

“அதிபர் பதவியில் உட்கார முடியாவிட்டாலும் ஆளும் அதிகாரத்தை விட்டுத்தர மாட்டேன்” - சூச்சி
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மியான்மர் நாட்டின் அதிபராகிறார். ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சியைச் சேர்ந்த யு டின் யாவ், மார்ச் 15-ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபருக்கு உதவியாக சிவிலியன் சார்பில் ஒரு துணை அதிபரும் ராணுவத்தின் சார்பில் ஒரு துணை அதிபரும் இருப்பார்கள். நாடாளுமன்றத்தின் கால் பகுதி இடங்களில் ராணுவத்தின் பிரதிநிதிகள் இருப்பார்கள். ராணுவத்தின் பார்வையில்தான் ஆட்சி நடைபெற வேண்டும். ஏனென்றால், பாதுகாப்பு (ராணுவம்), உள்துறை, எல்லைப்புற விவகாரங்கள் ஆகிய மூன்று துறைகளுக்கான அமைச்சர்களை ராணுவம்தான் நியமிக்கும்.
அரசியல் சாசனத் தடை
ஆங் சான் சூச்சியின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 77% இடம் கிடைத்திருக்கிறது. வெளிநாட்டுக் குடிமக்களுக்கு தாய், தந்தையராக இருப்பவர்கள் நாட்டின் உயர் பதவிக்கு வரக் கூடாது என்று மியான்மர் அரசியல் சாசனம் கூறுகிறது. ஆங் சான் சூச்சி பதவிக்கு வரக் கூடாது என்ற சூழ்ச்சியே இதற்குக் காரணம். காரணம், அவருடைய புதல்வர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்கள்.
அரசியல் சாசனத்தைத் திருத்தி அவர் பதவிக்கு வர வேண்டும் என்றால், 75%-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ராணுவத்தின் வசம் 25% நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது இது சாத்தியமே இல்லை.
தனக்கும் மகன்களுக்கும் தொடர்பு இல்லை என்று சூச்சி, உறவையே முறித்துக்கொள்ள வேண்டும் என்றுகூடச் சிலர் விபரீதமாக யோசனை தெரிவித்துள்ளனர். வீட்டுச் சிறையில் மியான்மரில் இருக்கிறீர்களா அல்லது மகன்களுடன் பிரிட்டனில் தங்கி தலைமறைவு அரசியல் வாழ்க்கை நடத்துகிறீர்களா என்று ராணுவம் கேட்டபோது, என்ன ஆனாலும் சரி, மியான்மரை விட்டுச் செல்ல மாட்டேன் என்று மறுத்துவிட்டவர் சூச்சி. அவருடைய மகன்களை மியான்மர் குடியுரிமையை மட்டும் கோரிப் பெறவைக்கலாம் என்பது மற்றொரு யோசனை. இருவரும் வெளிநாட்டில் வளர்ந்ததால் இதுவும் சாத்தியமில்லை.
பொருளாதார அறிஞர்
நான்காவது வழியைக்கூட சூச்சி பரிசீலித்துவந்தார். அதாவது, ராணுவத்துடன் சமரசம் பேசுவது, அரசியல் சாசனத்தின் இந்தப் பிரிவைச் செயல்படாமல் நிறுத்தி வைக்க ராணுவம் ஒப்புக்கொண்டால், ராணுவத்துடனான மோதல் போக்கைக் குறைத்துக்கொள்ளத் தயார் என்று சொல்லிப் பார்க்கலாம் என்று ஆதரவாளர்கள் கூறினர். ஆனால், அப்படியும் எதுவும் நடக்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் யு டின் யாவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மென்மையான குணம் கொண்ட டின் யாவ் பொருளாதார அறிஞர். அத்துடன் எழுத்தாளரும்கூட. ஆங் சான் சூச்சியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பல ஆண்டுகளாக நட்புடன் பழகிவருகிறார். டின் யாவும் அவருடைய மனைவியும் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்கள். அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தாலும், அரசியல் பதவி எதற்கும் அவர் ஆசைப்பட்டவர் அல்ல.
இந்தக் காரணங்களால்தான் அதிபர் பதவிக்கு அவரைத் தேர்வுசெய்திருக்கிறார் ஆங் சான் சூச்சி. “அதிபர் பதவியில் உட்கார முடியாவிட்டாலும் நாட்டை ஆளும் அதிகாரத்தை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்” என்று அறிவித்திருக்கிறார் சூச்சி. “(என்னால் நியமிக்கப்படும் அதிபருக்கு) அதிகாரம் ஏதும் இருக்காது” என்று 2015 நவம்பரில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இரண்டு அதிகார மையங்கள் இருந்தால், மியான்மரின் நிர்வாகம் சீர்குலையுமே என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் அச்சப்படத் தேவையில்லை என்றும் பதில் அளித்திருக்கிறார். “என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அதிபரிடம் கூறப்பட்டுவிடும்; அதன் பிறகு, அரசு நிர்வாகம் எப்படிச் சீர்கெடும்?” என்று பதிலுக்குக் கேட்டார் சூச்சி. புதிய அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகவோ, பிரதம மந்திரி என்றொரு புதிய பதவியை உருவாக்கி அந்தப் பதவியிலோ சூச்சி அமர்ந்து நிர்வாகத்தை வழிநடத்தக்கூடும் என்று பேசப்படுகிறது.
