Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கை: உண்மை வரலாறு

‘இந்து தமிழ்’ நாளிதழில் 22.10.21 அன்று வெளியான ம.வெங்கடேசனின் ‘பச்சையப்பன் கல்லூரியில் பட்டியலினத்தோர் சேர்க்கப்பட்டது எப்படி?’ கட்டுரையை வாசித்தேன். ‘நீதிக்கட்சி ஆதிதிராவிட மக்களுக்காக எதுவும் செய்யவில்லை’ என்பதாக உருவாக்கப்படும் அவதூறுகள், கட்டுக்கதைகளின் ஒரு பகுதிதான் இது!

பச்சையப்பன் கல்லூரிப் பிரச்சினை பற்றி ரெட்டைமலை சீனிவாசன் 1893-ல் குறிப்பிடுகிறார். 1906-ல் அயோத்திதாசரின் ‘தமிழன்’ ஏட்டில் ஒரு குறிப்பு இருக்கிறது. 1917-ல் பிட்டி.தியாகராயர், தான் அறக்கட்டளையில் தலைவராக இருந்தபோதே பச்சையப்பன் கல்லூரியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை மறுக்கப்பட்டது பற்றிப் பேசியிருக்கிறார். இதற்காக எம்.சி.ராஜா குரல் கொடுத்திருக்கிறார். 1921-ல் சட்டசபையிலேயே இப்பிரச்சினை பற்றி நீதிக்கட்சியின் ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனாரும் முகமது உஸ்மான்சாகிபும் பேசியிருக்கிறார்கள். இப்படிப் பல்வேறு காலகட்டங்களிலும் பேசப்பட்டுவந்த பிரச்சினைதான், 1927-ல் வழக்காக வந்து மீண்டும் கவனம் பெறுகிறது.

பச்சையப்பன் கல்லூரியில் மட்டுமில்லை; பெரும்பாலான இடங்களிலும் இதுதான் நிலை. ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருந்ததால்தான், இரட்டை ஆட்சி முறையில் இருந்த குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்டு, பள்ளிக் கல்வி தொடங்கி, கல்லூரிக் கல்வி வரை அனைத்து மக்களுக்கான உரிமைக்காகப் பல ஆணைகளை, உதவிகளை நீதிக்கட்சி அரசு செய்யத் தொடங்கியிருந்தது.

நான்காம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரை படித்த ஆதிதிராவிட மாணவர்களுக்கு, மாதத்துக்கு இரண்டு ரூபாய் முதல் ஏழு ரூபாய் (ஒரு பவுன் 13 ரூபாயாக இருந்த காலகட்டத்தில்) கல்வி உதவித்தொகை.

இலவச நண்பகல் உணவு.

வணிகக் கல்வி படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தைத் திருப்பியளித்தது.

மருத்துவக் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.

பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர்களுக்கென்று தனி வகுப்புகள் அமைக்காமல், எல்லா வகுப்புகளையும் ஒன்றுசேர்க்க வேண்டும் என்பதற்கான ஆணை.

ஆதிதிராவிட மாணவர்களை அதிகம் சேர்க்கும் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி உதவி; சேர்க்காத பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட மாட்டாது என்ற ஆணை.

கல்லூரிகளில் அனைத்து வகுப்பாரும் சேர்க்கப் படுவதற்கான மாணவர் சேர்ப்புக் குழுக்கள் அமைப்பு.

இப்படி, ஒவ்வொரு கட்டமாக ஆதிதிராவிடர்களுக்கான தடைகளெல்லாம் தகர்க்கப்பட்டுவந்தன நீதிக்கட்சியால்!

பெரியாரின் தாக்கம் தந்த மாற்றம்

காங்கிரஸில் இருந்தபோதும், வெளியேறிய பிறகும் இத்தகைய சாதி-தீண்டாமை ஒழிப்புக்காகவும், சமூக நீதிக்காகவும்தான் பெரியார் போராடினார்; குரல்கொடுத்தார். 

‘‘பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டப்படாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்து சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ முன்னேறவே இல்லை. சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமேயானால், இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும், பிராமணக் கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா?’’ என்று கேட்டவர் பெரியார். (குடிஅரசு 8.11.1925) இந்துக்களாகக் கருதப்பட்டு, ஆதிதிராவிடர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்பது மட்டும் பிரச்சினையில்லை. இந்துக்கள் அல்லாதோர் என்ற வகையில், இஸ்லாமியருக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடம் மறுக்கப்பட்டுவந்தது. அனைவருக்குமான பிரச்சினையாகத்தான் அதை நீதிக்கட்சி அணுகியது.

நீதிக்கட்சியின் கடுமையான தீர்மானம்

1927 அக்டோபர் 22, 23 ஆகிய இரு நாட்கள் பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான நீதிக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியார் எழுச்சியுரை ஆற்றினார். அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரான சுரேந்திரநாத் ஆரியா கொண்டுவந்த முக்கியமான தீர்மானம் எது தெரியுமா?

‘‘பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கல்லூரியின் அறங்காவலர்களுக்கு வலியுறுத்தி இந்த மாநாடு கூறுகிறது.

…இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்றுச் செயல்படத் தவறினால், அக்கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது” என்ற கடுமையான எச்சரிக்கையுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலை பச்சையப்பன் கல்லூரியில் மட்டும் இல்லை என்பதை, இதே மாநாட்டில் ஆர்.வி.சொக்கலிங்கம் என்பவர் முன்மொழிந்த தீர்மானம் எடுத்துக் காட்டுகிறது. கல்லூரி சேர்க்கைக் குழுக்களையும் தாண்டி, தனித்துவமான விதிமுறைகளைக் காட்டி பச்சையப்பன் அறக்கட்டளையில் இந்துக்கள் அல்லாதோர் தவிர்க்கப்பட்டுவந்த நிலையில், ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகளுக்கு நிதி உதவி ரத்து என்ற ஆணையை (கல்வி.87, 16.1.1923) கல்லூரிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதைத்தான் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

என்.சிவராஜின் வரலாற்றில்…

1927-ல் நடைபெற்ற வழக்கில், அறங்காவலர் குழுவின் முடிவு சாதகமாக இல்லாத சூழலில், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிறகு, நீதிக்கட்சி ஆதரவோடு சட்டமன்றத்தில் இடம்பெற்றவரான என்.சிவராஜ், அவரது மாமனார் வி.ஜி.வாசுதேவப் பிள்ளை ஆகியோரின் முயற்சியாலும், நீதிக்கட்சியின் கோபதி நாராயணசுவாமி செட்டி அவர்களின் தலையீட்டாலும் 1928-ல் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், ம.வெங்கடேசனோ பிரச்சினை முடியும் வரை நீதிக்கட்சியும், பெரியாரும் இது பற்றி எதுவும் பேசவே இல்லை என்று உண்மைக்கு மாறான கருத்தை முன்வைக்கிறார்.

பனகல் அரசரின் ஆலோசனையிலேயே சுப்பராயன் செயல்படுகிறார் என்று கருதித்தானே, சைமன் கமிஷனை சாக்காக வைத்து சுயராஜ்ஜியக் கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டது; அதை திராவிடர் ஆதரவு ஆட்சி என்று குறிப்பிட்டதில் என்ன தவறு?

- கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x