Published : 02 Nov 2021 03:08 AM
Last Updated : 02 Nov 2021 03:08 AM

21 ஆண்டுகள் காத்திருந்த தோட்டா

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் திருப்புமுனைத் தருணங்களில் ஒன்றான ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ச்சியை, ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் உருவான ‘காந்தி’ திரைப்படத்தில் ஒரு சம்பவமாகப் பார்த்துத் திடுக்கிட்டு நாம் சினிமாவில் கடந்திருக்கிறோம். ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்படும் ஒரு பஞ்சாபிய வாலிபன், அந்தப் படுகொலைகள் நடந்தபோது, பஞ்சாபின் துணைநிலை ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ’டயரைப் பழிதீர்ப்பதற்காக, 21 ஆண்டுகள் காத்திருந்த கதையை உண்மைக்கு நெருக்கமாக ‘சர்தார் உதம்’ திரைப்படம் நமக்குச் சொல்கிறது. அப்படிச் சொல்லும்போது, ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் இன்றைக்கும் நம்மைக் கொதிக்கச் செய்யும் கொடுங்கோன்மையாக மாறிவிடுகிறது. காலத்துக்கும் வரலாற்றுக்கும் கிட்டத்தட்ட நேர்மையாக உள்ளடக்கம், அழகியல், தொழில்நுட்பம், இசை என சகல பரிமாணங்களிலும் ஒரு நல்ல வணிக இந்தித் திரைப்படத்தின் வரையறைகளையும் சுஜித் சர்க்கார் இயக்கிய ‘சர்தார் உதம்’ விஸ்தரித்துள்ளது.

‘சர்தார் உதம்’ திரைப்படத்தை ஒரு நட்பின் கதை, ஒரு புரட்சியின் கதை, மானுடத்தின் மேல் ஒட்டுமொத்த நேசத்தையும் விரிக்க முயன்ற ஒரு இளைஞனின் கதை என்று சொல்லலாம். பகத்சிங் நடத்திய இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்னும் மார்க்சிய அமைப்பில் பகத் சிங்கை விட வயதில் மூத்தவராகவும் பகத் சிங்கின் கருத்துகளாலும் ஆளுமையாலும் ஈர்க்கப்பட்ட தோழருமான உதம் சிங், ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்கு உத்தரவிட்ட ஜெனரல் டயருக்குப் பக்கபலமாக இருந்தது மைக்கேல் ஓ’டயர்தான். ஓ’டயர் ஓய்வுபெற்ற பிறகு, லண்டனில் அவரது முதுமைக் காலத்தில், 21 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர், உதம் சிங்கால் கொல்லப்பட்டார். நிஜ வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், உதம் சிங்கின் வாழ்க்கையில் அதிகம் நிகழ்ச்சிகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ‘சர்தார் உதம்’ திரைப்படத்தில் உதம் சிங்கின் காத்திருத்தலையும் அலைச்சலையும் மன அவசங்களையும் லட்சிய வேட்கையையும் நிலைகுலைவுகளையும் ஆழமாகச் சித்தரித்திருப்பதன் மூலம் சுவாரசியமான ஒரு திரைப்படமாக ஆக்கியுள்ளார் சுஜித்.

புரட்சியும் தீவிரவாதமும் எங்கே வேறுபடுகிறது என்பதை பகத் சிங் தனது தோழர், தோழிகளுடன் அச்சுக்கூடம் ஒன்றில் பேசுவதிலிருந்து உதம் சிங்கின் ஆளுமை வடிவமைக்கப்படுவதைக் காண்பிக்கிறார்கள். புரட்சியாளர்கள் இறுக்கமானவர்கள் என்ற வழக்கமான சித்திரத்தைத் தாண்டி காதல், நட்பு, ருசி என அந்த பஞ்சாபிய இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையைச் சுவாரசியமாகக் காண்பிக்கிறார்கள்.

மைக்கேல் ஓ’டயரைப் பழிதீர்க்கும் ஒற்றை இலக்குடன் இந்தியாவிலிருந்து தொடங்கி ஆப்கன் வழியாக ரஷ்யாவுக்குச் சென்று, லண்டனில் இறங்கி, பாதகமான சமயங்களில் மீண்டும் ரஷ்யாவில் பதுங்கி அலைக்கழிகிறார் உதம் சிங். ஓ’டயரைப் பழிதீர்க்கும் சந்தர்ப்பம் தனிப்பட்ட வகையில் நிறைய இடங்களில் உதம் சிங்குக்குக் கிடைக்கிறது. தான் செய்யும் கொலை, இந்தியர்கள் கொடுக்கும் எதிர்ப்புக் குரலின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் ஓ’டயரைக் கொல்கிறார் உதம். உலகப் போர் கெடுபிடிகள் தொடங்குகின்றன. சர்ச்சில் கதாபாத்திரமாக வருகிறார். உதம் போன்ற புரட்சியாளர்களைப் பற்றிப் பேசும்போது, வெறும் புகழஞ்சலியாகவோ, நாட்டுப்பற்றுக் கோஷத்துக்கான திரைப்படமாகவோ ஆவதைக் கவனமாக இயக்குநர் தவிர்த்துள்ளார். பஞ்சாபுக்கும் லண்டனுக்கும் முன்னும் பின்னுமாகக் கதை சொல்லப்படுகிறது. ஓ’டயரை அந்தரங்கமாகச் சந்திக்கும் தருணங்களில், ஏன் உதம் அவரைக் கொலை செய்யவில்லை என்பது பார்வையாளருக்கு முதலில் குழப்பமாகவே இருக்கிறது. பின்னரே உதமின் திட்டம் என்னவென்று நமக்குத் தெளிவாகிறது.

