

எமர்ஜென்சிக்குப் பிறகு, தமிழக அரசியல் சூழல் அடியோடு மாறியிருந்தது. காமராஜர், ராஜாஜியின் மறைவுக்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸும் சுதந்திராவும் ஜனதாவில் இணைந்தன. அந்த இணைப்பை விரும்பாத பெரும்பாலானோர் இந்திரா காங்கிரஸில் இணைந்தனர். போதாக்குறைக்கு, எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவும் தமிழக அரசியல் களத்தின் தட்ப வெப்பத்தை மாற்றிக்கொண்டிருந்தது.
தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டிருந்தபோதும் முதலில் மக்களவைத் தேர்தல்தான் நடந்தது. அப்போது திமுக அணியில் இடம்பெற்ற ஜனதா 18 இடங்களில் போட்டியிட்டது. மாறாக, இந்திரா காங்கிரஸ் அதிமுக அணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்டது. எமர்ஜென்சி காலத்து அத்துமீறல்களை ஜனதா கூட்டணி வலியுறுத்த, கருணாநிதிக்கு எதிரான சர்க்காரியா கமிஷன் விவகாரத்தை முன்வைத்தது இந்திரா காங்கிரஸ் கூட்டணி.
இத்தேர்தலில் இந்திய அளவில் வெற்றிபெற்ற ஜனதா கூட்டணி, தமிழகத்தில் தோல்வியடைந்தது. ஜனதாவுக்கு 3 இடங்களும் திமுகவுக்கு ஓரிடமும் கிடைத்தன. எதிரணியிலோ அதிமுக 18 இடங்களையும், இந்திரா காங்கிரஸ் 14 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.
மக்களவைத் தேர்தல் முடிந்த இரு மாதங்களில் தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. தேர்தல் தோல்வியைச் சொல்லி திமுகவிடமிருந்து விலகியது ஜனதா. வெற்றிகொடுத்த தெம்பில் இந்திரா காங்கிரஸை விலக்க விரும்பியது அதிமுக. விளைவு, ஜனதா தனித்துப் போட்டியிட்டது. இந்திரா காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி அமைத்தது.
நான்குமுனைப் போட்டியில் 129 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது அதிமுக. எம்.ஜி.ஆர். முதல்வரானார். அதிமுக, திமுக அணிகளில் இடம்பெறாத இந்திரா காங்கிரஸ் 27 இடங்களை வென்றது. தனித்துப் போட்டியிட்ட ஜனதா 10 இடங்களைப் பிடித்தது.
பிறகு, டெல்லியில் நடந்த அரசியல் காட்சி மாற்றங்களால் மக்களவை கலைக்கப்பட்டு, 1980 ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த காலக் கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு, திமுகவும் இந்திரா காங்கிரஸும் கைகுலுக்கின. அதன் எதிரொலியாக, ஜனதாவையும் இடதுசாரிகளையும் தன்பக்கம் சேர்த்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.
திமுக அணியில் இந்திரா காங்கிரஸுக்கு 23 தொகுதி களைக் கொடுத்தார் கருணாநிதி. மாறாக, ஜனதாவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். நிலையான அரசு என்ற கோஷத்தை முன்வைத்தது இந்திரா காங்கிரஸ் கூட்டணி. அதிமுக அரசுக்குச் சாதகமாக உள்ள ஜனதா அரசு மத்தியில் அமைவதே தமிழகத்துக்கு நல்லது என்றார் எம்.ஜி.ஆர்.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது திமுக அணியில் இடம்பெற்ற இந்திரா காங்கிரஸுக்கு 20 இடங்கள் கிடைத்தன. அதிமுக அணியில் இடம்பெற்ற ஜனதாவுக்குத் தோல்வியே மிஞ்சியது. தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். வெற்றியின் உற்சாகத்தில் அவர் எடுத்த முடிவு தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸை வெகுவாகப் பலவீனப்படுத்தியது!
- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
(கோஷம் போடுவோம்)