அதிபர் பதவியேற்கவிருப்பவர் மீது அவருக்கு முழு நம்பிக்கை இருந்தாலும், அவர் முன் உள்ள பிரச்சினைகள் சவால் நிறைந்தவை. கடந்த காலத்தைப் போலவே எதிர்காலத்திலும் அவர் பல சூழ்ச்சிகளையும் எதிர்ப்புகளையும் சமாளித்தாக வேண்டும். அவரைப் பலமுறை கைது செய்ததுடன் அவருடைய அரசியல் வளர்ச்சியை ஒருவிதப் பொருமலுடன் அனுமதித்த ராணுவம்தான் மியான்மரை இன்னமும் தன்னுடைய கட்டுக்குள் வைத்திருக்கிறது. அமெரிக்கா பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தன்னுடைய பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் மிந்த் ஸ்வீயைத் துணை அதிபராகத் திணித்திருக்கிறது ராணுவம்.
பொருளாதார ரீதியாகப் பலகாலமாகப் பின்தங்கிய நிலையில் இருக்கும் மியான்மரை, முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய மிகப் பெரிய சவால் சூச்சிக்குக் காத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கையின்படி மனிதவள ஆற்றலில் 2013-ல் பின்தங்கியுள்ள 186 ஆசிய நாடுகளில் மியான்மர் 149-வது இடத்தைப் பெற்றிருந்தது. அதனுடைய வன வளங்கள் பணப் பயன்களுக்காக வேகவேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. மத, இன வேறுபாடுகள் மக்களிடையே மோதல்களை வளர்த்துவருகின்றன. தொழில்துறை வளர்ச்சியும் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளும் மிகமிகக் குறைவாக இருக்கின்றன. மியான்மருக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்று விரும்பும் இந்தியா, இவற்றைக் கருத்தில்கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புதிய அரசு பொருளாதாரரீதியாக நாட்டை முன்னேற்ற இந்தியா உதவ வேண்டும்.
முன்னுதாரணங்கள்
அதிகாரப் பதவியில் ஒருவரை அமர்த்திவிட்டு, பின்னாலிருந்து அவர் மீது செல்வாக்கு செலுத்தப்போகும் முதல் தலைவர் சூச்சி அல்ல; ஏற்கெனவே தெற்காசிய நாடுகளில் உதாரணங்கள் இருக்கின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பொருளாதார அறிஞர் மன்மோகன் சிங், 10 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியப் பிரதமராக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, அவருக்கு வழிகாட்டும் தலைவராக செல்வாக்கு செலுத்தினார்.
பாகிஸ்தானில் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி, தான் சொல்வதைக் கேட்டு நடப்பதற்காக யூசுஃப் ரஸா கிலானியைப் பிரதமராக்கினார். ஆனால் அவர் அதிகாரிகள் நியமனத்தில் தன் விருப்பப்படி செயல்பட்டதால் அவருக்கும் அதிபருக்கும் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டன. அதே சமயம் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்தாரோ அது நடக்காமல் அவரும் அதிருப்திக்கு ஆளானார்.
இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடையிலும் சிறு சிறு மோதல்கள் வழக்கமாகிவிட்டன. பூடானில் மன்னரின் விருப்பத்துக்கு மாறாக பிரதமர் ஜிக்மே தின்லே, சீனத்துடன் நெருங்கிய உறவுக்கு முயன்றார். இத்தனைக்கும் அந்த மன்னர்தான் பூடானில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டு பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்களை வழங்கியிருந்தார்.
இதிலிருந்து ஒரு பாடத்தை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. ஏதும் அறியாத அப்பாவியைக்கூட அதிகாரமுள்ள ஒரு பதவியில் அமர்த்திவிட்டால் நாளடைவில், அதற்குண்டான விலையை, அமர்த்தியவர் தர நேர்ந்துவிடுகிறது. மியான்மரின் முடிசூடா ராணியான ஆங் சான் சூச்சி இந்தக் கோணத்தில் தனது அனுபவம் என்ன என்பதை நாட்டின் எதிர்காலம் என்ற வரலாற்றில் புதிய அத்தியாயமாகப் பதிவுசெய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழில்: சாரி,
© தி இந்து ஆங்கிலம்.