Last Updated : 08 Oct, 2021 03:11 AM

 

Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

சர்வதேசத் தரத்தில் கட்டிடங்கள்... எட்டாக்கனியா?

கேசவப் பிள்ளை பூங்கா, புளியந்தோப்பு, சென்னை என்கிற முகவரி தவறான காரணங்களுக்காகப் பிரபலமாகிவிட்டது. குடிசை மாற்று வாரியம் இந்தப் பகுதியில் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரம் தாழ்ந்தவையாக இருக்கின்றன என்பது குற்றச்சாட்டு. இது சமூக ஊடகங்களிலிருந்து சட்டமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. கட்டிடத்தின் பூச்சு சிறிய அழுத்தத்தைக்கூடத் தாங்கக் கூடியதாக இல்லை என்கிறார்கள் குடியேறிய மக்கள். இதற்கு வாரியம் பதிலளித்திருக்கிறது. பூச்சு வேலைக்குப் பயன்படுத்திய எம்-சாண்ட் தரமானதாக இல்லாததால் சில இடங்களில் உதிர்ந்து விழுகிறது. அது சீராக்கப்படும். கட்டிடங்களின் கான்கிரீட் தூண்களும் உத்திரங்களும் தளங்களும் முறையாகக் கட்டப்பட்டவை. ஆகவே, கட்டிடம் வலுவானது, அதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை என்பதுதான், கட்டிடத்துக்குப் பொறுப்பான செயற்பொறியாளர் அளித்திருக்கும் விளக்கம்.

தமிழக அரசு வல்லுநர் குழு ஒன்றை நியமித்தது. அவர்கள் கட்டிடத்தின் எல்லாக் கூறுகளையும் ஆய்ந்து, தங்களது அறிக்கையை அக்டோபர் 4 அன்று அரசுக்கு அளித்திருக்கிறார்கள். அறிக்கை இன்னும் பொது வெளியில் வைக்கப்படவில்லை. அது வெளியாகும்போது, கட்டிடத்தின் தரம் குறித்த தெளிவு கிட்டும். அதற்கிடையில், இது போன்ற குற்றச்சாட்டுகளும் ஐயங்களும் எழாமல், சர்வதேசத் தரத்தில் கட்டுமானங்களை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

வடிவமைப்பைச் சரிபார்த்தல்

வடிவமைப்பிலிருந்து தொடங்கலாம். அரசுக் கட்டிடங்களின் வடிவமைப்பைத் துறை சார்ந்த பொறியாளர்களே மேற்கொள்கிறார்கள். அல்லது ஆலோசகர்களை நியமித்துக்கொள்கிறார்கள். எப்படியானாலும் கணக்கீடுகளும் வரைபடங்களும் சுயேச்சையான இன்னொரு பொறியியல் குழுவினரால் சரிபார்க்கப்பட வேண்டும். இது ஒரு சர்வதேச நடைமுறை. இதைப் போலவே, பயன்படுத்த வேண்டிய பொருட்கள், அவற்றின் தரம், கட்டுமானத்தின் ஒவ்வொரு பணியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய செய்முறை முதலிய கூறுகள் ஒப்பந்தப் புள்ளியில் இடம்பெறும். இவையும் சரிபார்க்கப்பட வேண்டும்.

வெளிப்படைத்தன்மை

ஒவ்வொரு அரசுத் துறையிலும் பதிவு செய்துகொண்ட ஒப்பந்தக்காரர்கள் இருப்பார்கள். பணிகளின் மதிப்பை வைத்து அவர்கள் வகைப்படுத்தப்பட்டும் இருப்பார்கள். ஒவ்வொரு துறையிலும் இவர்கள் மட்டும்தான் போட்டியிடுவார்கள். இதனால், இவர்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு பணிகளைப் பிரித்துக்கொள்வதும் அவ்வப்போது நடக்கும். இதைத் தடுக்க முடியும். ஒப்பந்தப் புள்ளிகள் இணையத்தின் வாயிலாகக் கோரப்பட வேண்டும். ஒன்றிய - மாநில அரசுகளில் பணியாற்றும் தகுதியும் அனுபவமும் மிக்க எல்லா ஒப்பந்தக்காரர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். எல்லா அரசுத் துறைகளும் இணைந்து ஒப்பந்தக்காரர்களின் பட்டியலைக் கொண்ட ஒரு தளத்தை இணையத்தில் பேணலாம். ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவதிலும் பரிசீலிப்பதிலும் பணிகளை வழங்குவதிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

