

திரைமறைவிலிருந்து பார்க்கும் கண்கள் குறித்து அமெரிக்கர் களுக்கு இப்போதுதான் உறைக்க ஆரம்பித்திருக்கிறது. மின்னணுப் புரட்சியின் மோசமான பின்விளைவு இது. கடன் அட்டை வாங்கியோரில் பலர், தாங்கள் வாங்காத பொருள்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதுதான் தங்களுடைய கடன் அட்டை எண், பாஸ்வேர்டு உள்ளிட்ட ரகசிய அடையாளங்களை யாரோ திருடியிருப்பதை உணர்ந்தனர். மேலும் பலர் அன்றாடம் வரும் எஸ்.எம்.எஸ்.-களிலிருந்துகூட அதை உணராமல் இருக்கின்றனர். சேமநலநிதியிலிருந்தோ, காப்பீட்டு நிறுவனத்திலிருந்தோ, வங்கியிலிருந்தோ நம்முடைய கணக்குக்குப் பெரும் தொகை வந்ததாகத் தகவல் வந்த சில நிமிஷங்களுக்கெல்லாம், “உங்களுக்கு வீடு வேண்டுமா, கார் வேண்டுமா, நகை வேண்டுமா, இன்சூரன்ஸில் முதலீடு செய்ய விருப்பமா?” என்றெல்லாம் கேள்விகள் பறந்துவரும். இவையெல்லாம் தற்செயலாக வருவன அல்ல; நம்முடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துவருபவர் அளிக்கும் தகவலையடுத்து அந்தந்த நிறுவனங்களின் வர்த்தகப் பிரிவு அளிக்கும் குறந்தகவல்கள் இவை. இப்படித் தரவுகளைத் திரட்டி அளிப்பதற்கென்றே இடைத்தரகர் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவின் பெடரல் டிரேட் கமிஷன் தலைவர் எடித் ரமிரெஸ் இதை அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். ஒன்பது நிறுவனங்கள் இப்படித் தரவுகளைத் திரட்டுவதோடு ஒவ்வொருவர் பற்றியும் தாமாகவே ஒரு முடிவுக்கு வந்து முத்திரை குத்துகின்றன. இன்னார் ‘நாய் வளர்க்கிறார்' என்ற தகவலால் ஆபத்தில்லாமல் இருக்கலாம். ஆனால், இன, வருவாய், சுகாதார அடிப்படையில் ஒருவரை அடையாளப்படுத்துவது விபரீதங்களில் முடியும். ‘அர்பன் ஸ்கிராம்பிள்', ‘மொபைல் மிக்சர்' என்ற பெயர்களில் சிலரை வகைப்படுத்துகின்றனர். அதாவது, இவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், குறைந்த வருவாய்ப் பிரிவினர் என்று பொருள். தங்களை யார் வகைப்படுத்தி முத்திரை குத்துகின்றனர் என்பது தெரியாமலே மக்கள் அதற்கு இரையாவது பரிதாபத்துக்குரியது. இந்த ஒன்பது நிறுவனங்களில் ஒன்றிடம் மட்டும் 70,000 கோடி பொருள் விற்பனைத் தகவல்கள் இருக்கின்றனவாம். சந்தைப்படுத்தலுக்காக நுகர்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டிக்கொள்ள நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன. ஆனால், அதை நுகர்வோருக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடாதென்று கூறும் சட்டம் ஏதுமில்லை!