Last Updated : 08 Nov, 2021 01:09 AM

 

Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

பருவநிலை மாற்ற மாநாடு: வாய் பிளக்க வைத்த பேச்சு!

“வெற்று வார்த்தைகளால் என்னுடைய குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். ஆனாலும், இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறீர்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு?” – நியூயார்க்கில் 2019-ல் நடைபெற்ற ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டில் இப்படி உணர்ச்சி பொங்கப் பேசியிருந்தார் ஸ்வீடன் பருவநிலைச் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்.

இதோ ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் தற்போது நடைபெற்றுவரும் 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் தனது பேச்சால் உலகத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி வினிஷா. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான எர்த்ஷாட் விருதின் இறுதிப்பட்டியல், ஸ்வீடன் அறக்கட்டளையின் குழந்தைகளுக்கான பருவநிலை விருது ஆகிய பெருமைகளைப் பெற்றவர் இவர். சூரிய ஆற்றல் மூலம் இஸ்திரி இயந்திரத்தை இயக்கும் வழிமுறையைக் கண்டறிந்ததற்காக அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளின் தொடர்ச்சியாகத் தூய்மைத் தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு சார்ந்து நவம்பர் 2-ம் தேதி கிளாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார். “நான் இந்தியாவின் மகள் மட்டுல்ல, இந்தப் பூவுலகின் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன். புதைபடிவ எரிபொருள், புகை, மாசுபாட்டை அடிப்படையாகக் கொண்ட பொருளியலை விட்டொழியுங்கள். உலகத் தலைவர்கள் அளிக்கும் வெற்று வாக்குறுதிகள், பலன் தராத பேச்சுகளைக் கண்டு இளைய தலைமுறை கோபமும் விரக்தியும் அடைந்துள்ளது. வாழத் தகுந்த ஓர் உலகில் நாம் வாழ வேண்டுமானால், வாக்குறுதிகளைவிட செயல்பாடே இப்போது அவசியமாகிறது” என்கிற அவருடைய பேச்சுக்கு அரங்கத்தினர் எழுந்து நின்று வரவேற்பு தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அரங்கில் இருந்தனர்.

அறிவியல் சொல்வதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுள்ள அடுத்த தலைமுறை மனித குலம், உயிரினங்களின் ஒரே வீடான பூவுலகின் எதிர்காலத்தைக் காப்பாற்ற விரைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் புரிந்துகொண்டுள்ளது. ஆனால், பொருளியல் தொலைநோக்கற்ற உலக முதலாளிகளும் அரசியல் உறுதிப்பாடற்ற தலைவர்களும் இனிமேலும் பேசிக்கொண்டு மட்டுமே இருப்பது எந்தப் பலனையும் தந்துவிடாது என்பதைப் புரிந்துகொண்டால் சரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x