Last Updated : 24 Oct, 2021 03:06 AM

 

Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

முன்னுதாரண காந்தியர் திருமலை!

பல இளைஞர்களைக் காந்திய இயக்கத்துக்கு அழைத்துவந்த காந்திய ஆளுமை T.D. திருமலையின் நூற்றாண்டு இது. எளிமையாக, அதேசமயம் உணர்வோடு காந்தியைப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டுசென்றதில் முக்கியப் பங்கு வகித்தவர் திருமலை.

ஜே.கிருஷ்ணமூர்த்தியும், டி.கே.சி.யும், பேரா. அ.சீ.ரா.வும், ஜஸ்டிஸ் மகராஜனும் திருமலைக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி காந்தியை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவினார்கள். ஆகவேதான், அவருடைய சிந்தனையும் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருந்தன. தன் காந்தியப் பணிகளோடு இலக்கியத்தையும் இணைத்துக்கொண்டார். அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் 'மல்லிகை' எனும் இலக்கிய அமைப்பை மதுரையில் இருக்கும்போது ஏற்படுத்தி, காந்திய இலக்கியம் வளரவும், இலக்கியத்தில் காந்தியச் சிந்தனைகளைக் கொண்டுவரவும் திருமலை முயற்சி செய்தார். ஆகவே, இலக்கியத் தளத்திலும் காந்திய நண்பர்களின் வட்டாரத்திலும் திருமலைக்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தது.

காந்தி அமைதி நிறுவனத்தில் பெரும் தலைவர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சீனிவாச அய்யங்கார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இராமகிருஷ்ணன், காந்தியத் தொகுப்பு நூல்களின் ஆசிரியர் பேராசிரியர் கே.சுவாமிநாதன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி அவர்கள் எல்லாரும் காந்தி அமைதி நிறுவனத்தில் உறுப்பினர்களாக ஆனதற்குக் காரணம், திருமலையின் ஈடுபாடும் அவருக்கு காந்தியின் மேல் இருந்த பக்தியும்தான்.

அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களைப் பார்த்தால், ஒவ்வொன்றும் பல அடைமொழிகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால், திருமலை எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்துக்கு 'காந்தி' என்று மட்டும் தலைப்பிட்டார். ஏனெனில், “உரிச்சொல், பெயர்ச்சொல்லின் விரோதி” என்பார் அவருடைய பேராசிரியர் அ.சீனிவாசராகவன். ஆகவே, திருமலை இவ்வாறு தலைப்பிட்டார். அவர் காந்தியைப் பார்க்கும் பார்வையில் எப்போதுமே ஒரு வித்தியாசமான அணுகுமுறை இருக்கும்.

15 வயது இளைஞராக இருந்தபோதே காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர இயக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை அவருக்கு வளர்ந்தது. அந்த நேரத்தில் திருநெல்வேலிக்கு நேரு வந்தபோது, அவருடைய பேச்சைக் கேட்கும் வாய்ப்பு திருமலைக்குக் கிடைத்தது. அதையடுத்து, காந்தி குல்லாவோடு சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் திருமலை. காந்தியின் செயல்திட்டங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு அந்த இளைய வயதிலும் உற்சாகத்துடன் பணியாற்றிக்கொண்டிருந்த திருமலைக்கு, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக ஆகிவிட்டது. பட்டப் படிப்பைத் தூக்கி எறிந்து கல்லூரியை விட்டு வெளியே வந்துவிட்டார். அவரைப் போன்ற இளைஞர்கள் அன்று தங்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாது, இந்த தேசத்தைப் பற்றி மட்டுமே கவலை கொண்டு, கல்லூரிகளையும் தாங்கள் பணிசெய்துகொண்டிருந்த நிறுவனங்களையும் விட்டுவிட்டுப் பொது வாழ்க்கைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள்.

1921-ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த திருமலையை பிறந்தவுடன் அவருடைய பெற்றோர்கள் பட்டுத் துணியால் ஏந்தினார்களாம். திருமலையின் உடம்பில் முதன்முதலில் பட்டது அந்தப் பட்டுத் துணியாக இருக்கலாம். ஆனால், தன்னுடைய உயிர் மூச்சு முடியும் வரை கதர் அணிந்து காந்தியப் பணிகளுக்காகவே வாழ்ந்தவர் திருமலை. 1956-ல் வினோபா பாவே பூமிதான இயக்கத்துக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஜெகநாதன், கிருஷ்ணம்மாள், ர.வரதன், பத்மா, கே.எம்.நடராஜன் ஆகியோரோடு திருமலையும் கிராமம் கிராமமாகச் சென்று, பலரிடமும் தானமாக நிலங்களை வாங்கி, நிலமில்லாத விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். தமிழ்நாட்டு பூமிதான யாத்திரையில் வினோபாவுடன் சென்ற அந்த அனுபவமும் அவர் பேசிய பேச்சுக்களின் தாக்கமும் கடைசி வரை திருமலையிடம் இருந்தது. வினோபாவின் வாழ்க்கை வரலாற்றையும் திருமலை எழுதியிருக்கிறார்.

அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டே இருந்தன. செல்வச் செழிப்போடு வாழ்ந்த திருமலை மிகவும் ஏழ்மை நிலைக்கு வந்தாலும்கூட தொடர்ந்து காந்தியப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த மாதிரியான நிலையிலும்கூட வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ்வது என்பதை ரசிகமணி டி.கே.சி.யிடம் அவர் கற்றுக்கொண்டிருந்தார். டி.கே.சி.யின் மேல் உள்ள பற்றால் ‘உலக இதயஒலி' எனும் இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தினார். ‘காந்திஜியின் வாழ்வும் வாக்கும்’ என்ற தமிழ்ப் பத்திரிகையும் ‘The Joy of Living’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும்கூட திருமலை நடத்தினார்.

தமிழ்நாடு காந்தி நினைவு நிதியில் தத்துவப் பிரச்சாரகராக இருந்து, காந்தியத் தத்துவங்களை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லும் மிகப் பெரிய பணியை ஏற்றுக்கொண்டு மதுரையை மையமாகக் கொண்டு, பல கல்லூரிகளுக்கும் காந்தியின் வாழ்க்கையையும் சிந்தனைகளையும் எடுத்துச் சென்ற பெருமை திருமலையையே சாரும். 1969-ல், காந்தி நூற்றாண்டு விழாவின்போது, அதன் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்பட்டபோது திருமலை தொடங்கிய திட்டம்தான், ‘காந்திஜியின் வாழ்வும் வாக்கும்’ (The Voice of Gandhi) என்ற அஞ்சல் மூலம் படிப்புத் திட்டம். சென்னை காந்தி அமைதி நிறுவனத்துக்குச் செயலாளராக அவர் பணியாற்றியபோது பள்ளி, கல்லூரிகளுக்கு காந்தியின் வாழ்க்கையைக் கொண்டுசெல்லும் சத்தியசோதனை தேர்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவந்தார். அது இன்றும் நடந்துவருவது அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகவே கருத வேண்டியிருக்கிறது. மாணவர்கள் மத்தியில் பிரபலமான தேர்வுத் திட்டமாக சத்தியசோதனை தேர்வுத் திட்டம் அமைந்திருந்தது.

அவர் செயலாளராக இருந்த காந்தி அமைதி நிறுவனமும் அவர் ஆரம்பித்த காந்தி கல்வி நிலையமும் இன்றும் அவருடைய சிந்தனைகளுக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து காந்திய சிந்தனைகளை இளைஞர்களிடமும் குறிப்பாக மாணவர்களிடமும் கொண்டுசெல்கிறது. பணம் இல்லையே என்ற பதற்றம் என்றும் திருமலைக்கு இருந்ததில்லை. எதைச் செய்தாலும் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும்... அவ்வளவுதான். செயல்திட்டங்களைப் பற்றியும் நிகழ்ச்சிகள் பற்றியும் விவாதிக்கும்போது அவர் ஒரு விஷயத்தைக் கூறுவார், “நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நிகழ்ச்சிகளும் செயல்திட்டங்களும் தாமாகவே வந்து உங்களைச் சேர்ந்துவிடும். செயல்திட்டங்களைத் தீட்டி, நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, ஆட்களைச் சேர்த்தால், நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அந்த ஆட்களும் எங்கோ சென்றுவிடுவார்கள்.”

திருமலையைப் பொறுத்தவரை, உலகத்தில் அனைவரும் அன்போடு நண்பர்களாகப் பழகிவந்தாலே காந்தியம் மலர்ந்துவிடும். அன்றாட வாழ்க்கையில் அனைவரையும் அன்போடு நண்பர்களாக்கிக்கொண்டு பழகுவதே உண்மையான காந்தியம் என்பதே அவருடைய காந்திய சித்தாந்தம்.

- அ.அண்ணாமலை, இயக்குநர், தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுடெல்லி,

nationalgandhimuseum@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x