

எங்கே இருக்கிறது ஜம்புத்தீவு என விழிக்காதீர்கள். ஒருகாலத்தில் இந்தியாவுக்கு ஜம்புத்தீவு என்ற பெயரும் இருந்தது. அதைத் தமிழில் நாவலந்தீவு என்றும் அழைத்திருக்கிறார்கள். இதற்கு, நாவல் மரங்கள் நிறைந்த தீவு என்று அர்த்தம். பழைய சமஸ்கிருத, புத்த இலக்கியங்களில் ஜம்புத்தீவில் உள்ள பாரதம் என்று உள்ளது.
திருச்சியில் மருது சகோதரர்களில் ஒருவரான சின்ன மருது ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்ட நாள் இன்று.
மதுரை நாயக்கர்கள் 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். அவற்றில் ஒன்று சிவகங்கைப் பாளையம். அதனை மருது சகோதரர்கள் ஆட்சி செய்தனர். ஆங்கிலேயப் படைத்தளபதி கர்னல் அக்னியூவின் அறிக்கைக்கு திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புதான் ஜம்புத் தீவுப் பிரகடனம். அதில் அவர் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்து இனத்தினரும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்தார்.
“மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்றாகி விட்டது. உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” என்று அழைத்தார்.
எனினும் போரில் மருது சகோதரர்கள் தோற்றனர். 24-10-1801 அன்று மருது பாண்டியர் களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். மருது சகோதரர்களின் முழு உருவக் கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காளீஸ் வரர் கோயிலின் உட்புறமும் மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.
மருது சகோதரர்களைப் பெருமைப்படுத்தும் வகையிலான அஞ்சல் தலையைத் தபால் துறை 2004-ல் மதுரையிலும் சென்னையிலும் வெளியிட்டது.