ஜாலியன்வாலா பாக் என்ற ஒற்றைச் சம்பவத்தின் பின்னணியில் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையின் தீவிரம் எவ்வாறு இருந்தது, அந்தக் கொடுங்கோன்மை எந்தவிதமான மேட்டிமைத்தன்மையின் மீது செயல்பட்டது என்பதை சுஜித் சர்க்கார் காட்டிவிடுகிறார். மைக்கேல் ஓ’டயருக்கு இந்தியர்கள் மேல் தனிப்பட்ட வெறுப்பு இல்லை. ஆனால், இந்தியர்களெல்லாம் அடக்கி ஒடுக்கிச் சீர்திருத்த வேண்டிய காட்டுமிராண்டிகள் என்றும், அது வெள்ளை மனிதர்களின் சுமை என்றும் அவர் உண்மையாகவே நம்பியிருக்கிறார்.

ஜாலியன்வாலா பாக் சம்பவம் நடந்த அந்த நாளையும் இரவையும் அந்தக் களத்திலேயே நின்று சித்தரித்ததன் மூலம் மிகப் பெரிய கலை வரலாற்று ஆவணமாக இந்தத் திரைப்படம் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் வலுவான இதயம் படைத்தவர்களையும் உலுக்கிவிடும் ரணகளமான காட்சிகள் அவை. மரணமும் வாழ்வுக்கான ஏக்கமும் மோதும் குரூர நாடகத்தை ஓவியமாகவும் இசைக்கோலமாகவும் நம் நினைவுகளில் எப்போதும் நிற்கச் செய்திருக்கிறார் சர்க்கார். காதலியைத் தேடித் திடலுக்கு வரும் நாயகன், ஒட்டுமொத்தமாக அங்கே இந்தியர்கள் அனுபவித்த வேதனைகளையும், அந்த இரவில் சடலங்களையும் காயம்பட்டவர்களையும் சுமந்து சுமந்து உருவாகும் ஒரு தியாகியின் தருணத்தைப் பார்க்கிறோம். அங்கேதான் ஓ’டயரைக் கொல்லும் தோட்டா பிறக்கிறது.

உதம் சிங்காக நடித்திருக்கும் விக்கி கௌசலின் மகுடத்தில் மேலும் ஒரு ஆபரணம் இந்தத் திரைப்படம். கண்களின் தீவிரம், மௌனம் வழியாக அவர் உரையாடுகிறார். மரண தண்டனைத் தறுவாயிலும் இனிப்பு லட்டின் மேல் அவருக்கு இருக்கும் ஈர்ப்பைக் குழந்தைத்தனத்தோடு வெளிப்படுத்துகிறார். காதலன், சிறுவன், புரட்சியாளன் என்று பல்வேறு பரிமாணங்களைக் காட்டுவதற்கான வாய்ப்பு இது. தனது இளமையை அர்த்தபூர்வமான பரிசாகக் கடவுளுக்கு அளிக்க ஆசைப்பட்ட உதமின் புரட்சிகரப் பயணத்தை, பஞ்சாபிய கிராமத்தின் வயலிலிருந்து பெருநகர் லண்டன் வரை இசையமைப்பாளர் சந்தனு மொய்த்ரா தொடர்கிறார். படத்தின் இறுதியாக ஒலிக்கும் தந்தியிசை ஒட்டுமொத்தப் படத்தின் கனத்தையும் இறக்குவது. அவிக் முகோபாத்யாயவின் ஒளிப்பதிவு, இந்தியாவில் ஒரு சர்வதேச வரலாற்றுச் சினிமா சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது. வேறு வேறு கலாச்சாரங்கள், அரசியல்கள், மனநிலைகளை வெளிப்படுத்தும் சூழல், வசனங்களை உருவாக்கியதில் திரைக்கதை எழுத்தாளர்கள் ரிதேஷ் ஷா, சுபேந்து பட்டாச்சார்யா குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

ஒரு கொடுங்கோன்மை அரசுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஒரு பஞ்சாபியக் கிராமத்திலிருந்து கிளம்பி வயல்கள் வழியாகப் போகும் ஒரு இளைஞனின் கதை, இன்றைய இந்தியச் சூழலில் வேறு ஒரு அர்த்தத்தைத் தருவதாக இருக்கிறது. சுயநலத்தைத் துளிகூடக் கருதாமல், எத்தனை போராட்டங்களைத் தாண்டி, எந்தெந்த முனைகளிலிருந்து, இந்த விடுதலை நமக்குக் கிடைத்திருக்கிறது என்ற உணர்வை உதம் சிங் படும் பாடுகள் தருகின்றன.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x