Last Updated : 11 Nov, 2021 03:07 AM

 

Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

அப்துல் கரீம் கான்: இந்தியாவின் இசைச் சொத்து

கரஹரப்ரியா ராகத்தில் அமைந்த தியாகையரின் ‘ராமா நீ சமான மெவரு’ என்ற கீர்த்தனையை உஸ்தாத் அப்துல் கரீம் கானின் குரலில் (1872-1937) கேட்கும்போது அது பல செய்திகளை உணர்த்துகிறது. முதலாவது, கர்னாடக சங்கீதக் கீர்த்தனையை இந்துஸ்தானி இசைக் கலைஞர் பாடியிருக்கிறார் என்பது. இரண்டாவது, ‘ராமா உனக்கு சமமானவர் யார்?’ என்ற பொருள்படும் இந்தக் கீர்த்தனையைப் பாடியவர் ஓர் இஸ்லாமியர் என்பது. தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த தியாகையரின் கீர்த்தனையை உத்தர பிரதேசத்தின் கைரானா கிராமத்தில் பிறந்த அப்துல் கரீம் கானின் தேவலோகக் குரலில் கேட்பதும் ஓர் இன்பமே. இந்தியா ஒரு பன்மைத்துவ நாடு என்றால், இந்துஸ்தானி இசையும் ஒரு பன்மைத்துவ இசை. இந்தப் பண்பாட்டின் பிரதிநிதிதான் அப்துல் கரீம் கான்.

1872-ல் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் கரீம் கான். தந்தையிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் கரீம் கான் இசைப் பயிற்சி பெற்றார். வாய்ப்பாட்டுடன் சாரங்கி, தபலா போன்ற வாத்தியங்களையும் கற்றுக்கொண்டார். பின்னாளில் வீணையும் கற்றுக்கொண்டார். அவரும் அவருடைய சகோதரர்களும் பதின்பருவத்திலேயே கைரானாவை விட்டு வெளியேறி பரோடாவுக்குச் சென்றனர். தன் இசையால் பரோடா மஹாராஜாவின் மனதை கரீம் கான் கவர்ந்ததால் அரசவை இசைக் கலைஞராக நியமிக்கப்பட்டார். அங்கேதான் அரச குடும்பத்தைச் சேர்ந்த தாராபாய் மனேவைச் சந்தித்துக் காதலில் விழுந்தார். மதங்களைத் தாண்டிய காதல் என்பதால் அதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது. அவர்கள் பம்பாய்க்குச் சென்றுவிட்டனர்.

பம்பாயில் வசித்தபோது கரீம் கான் அடிக்கடி மைசூர் சமஸ்தானத்துக்கும் அன்றைய மெட்ராஸ் மாகாணத்துக்கும் வந்துசென்றார். கரீம் கானின் இசைக்கு மைசூர் மஹாராஜாவும் அடிமையானார். மைசூர் தர்பார், சங்கீத மரபுகளின் சங்கமத்துக்கும் சங்கீத விவாதங்களுக்கும் வழிவகுத்தது. மைசூர் வாசுதேவாச்சாரியார் உள்ளிட்ட கர்னாடக இசை மேதைகளுடனான தொடர்பு அப்துல் கரீம் கானின் கர்னாடக இசையறிவுக்குச் செறிவூட்டியது. இதன் விளைவாக, கரீம் கான் கர்னாடக சங்கீதத்தின் சில அம்சங்களை இந்துஸ்தானியில் கலந்து தனது இசையை வழங்க ஆரம்பித்தார். கர்னாடக இசையிலிருந்து தேவகாந்தாரி, ஆபோகி போன்ற ராகங்களைக் கடன்பெற்று அதனை இந்துஸ்தானி இசை வட்டாரத்தில் கரீம் கான் பிரபலப்படுத்தினார்.

மெட்ராஸ் மாகாணத்துக்கு வரும்போது வீணை தனம்மாளின் நட்பும் கரீம் கானின் இசையறிவை விரிவுபடுத்தியது. ஒருமுறை வீணை தனம்மாள் அடாணா ராகத்தில் வாசித்ததைக் கேட்டுவிட்டு, அன்றைய தினம் தனது கச்சேரிக்குக் கிடைத்த தொகையை அப்படியே வீணை தனம்மாளிடம் கரீம் கான் கொடுத்துவிட்டதாக தனம்மாள் குடும்பத்தில் பேசிக்கொள்வதுண்டு என்று பாலசரஸ்வதியின் வரலாற்றாசிரியர் டக்ளஸ் நைட் குறிப்பிடுகிறார்.

