Published : 09 Nov 2021 03:08 am

Updated : 09 Nov 2021 06:41 am

 

Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 06:41 AM

நம்பிக்கை தரும் கரோனா மாத்திரைகள்

covid-tablets

கரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் தடுப்பூசிகளைப் பேராயுதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இரண்டு வகை மாத்திரைகள் புதிய ஆயுதங்களாக வந்திருப்பது கரோனா சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மெர்க் நிறுவனம், ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ‘EIDD 2801’ மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இது அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது.

தற்போது கரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர், டெக்சாமெத்தசோன், ‘ஒற்றைப் படியாக்க எதிரணு மருந்து’ (Monoclonal antibody) ஆகியவற்றின் வரிசையில் புதிதாக இந்த மாத்திரையும் சேர்ந்திருக்கிறது. ‘மோல்னுபிரவிர்’ (Molnupiravir) என்பது இதன் வணிகப் பெயர். பிரிட்டனில் இது ‘லேகேவ்ரியோ’ (Lagevrio) எனும் பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் கரோனாவுக்கு எதிராக வழங்கப்படும் வாய்வழி வைரஸ் மாத்திரை என்பது இதன் தனித்துவம்.

கரோனா தடுப்பூசிக்கு முதன்முதலில் அனுமதி அளித்த நாடு பிரிட்டன். ஆனாலும், அங்கு கரோனா பெருந்தொற்றுப் பரவல் இன்னமும் நீடிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அந்த நாட்டுக்கு இருக்கிறது. அதனால், இந்தப் புதிய மருந்துக்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்த வகையில் கரோனா தொற்றுப் பரவல் ஏறுமுகத்தில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளிடத்திலும் இது முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இந்தியாவில் இதைத் தயாரிக்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

மோல்னுபிரவிர் மாத்திரை கரோனா தொற்றைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்திவிடுவதால், தொற்றாளர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அவசியத்தைக் குறைப்பதிலும், அவர்களின் உயிரைக் காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூன்று கட்ட ஆய்வுகளின்போது, மிதமான மற்றும் நடுத்தர பாதிப்பு ஏற்பட்ட கரோனா தொற்றாளர்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உடற்பருமன், இதயநோய், நீரிழிவு போன்ற துணை நோய்களில் ஏதாவது ஒன்று காணப்பட்ட கரோனா தொற்றாளர்களிடமும் ஆய்வு செய்யப்பட்டதில், இந்த மாத்திரை தொற்றாளர்களின் இறப்பு விகிதத்தை 50% குறைத்திருக்கிறது. 29 நாட்கள் அவர்களைத் தொடர்ந்து கவனித்த அளவில் இந்த மாத்திரை வழங்கப்பட்டவர்களில் யாரும் மரணமடையவில்லை எனவும், பொய் மாத்திரை (Placebo) வழங்கப்பட்டவர்களில் 8 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் மோல்னுபிரவிர் மாத்திரையின் பாதுகாப்புத் தன்மையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத தொற்றாளர்களிடம் இது ஆய்வு செய்யப்பட்டதால், இதன் நம்பகத்தன்மையும் உறுதியாகியுள்ளது. இது கர்ப்பிணிகளிடம் ஆய்வு செய்யப்படவில்லை என்பது மட்டுமே குறை.

எப்படி வேலை செய்கிறது?

வழக்கத்தில், தொற்றாளரின் செல்களில் கரோனா வைரஸ் வேகவேகமாக நகலெடுத்துப் பெருகி வளரும் குணமுடையது. மோல்னுபிரவிர் மாத்திரை கரோனா வைரஸின் மரபணு வரிசையில் நகலெடுக்க உதவுகிற முக்கியமான நொதிகளை மாற்றியமைத்துப் பல்வேறு பிழைகளை உண்டாக்கிவிடுவதால், எப்போதும்போல் நகலெடுப்பதில் கரோனா வைரஸுக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதன் நகலெடுப்பு வேகம் குறைந்துவிடுகிறது. உடலில் வைரஸ் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இப்படி, கரோனா தொற்று ஆரம்பத்திலேயே அடங்கிவிடுகிறது.

