.

இதை மாற்ற வேண்டும் என்பதையும் இதற்கான நீர்நிறுத்த விதிகளை (rule curve) வகுக்குமாறும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. உயர்மட்டம் அக்டோபர் 20-ல் 138 அடியாகவும், நவம்பர் 10-ல் 139.50 அடியாகவும், நவம்பர் 30-ல் 142 அடியாகவும் இருக்க வேண்டும் என்கிற விதி வகுக்கப்பட்டு, அதை ஒன்றிய நீர் ஆணையமும் ஏற்றுக்கொண்டதாக அறிய முடிகிறது. இந்த விதிகள் திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே அமலில் வந்திருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது. அக்டோபர் 29-ம் தேதி நீர் மட்டம் 139அடியைத் தாண்டியதும் பொதுப்பணித் துறை மூன்று கலிங்குகளை மட்டும் திறந்தது. அடுத்த நாள் நீர்வரத்து அதிகரிக்கவே கூடுதலாக மூன்று கலிங்குகளைத் திறந்தது. இவை எல்லாம் இரண்டு மாநிலங்களின் பொதுப் பணித்துறைகளும் ஒன்றிய நீர் ஆணையமும் ஒப்புக்கொண்ட வழிமுறைகள். ஆனால், இந்தப் பொறியியல் நடைமுறைகளில் அரசியல் கலந்தபோது பெரியாற்று நீர் கலங்கியது.

மூன்று குற்றச்சாட்டுகள்

இப்போது முதல் பத்தியின் முதலாவது குற்றச்சாட்டை எடுத்துக்கொள்வோம். கேரள அரசு தன்னிச்சையாகப் பெரியாற்று அணையின் கலிங்குகளைத் திறந்தது என்பதாகும். அணையின் உரிமையாளரும் பராமரிப்பாளரும் தமிழ்நாடு அரசுதான். இதில் கேரள அரசு எப்படிக் கலிங்குகளைத் திறக்க முடியும்? இதில் ஒரு துணைக் குற்றச்சாட்டும் இருந்தது. கலிங்குகள் திறக்கப்படும்போது கேரள அமைச்சர்கள் இருந்தனர், தமிழ்நாட்டு அமைச்சர்கள் இல்லை என்பது. கேரள அமைச்சர்கள் பார்வையிடுவது அவர்கள் விருப்பம். அதை நாம் தடுக்க முடியாது; கூடாது. உபரி நீர் கேரளத்துக்கு விடப்படுகிறது. இதை மேற்பார்க்கத் தமிழ்நாட்டு அமைச்சர்கள் ஏன் செல்ல வேண்டும்? இந்தக் குற்றச்சாட்டை எழுப்பிய அரசியலர்கள், வேறு அணைகளில் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படும்போது அமைச்சர்கள் மலர் தூவும் காட்சிகளோடு இதைக் குழப்பிக்கொண்டிருக்கக்கூடும். பெரியாறு அணையின் பாசன மதகுகள் அணையிலிருந்து 14 கிமீ தள்ளி இருக்கின்றன. இது விதிவிலக்கான அணை. இரண்டாவது குற்றச்சாட்டு, 142 அடியை எட்டுவதற்கு முன்னரே கலிங்குகள் திறக்கப்பட்டன என்பதாகும். ஆனால், அக்டோபர் 29 அன்று அதுதான் அனுசரிக்கப்பட வேண்டிய விதி. இவ்விரண்டும் உள்ளூர்க் குற்றச்சாட்டுகள்.

மூன்றாவது குற்றச்சாட்டு, அண்டை மாநிலத்திலிருந்து வந்தது. மரம் வெட்டும் அனுமதியைக் கேரளம் மீளப் பெற்றது. பிரதான அணைக்குப் பக்கத்தில் இருக்கிறது ஒரு சிற்றணை. பிரதான அணையைப் போலவே சிற்றணையும் மேம்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு அதற்குத் தயாராக இருக்கிறது. அப்போதுதான் 152 அடிக்கு நீரை நிறுத்த முடியும். ஆனால், கேரள அரசியலர்கள் அதை விரும்பவில்லை. ஏனெனில், 136 அடியில் அணையின் பயன்கொள்ளத்தக்க நீரின் கொள்ளளவு 6.12 டி.எம்.சி. அதுவே 142 அடியில் 7.67 டி.எம்.சி, 152 அடியில் 10.57 டி.எம்.சி.

புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசியலர்களின் கோரிக்கை. ஏனெனில், புதிய அணையின் கட்டுப்பாடு கேரள அரசின் கைகளுக்குப் போய்விடும். அதற்காகவே அணை பலவீனமானது என்கிற குற்றச்சாட்டை முன்னெடுக்கிறார்கள். சிற்றணை மேம்பாட்டைத் தடுக்கிறார்கள். நாம் என்ன செய்யலாம்? முதலாவதாக, தன் படை வெட்டிச் சாய்க்கிற நமது உள்ளூர் அரசியலர்கள் தமிழ்நாட்டு அரசுடன் ஒன்றுபட்டு, ஒற்றைக்கட்டாக நிற்க வேண்டும். இரண்டாவதாக, சட்டரீதியாக நமது உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும். அடுத்ததாக, நமது தரப்பின் நியாயங்களைக் கேரள அறிவாளர்களுக்கும் அரசியலர்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும். நல்வாய்ப்பாக, இரண்டு மாநில முதல்வர்களுக்கு இடையில் பரஸ்பர மரியாதை நிலவுகிறது. அதைப் பயன்படுத்திக் கேரள மக்களின் நல்லெண்ணெத்தைப் பெற முயல வேண்டும்.

பெரியாறு அணை வலுவானது. சிற்றணையையும் மேம்படுத்த வேண்டும். அணையின் முழுப் பயன்பாட்டையும் நாம் துய்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எல்லா மட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும். மதுரை ஜில்லா மீண்டும் துயரப்படக் கூடாது.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x