இசைத் தட்டில் தனது குரலைப் பதிவுசெய்த முதல் இந்தியக் கலைஞர்களுள் அப்துல் கரீம் கானும் ஒருவர். அவர் காலத்து இசை மேதைகள் பலரும் ஒலிவாங்கியைக் கண்டு அஞ்சினார்கள். அதில் பாடினால் அது தங்கள் குரலை உறிஞ்சிக்கொண்டுவிடும் என்று நினைத்தார்கள். கரீம் கான் பாடி நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள் பலவும் 5 நிமிடங்களுக்கு உட்பட்டவையே. அவர் பாடிய பிலாவல், சாவேரி, தர்பாரி கானடா, மார்வா, மால்கௌன்ஸ் போன்ற ராகங்களில் அமைந்த பாடல்களெல்லாம் கேட்கக் கேட்கத் திகட்டாதவை.

அப்துல் கரீம் கானின் குரல் மிகவும் மென்மையானது, கனிவானது, இறைஞ்சுவதைப் போன்றது, பெண்மை மிளிர்வது. அவர் குரலால் பாடுவது போலல்லாமல் உயிரால் பாடுவது போல் இருக்கும். “அவர் தனக்கே உரித்தான, ஸ்வரங்களால் பீடிக்கப்பட்ட சன்னதத்தின் ஒலியிலேயே நாள் முழுதும் திளைத்திருப்பார், முந்தைய நாளில் சுதிகூட்டப்பட்ட தம்புராவை எடுத்து அதை கீழ்ஸ்தாயிக்குச் சுதிகூட்டுவார், ஹார்மோனியத்தைக்கூடத் துணைக்கு வைத்துக்கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவார்கள். உறக்க நிலையிலும் விழிப்பு நிலையிலும் அதே சுருதியுடன் நிலையான ஒத்திசைவில் அவர் இருந்தார் என்பதையே இது உணர்த்துகிறது” என்று கரீம் கானைப் பற்றி இசை வரலாற்றாய்வாளர் கே.டி.தீக்ஸித் கூறியதை அவரது பாடல்களைக் கேட்கும்போது உணரலாம்.

புகழ்பெற்ற கிரானா கரானாவை நிறுவியவராக அப்துல் கரீம் கான் கருதப்படுகிறார். இந்த கரானாவானது சவாய் கந்தர்வா, குமார் கந்தர்வா, பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல், ரோஷன் ஆரா பேகம், (கரீம் கானின் புதல்வி) ஹீராபாய் பரோடேகர், பிரபா ஆத்ரே வழியாக நீடித்து இன்றும் தொடர்கிறது. தன்னுடைய 11-வது வயதில் அப்துல் கரீம் கானின் இசைத் தட்டைக் கேட்ட பிறகுதான் உண்மையான இசை இப்படித்தான் இருக்கும் என்று தன் மனதில் ஆழமான எண்ணம் ஏற்பட்டதாக பாரத ரத்னா பீம்சென் ஜோஷி ஒரு முறை கூறினார். கரீம் கானின் புதல்வி ஹீராபாய் பரோடேகரின் பாடல்களில் தந்தையைப் போன்ற கனிவும் ஈர்ப்பும் மிக்க குரலையும் சங்கீதத்தையும் இனம்காணலாம்.

தென்னிந்தியாவுக்கு அப்துல் கரீம் கான் வந்தபோது சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டிருக்கிறது. அவரை இறக்கி நடைமேடையில் உட்கார வைத்திருக்கிறார்கள். மருத்துவ உதவி கிடைப்பதற்கு முன் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது (27-10-1937). இறப்பதற்கு முன்பு தர்பாரி ராகத்தில் அமைந்த பாடல் ஒன்றை அவர் பாடியதாகக் கூறப்படுகிறது. அவர் சிங்கபெருமாள் கோவில் நிலையத்தில் இறந்ததைப் பற்றி இசை வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் போன்றோர் எழுதியுள்ளனர்.

இந்திய இசைப் பாரம்பரியத்தின், பன்மைத்துவத்தின் மகத்தான தூண்களில் ஒருவர் உஸ்தாத் அப்துல் கரீம் கான். அவர் தன் இறுதி மூச்சின் சுருதியைத் தமிழ்நாட்டில்தான் கலக்கவிட்டிருக்கிறார். மேலை நாடுகளில் மாபெரும் இசைக் கலைஞர் இப்படி ஒரு ரயில் நிலையத்தில் உயிரிழந்திருந்தால் அந்த ரயில் நிலையத்தில் அந்த இசைக் கலைஞருக்கு நினைவுச் சின்னமோ கண்காட்சியோ வைத்திருப்பார்கள். ஆகவே, இந்தியாவின் பெருமைகளுள் ஒருவரான அப்துல் கரீம் கானுக்கு சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்திலோ அருகிலோ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அப்துல் கரீம் கான் பாடிய பாடல்:

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

இன்று அப்துல் கரீம் கான் பிறந்த 150-ம் ஆண்டு தொடக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x