Last Updated : 28 Oct, 2021 03:06 AM

 

Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

பருவநிலை மாற்றங்களும் ஆரோக்கியக் கேடுகளும்

அக்டோபர் 31-ல் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ‘ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய உறுப்பு நாடுகளின் 26-வது மாநாடு’ (COP26) நடைபெற இருக்கும் சூழலில், உலக ஊடகங்களில் புவி வெப்பமாதல் தொடர்பிலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகளும் சூடுபிடித்துள்ளன. 1995 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில், கார்பன் உமிழ்வைக் குறைத்து புவி வெப்பமாதலைத் தடுக்கவும், பருவநிலை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

வருடா வருடம் புவிவெப்பம் அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகும்; கடல் மட்டம் உயரும்; நகரங்கள் மூழ்கும்; பேரிடர் பேரழிவு ஏற்படும் எனப் பூமிப் பந்துக்குப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

1880-1900 ஆண்டுகளில் நிலவிய சராசரி உலக வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ். இப்போது அது 15 டிகிரி செல்சியஸாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால், 2100-ல் இன்றைய வெப்பநிலையிலிருந்து 3 – 5 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும், இந்த வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரிக்குக் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசுக்குழு (ஐ.பி.பி.சி) பரிந்துரைக்கிறது.

கார்பன் டையாக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன் போன்ற பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது பூமி சூடாகிறது. இன்றைய மக்கள்தொகைப் பெருக்கம், நவீனத் தொழில்முறைகள், நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிசக்தி வாகனங்கள், அடர்வன அழிப்புகள், நவீன வாழ்க்கை முறைகள் எனப் பலவும் பசுங்குடில் வாயுக்களின் அளவற்ற வெளியீட்டுக்குக் காரணமாகின்றன. இவற்றில் கார்பன் டையாக்ஸைடுதான் வளிமண்டலத்தில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம், நீங்கள் அரை மணி நேரம் நெட்ஃபிளிக்ஸ் வீடியோ பார்த்தால், 1.6 கிலோ கார்பன் டையாக்ஸைடு வெளியேறி, வளிமண்டலத்துக்குச் செல்கிறது. அடுத்த 6 ஆண்டுகளில் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இப்படிப் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் வெப்பமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது அது பூமியில் வாழும் உயிர்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, காற்று, குடிநீர், உணவு, வசிப்பிடம் என நம் வாழ்வாதாரங்களில் அது கைவைக்கிறது. அப்போது ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகிறது; விலங்கினங்கள் புலம்பெயர்வதும் அழிவின் பாதைக்குச் செல்வதும் நிகழ்கிறது. உணவுச் சுழற்சி சிதைகிறது.

ஆஸ்துமா அதிகரிக்கும்!

பருவநிலை மாற்றத்தால் வெயில், குளிர் இரண்டுமே தீவிரமாகி, தட்பவெப்பம் தொடர்பான நோய்களை மட்டுமல்லாமல் ரத்தக்குழாய்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, இதய நோய்களையும் சுவாச நோய்களையும்கூட பல மடங்கு அதிகரித்துவிடுகின்றன. 2003-ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்பத்தால் 70,000 பேர் வழக்கத்தைவிட அதிகமாக இறந்துள்ளதை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். அதிக வெப்பமுள்ள வளிமண்டலத்தில் மாசுக்களும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் ஆஸ்துமா, சுவாசத்தடை உள்ளிட்ட பிரச்சினைகள் இரட்டிப்பாகும். அப்போது உலகில் 30 கோடி மக்களுக்கு ஆஸ்துமா புதிதாக உண்டாகும் என்கிறது புள்ளிவிவரம். பருவநிலை மாற்றத்தால் பல இடங்களில் மழையே பொழியாது அல்லது கடுமையாக மழை பொழியும். சமீபத்தில் கேரளத்திலும் உத்தராகண்டிலும் பொழிந்த கடுமையான மழையை இங்கு நினைவுகூரலாம். இதன் காரணமாகப் பொதுச் சுகாதாரம் சீர்கெட்டு பாதுகாப்பான குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வரும். வாந்தி, வயிற்றுப்போக்குப் பிரச்சினைகள் தலைதூக்கும்.

உலகில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் கடலிலிருந்து 60 கி.மீ. தொலைவுக்குள்ளேயே வசிக்கின்றனர். கடலின் மட்டம் அதிகரிக்கும்போது அவர்கள் நகரங்களுக்குள் நகருவார்கள். அங்கு மக்கள் நெருக்கம் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளும் சுகாதாரமும் குறைந்துபோகும். அப்போது டைபாய்டு, காசநோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட தொற்றுநோய்கள் அதிகரிக்கும். புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு வரும். அப்போது உணவுத் தானியங்களின் உற்பத்தி குறைந்து, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு மனித இனத்தைத் தாக்கும். மனித உழைப்பு குறைந்து நாட்டின் உற்பத்தி குறையும்.

பதற வைக்கும் டெங்கு

பருவநிலை மாற்றத்தால் பெருவெள்ளமும் புயல், சூறாவளிப் பேரிடர்களும் ஏற்படும்போது தெருக்களில் தண்ணீர் தேங்கும். அதனால் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இன்னும் அதிகமாகப் பரவும். இந்தப் பாதிப்பை இப்போதே நாம் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம். தற்போது நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவின் ஆயுட்காலம் 20-லிருந்து 40 நாட்களாக அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று.

புவிவெப்பம் காரணமாக வளிமண்டலத்தில் ஓசோன் ‘குடை’ சிதைந்துவிடுவதால், அதன் வழியாக சூரியனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவி நேரடியாக நம்மைத் தாக்கும்போது சருமப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. புவிவெப்பத் தாக்குதல்கள் கர்ப்பிணிகளையும் விட்டுவைப்பதில்லை. பிறவிக்குறை நோய்களுடனும் குறைப் பிரசவங்களுடனும் குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கலாம் என்பதால் நம் சந்ததிகளின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கின்றனர் சூழலியலர்கள்.

நம்மாலும் உதவ முடியும்!

பசுங்குடில் வாயுக்களை மிகுதியாக வெளிவிடும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் கோடிக்கணக்கான டாலர்கள் நிதியுதவி அளித்தால் மட்டுமே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த வாயுக்களைக் குறைப்பது சாத்தியப்படும். அதேவேளையில், இந்த விஷயத்தில் நாட்டுக்கு நம்மாலும் உதவ முடியும். எப்படி? அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லலாம். சைக்கிளில் செல்லலாம். இயன்றவரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். புதைபடிவ எரிபொருள் சார்ந்த வாகனப் போக்குவரத்தைக் குறைக்கலாம். மின்வாகனங்களுக்கு மாறலாம். இறைச்சி உணவைக் குறைக்கலாம். உணவும் தண்ணீரும் வீணாகாமல் பார்த்துக்கொள்ளலாம். வீடுகளில் மரம் வளர்க்கலாம். தோட்டம் போடலாம். வனவளர்ச்சிக்கு உதவலாம். மின்விளக்கு, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், போன்றவற்றில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம். மின்னணு சாதனங்கள், ஞெகிழிப் பயன்பாடு அதிகம் வேண்டாம். இப்படிச் சிறு சிறு விஷயங்களில் அக்கறை செலுத்தினாலே வியத்தகு பலன்களைக் காணலாம். அந்தப் பலன்கள் நமக்கு மட்டுமல்ல; நம் சந்ததிக்குமானது என்பதால் மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x