Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

பொருளியல் நோபல்: உழைக்கும் வர்க்கத்துக்கு மரியாதை

பொருளியலுக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் ஸ்வீடன் மத்திய வங்கிப் பரிசினை இந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பொருளியல் அறிஞர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். பரிசின் ஒரு பகுதியை கனடாவில் பிறந்து, தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் டேவிட் கார்ட் (David Card) பெறுகிறார். மறுபகுதியை மாசசூசிட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட் (Joshua Angrist), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குய்டோ இம்பென்ஸ் (Guido Imbens) இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட் இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்டவர். குய்டோ இம்பென்ஸ், நெதர்லாந்து நாட்டில் பிறந்தவர். மூவரும் பொருளியலின் ஆய்வுமுறைகளை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறார்கள் என்று பாராட்டியிருக்கிறது ஸ்வீடிஷ் அகாடமி.

கூலி உயர்வின் விளைவுகள்

குறைந்தபட்சக் கூலி அதிகரித்தால் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியிருக்கும்; புதிதாகக் குடியேறுபவர்களால் பூர்விகக் குடிமக்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்பது போன்று காலம்காலமாகத் தொடர்ந்துவந்த நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கி, அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று எடுத்துக்காட்டியவர் டேவிட் கார்ட். குறைந்தபட்சக் கூலி உயர்த்தப்பட்டதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு நியூ ஜெர்ஸியிலும் கிழக்கு பென்சில்வேனியாவிலும் உள்ள உணவகங்களை அவர் தனது ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்டார்.

நியூ ஜெர்ஸியில் குறைந்தபட்சக் கூலி உயர்ந்தது. பென்சில்வேனியாவில் அதே கூலி தொடர்ந்தது. ஆய்வின் முடிவில், குறைந்தபட்சக் கூலி உயர்த்தப்படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை என்பது நிரூபணமானது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கை, அவர்களது வேலைவாய்ப்புக்கே பாதகமாக மாறும் என்ற முதலாளித்துவ அச்சுறுத்தல்களுக்கு அறிவியல்பூர்வமான விடையாக இந்த ஆய்வு அமைந்தது.

டேவிட் கார்ட்டுடன் இணைந்து இந்த ஆய்வுகளில் ஈடுபட்ட ஆலன் க்ரூகெர் (Alan Krueger) 2019-ல் காலமாகிவிட்டார். க்ரூகெர் உயிருடன் இருந்திருந்தால், அவரும் இந்தப் பரிசினைப் பகிர்ந்துகொண்டிருந்திருப்பார். உழைப்புச் சந்தையில் நிலவும் இனவாதப் போக்கு, மருத்துவக் காப்பீடு, தொழிற்சங்கங்கள், அவற்றின் பேரம் பேசும் திறன் என்று டேவிட் கார்டின் ஆய்வுப் பரப்பு மிகவும் விரிவானது. எனினும், பொருளியலில் உழைப்பின் பங்களிப்புதான் அவரது ஆய்வுகளின் மையம்.

பானர்ஜி-டுஃப்ளோ பாராட்டு

2019-ல் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அபிஜித் பானர்ஜிக்கும் அவரது இணையர் எஸ்தர் டுஃப்ளோவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அதே ஆண்டில், வெளியான அவர்களது ‘குட் எகானமிக்ஸ் ஃபார் ஹார்ட் டைம்ஸ்’ புத்தகமும் பெருங்கவனம் பெற்றது. குடியேற்றம் குறித்தும் பூர்விகக் குடிகளின் அச்சம் குறித்தும் அந்நூலில் விவாதித்த பானர்ஜியும் டுஃப்ளோவும் டேவிட் கார்ட் ஆய்வுகளைத்தான் மேற்கோள் காட்டியிருந்தனர்.

1980-ல் கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, விரும்புபவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று அறிவித்த வேகத்தில், அந்நாட்டிலிருந்து 1.25 லட்சம் தொழிலாளர்கள் அமெரிக்காவின் மியாமி நகரத்துக்குக் குடியேறினார்கள். அந்நகரில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 7% கூடியது. கியூப தொழிலாளர்களின் குடியேற்றத்துக்கு முன்பும் பின்பும் அந்நகரத்தில் கூலியின் விகிதமும் வேலைவாய்ப்பின் விகிதமும் எப்படி உயர்ந்தன என்பதை மற்ற நான்கு அமெரிக்க நகரங்களோடு ஒப்பிட்டு எடுத்துக்காட்டினார் டேவிட் கார்ட். தொழிலாளர்கள் புதிதாக வந்து குடியேறுவதால், பூர்விகக் குடிகளின் வேலைவாய்ப்பில் உடனடியாகவோ நீண்ட கால அளவிலோ எந்த மாற்றமும் வருவதில்லை என்பதை ஆய்வுகளின் வழியாக அவர் உறுதிப்படுத்தினார்.