விலைப் பட்டியலில் வினோதம்

தமிழ்நாடு அரசின் கட்டுமானங்கள் பொதுப்பணித் துறை வெளியிடும் விலைப் பட்டியலின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. இந்த விலைப் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் புதிப்பிக்கப்படும். மாவட்டவாரியாகக் கட்டுமானப் பொருட்களின் விலையும் தொழிலாளர்களின் ஊதியமும் சேகரிக்கப்படும். இதன் அடிப்படையில் கட்டுமானத்துக்கான மதிப்பீடு உருவாக்கப்படும். இதில் ஒரு விநோதம் நிகழ்ந்துவருகிறது. இந்த மதிப்பீட்டிலிருந்து கிடைப்பது அந்தக் கட்டுமானத்தின் ‘அடக்க விலை’யாக இருக்கும். இதைத் தவிர, ஒப்பந்தக்காரருக்கு வேறு செலவினங்களும் இருக்கும். அவருக்கு அலுவலகம் இருக்கும். ஊழியர்கள் இருப்பார்கள். பணிக்கான தளவாடங்கள் தேவைப்படும். மேலதிகமாக இந்தப் பணியை அவர் மேற்கொள்வது தேசாபிமானத்தால் அல்ல, லாபம் ஈட்ட. இவற்றுக்காக ஒன்றிய அரசின் பொதுப்பணித் துறை 15% கூடுதலாக அனுமதிக்கிறது. மாறாக, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை இதை அனுமதிப்பதில்லை. பங்கேற்கும் போட்டியாளர்கள் மதிப்பீட்டுத் தொகைக்கு மேலும் ஏலம் கோரலாம். ஆனால், ஒப்பந்தப் புள்ளியை வழங்கும் அலுவலருக்கு மதிப்பீட்டை மிகக் குறைந்த அளவில் தாண்டவே அனுமதி இருக்கும். இது ஒப்பந்தக்காரர்களுக்கும் தெரியும். ஆகவே, அந்தக் கோட்டைத் தாண்ட மாட்டார்கள். தேவைப்பட்டால், மதிப்பீட்டைவிடக் குறைவான விலையும் கோருவார்கள். நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். தமிழ்நாடு அரசுத் துறையின் பல ஒப்பந்தக்காரர்கள் ‘லாபம்’ இல்லாமல்தான் ஏலம் கோருகிறார்கள். இதனால், பணிகளின் தரம்தான் முதல் பலியாகும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

சோதனை மேல் சோதனை

அடுத்ததாக, அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானப் பொருட்களுக்கான தயாரிப்பாளர்கள், பதிவுபெற்ற விற்பனையாளர்களின் பட்டியலையும் எல்லா அரசுத் துறைகளும் இணைந்து உருவாக்கலாம். கூடவே, சிமென்ட், கம்பி, கான்கிரீட், மணல், ஜல்லி, செங்கல், மரம் முதலான பிரதானக் கட்டுமானப் பொருட்களைப் பரிசோதிப்பதற்கான, சுயேச்சையான சோதனைச் சாலைகளை அங்கீகரித்து, அவற்றுக்கான பட்டியலையும் உருவாக்கலாம். இந்த சோதனைச் சாலைப் பரிசோதனைகளைக் கட்டாயம் ஆக்கலாம்.

பணி நடைபெறும்போது, அவற்றை மேற்பார்வையிடப் போதுமான பொறியாளர்களும் உதவியாளர்களும் இருப்பதில்லை. ஆகவே, போதுமான பொறியாளர்களும் உதவியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் ஒவ்வொரு நாளும் நடந்த வேலைகள், அவற்றின் அளவுகள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அவற்றின் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் முதலான விவரங்கள் அடங்கிய தினசரி அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டும். இவர்களுக்கு உரிய பொறுப்பும் போதிய அதிகாரமும் வேண்டும். தவறிழைத்தால் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.

பராமரிப்பின் காலம்

மேலும், பணி நிறைவுற்ற முதலாண்டில் குறைபாடுகள் நேர்ந்தால், அவற்றைச் சீராக்குகிற பொறுப்பு ஒப்பந்தக்காரருக்கு உண்டு. நல்ல கட்டுமானத்துக்கு இது போதுமானது. ஆனால், குறைபாடுள்ள கட்டுமானங்களில் பராமரிப்புச் செலவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இதைப் பல துறைகளும் தனியாகக் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. முதல் பத்தாண்டுகளில் கூடுதல் பராமரிப்புச் செலவுகளை வைக்கும், குறையுள்ள கட்டுமானங்களைக் கட்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு எந்த அரசுத் துறையும் புதிய ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது.

சர்வதேசத் தரம்

சர்வதேசத் தரம் என்பது எட்டாக் கனியல்ல. வடிவமைப்பு சரிபார்க்கப்பட வேண்டும். ஒப்பந்தப் புள்ளிகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும். தமிழகப் பொதுப்பணித் துறையின் விலைப் பட்டியலில் லாபம் அனுமதிக்கப்பட வேண்டும். கட்டுமானப் பொருட்கள் சோதிக்கப்பட வேண்டும். போதுமான பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தரக் கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டும். குறைபாடுள்ள கட்டுமானங்களுக்குக் காரணமான ஒப்பந்தக்காரர்களை விலக்கி வைக்க வேண்டும். இவையெல்லாம் உலகின் பல்வேறு நாடுகளில் நடப்பவைதான். இவற்றை நாமும் நடப்பில் கொண்டுவர வேண்டும். அப்போது நம்மாலும் சர்வதேசத் தரத்தில் கட்டிடங்களை உருவாக்க முடியும். புதிய புளியந்தோப்புகள் உருவாகாமல் தடுக்கவும் முடியும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x