கரோனா வைரஸிடம் இதுவரை காணப்பட்ட காமா, டெல்டா, டெல்டா பிளஸ், மியூ என எல்லா வகை வேற்றுருவங்களின் தொற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மோல்னுபிரவிர் மாத்திரைக்கு உள்ளது என்பது கூடுதல் நன்மை. உலக அளவில் 53 லட்சம் பேரை பலிவாங்கியிருக்கும் கரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவர இது ஓர் அருமருந்தாக அமையும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட, ஏதேனும் ஒரு துணைநோயுள்ள கரோனா தொற்றாளருக்கு அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களுக்குள் தொற்றை உறுதிசெய்து, இந்த மாத்திரையைக் கொடுத்துவிட வேண்டும். ஒரு வேளைக்கு 800 மி.கி. வீதம் தினமும் இரண்டு வேளைகளுக்கு மொத்தம் 5 நாட்களுக்கு இதை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் மேற்பார்வையில், வீட்டில் இருந்துகொண்டே இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பது மற்றொரு நன்மை.

பைசர் மாத்திரை

மெர்க் நிறுவனத்தைப்போலவே பைசர் நிறுவனமும் ‘PF-07321332/Ritonavir’ எனும் கரோனா மாத்திரையைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்றுக் கழகத்தின் (FDA) அனுமதிக்காக இந்த நிறுவனம் காத்திருக்கிறது. ‘பேக்ஸ்லோவிட்’ (Paxlovid) எனும் வணிகப் பெயரில் இது சந்தைக்கு வர இருக்கிறது; கரோனா தொற்றை ஆரம்பநிலையிலேயே தடுத்து, தொற்றாளருக்கு இறப்பு ஏற்படுவதை 89% தவிர்த்துவிடும் ஆற்றல் கொண்டது. இதைக் கர்ப்பிணிகளுக்கும் வழங்கலாம் என்பது கூடுதல் நன்மை.

இதுவும் கரோனா தொற்றின் அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டிய மாத்திரைதான். ஒரு வேளைக்கு 2 மாத்திரைகள் வீதம் தினமும் இரண்டு வேளைகளுக்கு மொத்தம் 5 நாட்களுக்கு எடுக்கப்பட வேண்டும். இது, கரோனா வைரஸ் நகலெடுக்கத் தேவையான ‘புரோட்டியேஸ்’ நொதியின் உற்பத்தியைத் தடுத்துவிடுவதால், தொற்றாளரிடம் இதன் எண்ணிக்கை கட்டுப்படுகிறது. தொற்று தீவிரமாவது மட்டுப்படுகிறது.

பக்கவிளைவுகள் அதிகம் இல்லாத இந்த இரண்டு வகை மாத்திரைகள் வழங்கப்படுவது நடைமுறைக்கு வரும்போது, தொற்றாளர்களுக்குச் சளிப் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதும், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டியதும், அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை பெறவேண்டியதும் முக்கியமாகின்றன. அதற்கு அரசுகளும் சமூகமும் தயாராக வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

அடுத்ததாக, தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கரோனா மாத்திரைகளின் பயன்பாடு அவசரமாகத் தேவைப்படுகிறது எனவும், தடுப்பூசிகள் மிகக் குறைவான அளவில் செலுத்தப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர நாடுகளில் கரோனா தொற்றாளர்களுக்கு இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தித் தொற்றைக் கட்டுப்படுத்தலாம் எனவும் வல்லுநர்கள் யோசனை கூறியுள்ளனர். ஆக மொத்தத்தில், தடுப்பூசியுடன் இந்த மாத்திரைகளும் பயனுக்கு வந்துவிட்டால், அடுத்தடுத்த கரோனா அலைகள் எத்தனை வந்தாலும், உயிராபத்து இல்லாமல் அவற்றை எதிர்கொள்ள முடியும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.

- கு. கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

கரோனா மாத்திரைகள்தடுப்பூசிகரோனா சிகிச்சைCovid tabletsEIDD 2801Lagevrio

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x