Published : 09 Nov 2021 03:08 am

Updated : 09 Nov 2021 06:44 am

 

Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 06:44 AM

ஜெய் பீம் சொல்வதென்ன?

jai-bhim-movie

இரா.முத்துநாகு

பழங்குடி இருளர் மக்களின் அவலத்தைச் சொன்ன ‘ஜெய் பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இக்கதைபோல் பல நூறு விளிம்புநிலைக் குழுக்கள் சமூகச் சட்டங்களாலும், அரசின் அலட்சியத்தாலும் அன்றாடம் பந்தாடப்படுவது நிதர்சனம். இம்மக்களின் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் ஒலித்திட முடியாத நிலையிலே இவர்களின் மக்கள்தொகை உள்ளது.

தமிழகத்தில் சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஆங்கிலோ-இந்தியர்களுக்கு வழங்கப்படும் சட்டமன்ற நியமனப் பிரதிநிதித்துவம்போல் இந்தக் குழுக்களுக்கும் கொடுத்திட சட்ட வழிவகை செய்திட வேண்டிய காலக் கட்டாயத்தை ‘ஜெய் பீம்’ திரைப்படம் வலியுறுத்துவதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பல்லாண்டு காலமாக எஸ்.சி./ எஸ்.டி. ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறார்களே’ என்ற பதில் போதுமானதாக இல்லை என்பதற்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் மூலம் நடக்கும் விவாதமே சாட்சி.

மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் பளியர், முதுவர், காடர், மலசர், இரவாளர், மலை மலைசர், காணி போன்ற சாதியினர் அரசின் கணக்குப்படி 25 ஆயிரம் பேர்தான். இவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்வதால் பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குக்கூட போட்டியிட முடியாத நிலை. இந்தச் சாதியினருக்கான ஒதுக்கீடுகூட நிரப்பப்படாமல் விடுபட்டதற்கான பதிவுகள் உள்ளன. கோத்தர், குறும்பர், இருளர், பனியர், வேட்டுவநாயகர், சேலம் மாவட்டத்தில் ஊராளி, சோளகர் போன்ற குழுக்கள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாகவும், இரண்டு பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்துத் தலைவர்களாகவும் மட்டுமே வந்துள்ளனர். அதுவும் இவர்கள் ஒரு இடத்தில் மொத்தமாக வாழ்வதால் கிடைத்தது. தரைப் பகுதியில் குறவர், நாவிதர், வண்ணார், பூப்பண்டாரம், வில்லியர் என்ற இருளர், காட்டுநாயக்கர், ஜோகி, தொம்பர், புதிரை வண்ணார் போன்றோர் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியை எந்தத் தலைமுறையிலும் பெற முடியாத நிலையில் அங்கொருவரும் இங்கொருவருமாக வாழ்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மலையாளி சாதியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இவர்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறார்கள். இதே போல் மீனவக் குழுக்களில் பட்டினவர், பரதவர் சாதியினர் பரவலாக உள்ளதால் இவர்களும் தொடர்ந்து சட்டமன்றத்தில் கால்பதித்துவருகிறார்கள். ஆனால், கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடற்கரையில் முக்குவர், கடையர் போன்ற மீனவர்கள் சொற்ப எண்ணிக்கையில் சிதறிக்கிடப்பதால் இவர்களுக்கான பிரதிநிதித்துவம் கனவில்கூடக் காண இயலாத ஒன்று. இதில் விதிவிலக்காக காமராசர் ஆட்சியில் முக்குவர் சமூகத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமன் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார்.