அந்த ஆய்வின் முக்கியத்துவத்தை பானர்ஜி இணையர் விதந்தோதிப் பாராட்டியிருப்பார்கள். கியூபாவிலிருந்து மியாமிக்குக் குடியேறியவர்கள், அங்கு கிடைக்கும் வேலைவாய்ப்புக்காக மட்டும் அந்நகரத்தைத் தேர்வுசெய்யவில்லை. கியூபாவுக்கு வெகு அண்மையிலுள்ள நகரம் அதுதான். டேவிட் கார்ட் ஆய்வுகளின் அணுகுமுறை மட்டுமல்ல, எட்டப்பட்ட முடிவுகளும் மிகவும் முக்கியமானவை. தொழிலாளர்களின் குடியேற்றப் பிரச்சினைக்கு மரபான ‘அளிப்பு - தேவை’ விதியை அப்படியே பொருத்திப் பார்க்க முடியாது என்பதை முதலில் எடுத்துக்காட்டியது டேவிட் கார்ட் ஆய்வுகள்தான் என்கிறது ‘குட் எகானமிக்ஸ்’ புத்தகம். டேவிட் கார்ட் மேற்கொண்ட இத்தகைய பொருளியல் ஆய்வுகள், சமூகவியல் ஆய்வுகளாகவும் அமைந்துள்ளன. அவை, உழைக்கும் வர்க்கத்துக்குள்ளேயே பகைமை வளர்க்கும் வளர்ந்த நாடுகளின் தேர்தல் அரசியல் உத்திகளை மறுதலிக்கவும் செய்கின்றன.

இயல்புச் சோதனைகள்

ஆங்கிரிஸ்ட், இம்பென்ஸ் இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள பரிசானது காரண காரிய விளைவுகளின் அடிப்படையில் தெளிவான முடிவுகளைப் பெறும் வகையில், அவர்கள் உருவாக்கிய ஆய்வுமுறைகளுக்கானது. இயல்புச் சோதனைகள் என்றழைக்கப்படும் இந்த ஆய்வுமுறை தற்போது நோபல் பரிசு பெற்றிருக்கும் பொருளியல் அறிஞர்களால் 90-களில் வளர்த்தெடுக்கப்பட்டது. புதிதாகக் கண்டறியப்பட்ட ஒரு மருந்தின் விளைவுகளைச் சோதனைக்கூடத்தில் ஆராய்ந்து பார்ப்பதுபோல, பொருளியல் கொள்கைகளின் தாக்கங்களை மக்கள் சமூகத்தில் ஆராய்ந்து பார்க்கும் முறை இது.

வருமானத்துக்கும் கல்விக்கும் இடையிலான உறவு குறித்து, ஆலன் க்ரூகெருடன் இணைந்து ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட் மேற்கொண்ட ஆய்வு இயல்புச் சோதனைகளின் அடிப்படையிலானது. பள்ளிக்கூடங்களில் கூடுதல் கல்வியைப் பெற வாய்ப்புள்ளவர்கள், கூடுதல் ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு அந்த ஆய்வு இட்டுச்சென்றது. ஒரே ஆண்டில், தொடக்க மாதங்களில் பிறந்தவர்களுக்குக் கல்வியாண்டு உடனடியாக முடிந்துவிடுகிறது. ஆண்டின் இறுதி மாதங்களில் பிறந்தவர்கள் அடுத்த கல்வியாண்டின் முடிவுவரைக்கும் கூடுதலாகப் படிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறார்கள் என்ற அளவுக்கு அமெரிக்காவின் ஆரம்பக் கல்வி முறைக்கும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் ஊதிய விகிதத்துக்கும் இடையிலான உறவைப் பேசியது அந்த ஆய்வு. அதன் முடிவுகளை மேம்படுத்துவதில் ஆங்கிரிஸ்ட், இம்பென்ஸ் இருவரும் இணைந்து பணியாற்றினர். இத்தகைய நம்பகமான ஆய்வுமுறைகளுக்கு இதற்கு முன் பொருளியல் துறையில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இப்போதும்கூட, மாதிரி ஆய்வுகள் முழுமைக்கும் பொருந்துமா என்ற கேள்விகள் இல்லாமலில்லை.

‘மற்றவை மாறாதிருக்கும்போது’ என்று தொடங்கி எப்போதுமே தர்க்கரீதியான ஊகங்களையே முடிவுகளாக முன்மொழிகிற பொருளியல் துறையில், அறிவியல்பூர்வமான ஆய்வுமுறைகள் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்துள்ளன. மூலதனத்துக்கான லாபத்தையும் அதற்கான சந்தை அமைப்பையுமே பிரதான ஆய்வுப்பொருளாகக் கொண்டிருந்த நிலை மாறி, உழைப்பும் கூலியும்கூட இப்போது ஆய்வுப்பொருளாக மாறியிருக்கின்றன. அந்த ஆய்வுகளுக்குக் கிடைத்திருக்கும் பரிசு என்பது உழைக்கும் வர்க்கத்துக்கு ஒரு மரியாதையும்கூட.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x