அப்துல் ஜப்பார்: நீதிக்கான போராட்டத்துக்கு அங்கீகாரம்

அப்துல் ஜப்பார்: நீதிக்கான போராட்டத்துக்கு அங்கீகாரம்
Updated on
3 min read

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, மேம்பாட்டுக்காக 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவந்த அப்துல் ஜப்பாருக்கு, அவரது மரணத்துக்குப் பிறகு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 1984-ம் ஆண்டு யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் ஆலையில், மெத்தல் ஐசோசயனைட் என்னும் விஷவாயுக் கசிவு ஏற்படுத்திய பயங்கர விபத்தில் 15 மனித உயிர்கள் பலியாகின. இந்த விபத்தால் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் அப்துல் ஜப்பார். 50% பார்வை இழப்புக்கு உள்ளானவர்; இறுதிவரை நுரையீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்டவர்.

போபாலில் ஜப்பார் பாய் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஜப்பார், வறுமையின் விளிம்பில் மனைவி, மூன்று பிள்ளைகளுடன் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுள்ள, ஒரு அறை கொண்ட வீட்டில் கடந்த ஆண்டு தன்னை மரணம் தழுவும் வரை வாழ்ந்தவர். அரசுகள், அரசியலர்கள், பெருநிறுவனங்கள் யாருடைய உதவியையும் பெறாமல், போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கே வாழ்ந்தார்களோ அவர்களுடனேயே பணியாற்றி உயிர்நீத்தவர் ஜப்பார். அவர் உருவாக்கிய ‘போபால் காஸ் பீடித் மஹிலா உத்யோக் சங்காதன்’ பெருநிறுவன நிதிக் கொடையாளர்களிடமும் அயல்நாட்டு நிறுவனங்களிடமும் எந்த உதவியையும் கோரியதில்லை. விஷவாயு பயங்கரத்தால் இறந்துபோனவர்களின் மனைவிகளுக்குத் தொழிற்பயிற்சிகளை ஜப்பாரின் அமைப்பு தொடர்ந்து அளித்துவந்தது. மேலும், இந்த அமைப்பின் மூலம் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ, பொருளாதார மறுவாழ்வுக்கு உதவியதோடு, ஊழல் அதிகாரிகளுக்கு எதிராகவும், அசமந்தமாகச் செயல்படும் அரசு அமைப்புகளைத் தட்டி உலுக்கவும் தொடர்ந்து புகார்க் கடிதங்களை எழுதிக்கொண்டே இருந்தார் ஜப்பார். ஒருகட்டம் வரை மருத்துவமனை படுக்கை, மருந்துகளைத் தேடி அலைவதே அவரது அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னிறைவான வாழ்க்கையை வழங்குவதை ஜப்பார் தன் நோக்கமாகக் கொண்டிருந்தார். நல்ல பயிற்சிக்குப் பிறகு, அவர்களுக்குத் தையல் பணிகள், பைகள் தைப்பது, போபாலின் புகழ்பெற்ற அலங்கார மணிபர்ஸ்கள் செய்வதற்கான ஆர்டர்கள் போன்றவற்றைப் பெரிய கடைக்காரர்களிடமிருந்து வாங்கித்தந்தார்.

பொருளாதாரத்தில் மிகவும் எளிய நிலையில் அவரும் அவரது அமைப்பும் இருந்தாலும் பொதுநலனில் அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள் மூலம் தொடர்ந்து சட்டரீதியான மனுக்களைத் தாக்கல்செய்து, இழப்பீடு, மருத்துவ உதவி, கூடுதல் நிவாரணத் தொகையை அவர் வாங்கித்தந்தார். அத்துடன் சாலைப் போராட்டங்கள் மூலம் யூனியன் கார்பைடு தொழிற்சாலைப் பகுதியில் இருந்த விஷக் கழிவுகளை அகற்றச் செய்தார். ஆலைக்குப் பக்கத்திலும் ஏரிகளுக்குப் பக்கத்திலும் கட்டிடங்கள், உணவுவிடுதிகள் கட்டவிடாமல் தடுத்ததிலும் ஜப்பாருக்குப் பங்குண்டு.

துணி ஆலைப் பணியாளரின் மகனான அப்துல் ஜப்பார் கான் ஆழ்துளைக் கிணறு ஒப்பந்ததாரராகப் பணியாற்றியவர். யூனியன் கார்பைடு ஆலையில் விபத்து நடைபெற்ற அந்தப் பயங்கர இரவுதான் ஜப்பாரை மாற்றிய இரவு. ஜப்பாரின் வீட்டைச் சுற்றி நச்சுப் புகை சூழ்ந்தபோது, ஜப்பார் தனது சகோதரன், அம்மாவை ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு அபைதுலாகஞ்சுக்குச் சென்று தப்பித்தார். அவர் திரும்ப ஊருக்குப் பாதுகாப்போடு திரும்பினாலும் ஏற்கெனவே விஷப்புகை ஏற்படுத்தியிருந்த பாதிப்பால் அப்பா, அம்மா, சகோதரனைப் பலிகொடுத்தார். ஜப்பாரின் பார்வையும் நுரையீரலும் பாதிக்கப்பட்டது.