‘‘வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த காலத்தில் மீன்பிடித் தொழில் என்பது கருவாட்டுக்கு மட்டுமே. பவளம், சங்கு, பாசி, கடல் நுரை, சிப்பி போன்றவை சித்த மருத்துவத்தில் ரத்த அழுத்தம், சன்னி, விடாத காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்துகளாகப் பெரிய அளவில் பயன்பட்டன. சேங்கொட்டை மரம் கடல் பரப்பிலும் தீவுகளுக்குள்ளும் வளர்வதால் இதன் கொட்டைகளைச் சேகரித்து, மருத்துவத்துக்கும் சாயம் ஏற்றவும் பயன்படும் வகையில் விற்றுவந்தனர். இவற்றையெல்லாம் தடைசெய்ததால் கடல் என்பது மீன்பிடித்தலுக்கு மட்டுமே என்று மாறிவிட்டது. தமிழ்நாட்டுக் கடல் எல்லை சிக்கலைத் தீர்ப்பதற்கு அரசிடம் தீர்க்கமான செயல்திட்டம் இல்லை. எங்கள் கோரிக்கைகளைப் பேசும் சட்டமன்றப் பிரதிநிதிகள் மீன்கள் தொடர்பாக மட்டுமே பேசுகிறார்களே தவிர, கடல் வளம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து இதுநாள் வரையில் பிரதிநிதிகள் யாரும் பேசவில்லை’’ என்று மீனவர்கள் கொதிப்புடன் பேசுகிறார்கள்.

‘‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நாவிதர், புதிரை வண்ணார், சலவைத் தொழிலாளர்கள் போன்றோரைப் பொதுச் சமூகம் கீழ்நிலையில் வைத்தே பார்க்கிறது. இவர்களின் கோரிக்கை, தனி ஒதுக்கீடு அல்லது உள் ஒதுக்கீடுதான். நகரங்களில் அமைந்துள்ள உயர்தர அழகு நிலையங்களில் நாவிதர்களும் புதிரை வண்ணார்களுமே பெரும்பான்மையாகப் பணியில் உள்ளார்கள். ஆனால், அவற்றின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் முன்னேறிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இத்தொழில் மீது சுமத்தப்படும் சமூக இழிவைக் கடை உரிமையாளர் சுமப்பதில்லை. இது போலவே சலவைக் கடைகள். இவர்கள் மேல் சுமத்தப்பட்ட இழிநிலையைப் போக்குவதற்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து சென்ற பிரதிநிதிகள் குரல் எழுப்பவில்லை’’ என்ற இம்மக்களின் ஆதங்கம் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது.

“வன நில உரிமை அங்கீகாரச் சட்டம்-2006-ன்படி வனத்தைச் சார்ந்த மக்களுக்கு வழங்க வேண்டிய 10 ஏக்கர் நிலம், மேய்ச்சல் தரிசு, குடியிருப்பு, வனத்தினுள் விளையும் சிறு மகசூல்களை அனுபவிக்கும் உரிமை ஆகியவற்றை வரையறுத்துக் கொடுக்க வேண்டிய அரசு இன்றுவரை வழங்கவில்லை. ஆனால், இம்மக்களைக் காட்டை விட்டு வெளியேற்றும் முகாந்திரமாக வனத் துறை, காவல்துறையினர் ஏற்படுத்தும் நெருக்கடியால் காட்டுக்குள் வாழும் இம்மக்களின் வாழ்க்கை மிகுந்த போராட்டமாக மாறிவிட்டது. இவர்களின் மக்கள்தொகை நாளுக்கு நாள் குறைந்துவருவது இதற்குச் சான்று. இவர்களது வேதனையைக் வெளிப்படுத்தும் வகையில் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் குரல் இல்லை’’ என்பது பழங்குடி மக்களின் அழுகுரல்.

வியாபாரக் குழுக்களாக இருந்த குறவர் சமூகம் குற்றப்பரம்பரை சட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதால் அவர்களில் கணிசமானோர் பல மாவட்டங்களில் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்களாக உள்ளனர். விளிம்புநிலை மக்களின் உணர்வுகளையும் சமூகத் தேவைகளையும் அந்தந்தப் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் பேசுவதற்கு நியமன உறுப்பினர்களை நியமிக்கப் புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய காலத் தேவை இருப்பதை இந்த அரசு புரிந்துகொண்டு செயல்படும் என்று நம்புவோம்.

- இரா.முத்துநாகு, ‘சுளுந்தீ’ நாவலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: rmnagu@gmail.com

ஜெய் பீம்பழங்குடி இருளர்எஸ்.சி./ எஸ்.டி. ஒதுக்கீடுபளியர் முதுவர் காடர் மலசர் இரவாளர் மலை மலைசர் காணிJai Bhim Movieகுறவர் நாவிதர் வண்ணார் பூப்பண்டாரம் வில்லியர் என்ற இருளர் காட்டுநாயக்கர் ஜோகி தொம்பர் புதிரை வண்ணார்பட்டினவர் பரதவர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x