அந்த நாட்களில் அவர் பார்த்த சடலங்களின் காட்சிகளும், மூச்சு விடுவதற்காகக் குழந்தைகளும் வயோதிகர்களும் கண்ணே தெரியாமல் தூய்மையான காற்றைத் தேடி நகரத்துக்கு வெளியே அலைந்ததும் அவரது வாழ்க்கை இலக்கையே மாற்றின. இத்தனை துயரங்களையும் கொடுத்த தொழிற்சாலை நிர்வாகம் குற்றவுணர்வே இல்லாமல் நடந்துகொண்டது, ஜப்பாரை ஒரு போராளியாக மாற்றியது.

28 வயதில் ஜப்பார் இப்படித்தான் போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் மறுவாழ்வுக்கான தனது போராட்டத்தைத் தொடங்கினார். தான் வசிக்கும் பிராந்தியத்திலிருந்து மக்களுக்கு உதவிகளைச் செய்யத் தொடங்கிய ஜப்பார் அரசு தரும் வேலைகள், இழப்பீடுகளுக்காகக் காத்துக்கொண்டிருக்காமல் பயிற்சி மையங்களைத் தொடங்கினார். ஒருகட்டத்தில், அதிகமாகப் பெண் உறுப்பினர்களைக் கொண்டதாக, 30 ஆயிரம் பேர் கொண்ட அமைப்பாக அது வளர்ந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து மக்கள் 1942-ல் போராட்டம் நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, போபாலின் யாத்கார் இ ஷாஜகானி பூங்காவில் செவ்வாய், சனிக்கிழமைகளில் அவர்கள் கூடுவார்கள்.

இறுதி இழப்பீடு பெறுவதற்கு முன்னர் இடைக்கால நிவாரணம் தர வேண்டுமென்று கோரி, ஜப்பார் உச்ச நீதிமன்றத்தை 1988-ல் நாடினார். அடுத்த ஆண்டு மத்திய அரசு யூனியன் கார்பைடு ஆலையோடு பேச்சுவார்த்தை நடத்தி ரூ.7,200 கோடி தர ஏற்பாடு ஆனது. உச்ச நீதிமன்றமும் அந்தத் தொகைக்குச் சம்மதித்தது. இந்தத் தொகை போதாது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்றும் உணர்ந்த நிலையில் ஜப்பார் போராடி, கூடுதல் நிவாரணத் தொகையாக ரூ.1,503 கோடியைப் பெற்றுத்தந்தார். இழப்பீடு பெற வேண்டியவர்கள் என்று அரசு ஒரு லட்சம் பேரையே அங்கீகரித்திருந்த நிலையில், 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் இழப்பீடு தரப்பட வேண்டியவர்கள் என்பதை அரசு ஏற்றுக்கொள்ளவும் வலியுறுத்தி ஜப்பார் வெற்றிபெற்றார்.

“போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் முன்நின்று செயல்பட்டவர் ஜப்பார் என்பதை அங்கீகரிக்கும் விருதாக பத்மஸ்ரீ விருது உள்ளது. போராடுவது என்பது பலன்கொடுப்பது என்பதற்கான அடையாளமாகவும் விளங்குகிறது. விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது” என்கிறார் ‘போபால் காஸ் பீடித் சங்கர்ஸ் சகயோக் சமிதி’யின் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் என்.டி.ஜெயப்ரகாஷ்.

வாழ்நாள் முழுவதும் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய நிலையில், மத்திய அரசின் இந்த உயர்ந்த அங்கீகாரம் கிடைத்திருக்கும் நிலையில், ஜப்பார் அந்தச் செய்தியைக் கேட்பதற்கு உயிருடன் இல்லையே என்று ஆதங்கப்படுகிறார் அவரது மனைவி சாய்ரா பானு.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தீவிர நீரிழிவு நோயாலும் இதயப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டு மரணமடைந்த ஜப்பாருக்குச் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்று சொல்லப்படும் போபால் நினைவு மருத்துவமனையிலேயே போதுமான வசதிகள் இல்லை. ஆனால், அவருக்கு உயர்தர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடக்கும் முன்னர் அவர் உயிர்பிரிந்துவிட்டது.

நீதிக்கான போராட்டம் போபாலுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமானது என்று அடிக்கடி வலியுறுத்தியவர் ஜப்பார்.

இழப்பீடு பெற வேண்டியவர்கள் என்று அரசு ஒரு லட்சம் பேரையே அங்கீகரித்திருந்த நிலையில், 5,70,000 பேர் இழப்பீடு பெறப்பட வேண்டியவர்கள் என்பதை அரசு ஏற்றுக்கொள்ளவும் வலியுறுத்தி ஜப்பார் வெற்றிபெற்றார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in