Last Updated : 29 Mar, 2016 08:23 AM

 

Published : 29 Mar 2016 08:23 AM
Last Updated : 29 Mar 2016 08:23 AM

ஜனநாயகத்திலுமா மன்னராட்சி?

ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே ஒரு சிலரது சர்வாதிகாரம் நடக்க முடியும் என்பதைப் பார்த்துவருகிறோம்

இன்னமும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் பிரச்சாரமும் முறையாகத் தொடங்கப்படவும் இல்லை. அதற்குள்ளாகவே பல அசிங்கங்களைக் கண்டுவிட்டது இந்த ஆண்டின் தேர்தல் களம். கூட்டணிக்கான பேரங்கள் குறித்த தலைவர்களின் அறிக்கைகள் பரஸ்பரம் சேறுவாரிப் பூசுவதோடு, தமிழக அரசியலின் நிஜ முகத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றன.

இந்தக் கூத்துக்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு அபாயம் கேள்விக்கு அப்பாற்பட்ட யதார்த்தமாக நிலைபெற்று நிற்கிறது. பல கட்சிகளில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் யாரென்று பார்த்தால், நேற்றைய அல்லது இன்றைய தலைவர்களின் நேரடி வாரிசுகள். அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள். அல்லது தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்கள்.

தலையாய தகுதி என்ன?

திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இது வெளிப்படையாக நடக்கிறது என்றால், அதிமுகவில் சற்றே மறைமுகமாக! இங்கே நேரடி வாரிசுகள் கட்சியைக் கைப்பற்றவில்லைதான். ஆனால், தலைவருக்கு நெருக்கமானவர்தான் தலைவருக்குப் பின் அவரது வாரிசாக அறியப்படுகிறார். தலைமைக்கு அடுத்தபடியாகக் கட்சியின் அதிகார மையமாக விளங்குவதாக நம்பப்படுபவர்களும் கட்சியில் பணிபுரிந்து அந்த நிலையை அடையவில்லை. தலைமையுடனான நெருக்கமே அந்த அந்தஸ்தைப் பெற்றுத்தருகிறது.

திமுகவில் தலைமையில் மட்டுமல்லாது, அநேகமாக ஒவ்வொரு ஊரிலும் வாரிசுகளே பொறுப்பேற்றிருக்கிறார்கள் அல்லது பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறார்கள். வாரிசு அரசியலை முன்னெடுக்க மாட்டோம் என்று அறிவித்த பாமக நிறுவனரும் வாரிசையே முன்னிறுத்துகிறார். விஜயகாந்துக்கு இப்படிப்பட்ட கோட்பாட்டுச் சிக்கல் எதுவும் இல்லாததால், சகஜமாகத் தன் குடும்பத்துக்குக் கட்சியைத் தாரைவார்த்துவிட்டார்.

பொறுப்பில் இருப்பதற்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம் எனச் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமைகள் தொடர்ந்து கூறிவருகின்றன. ஆனால், தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் வாரிசுகளின் தலையாய தகுதி என்பது வெளிப்படை. அவர்களுக்குக் கிடைக்கும் அமைப்புரீதியான வாய்ப்புகள், அங்கீகாரங்கள், ஆதரவு ஆகிய அனைத்தும் மன்னராட்சிக் காலத்தில் இளவரசர்களுக்குக் கிடைத்துவந்த இயல்பான சாதகங்கள்.

தமிழகம் மட்டுமா?

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். பட்நாயக்குகளும் யாதவ்களும் ராப்ரி தேவிகளும் மெஹபூபாக்களும் நேரு முதல் ராகுல் வரை தொடரும் வாரிசுரிமையும் இதற்கான சான்றுகள். இதைப் பற்றிய விவாதம்கூட நடப்பதில்லை என்பது அவலம்.

அரசியலில் மட்டுமின்றி, இந்தியத் திரைத் துறையிலும் இதே நிலைதான். குறிப்பாக தமிழ்த் திரையுலகில், தற்போது உள்ள முக்கியமானவர்களில் முக்கால்வாசிப் பேர் இதற்கு முன்பு ஆதிக்கம் செலுத்தியவர்களின் குடும்ப வாரிசுகள்தாம். இதையெல்லாம் பார்க்கும்போது, இந்திய ஆழ்மனம் மன்னராட்சியின் பழக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லையோ எனத் தோன்றுகிறது. இத்தகைய போக்குக்குப் பின்னால் இருக்கும் பெரும் முதலீடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் குடும்ப வாரிசுரிமை பற்றி மேலும் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

அதிகாரம் கைமாறும் விதத்தில் மட்டுமல்ல, அதிகாரம் கையாளப்படும் விதத்திலும் மன்னராட்சியின் எச்சங்களைப் பார்க்க முடிகிறது. நமது அமைச்சர்கள் அனுபவிக்கும் வசதி, அதிகாரம் ஆகியவை மன்னர்களும் சிற்றரசர்களும் அனுபவித்த சுகபோகங்களுக்கு இணையானவை. அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கும் அவர்களது வாழ்க்கை வசதிகளுக்கும் இடையே இருக்கும் பெரும் இடைவெளி விவாதப் பொருளாக ஆவதே இல்லை. அரச குடும்பத்தினரின் வசதியான வாழ்க்கை விவாதப் பொருளாக ஆனதில்லை என்பதோடு இணைத்து, இதற்குப் பின்னாலுள்ள மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். ‘சாதனைகள்’ புரிந்தவர்களுக்கு வீர வாள், செங்கோல் ஆகியவற்றைப் பரிசளிப்பதும் பட்டங்கள் சூட்டப்படுவதும், ஒவ்வொருவரும் பட்டங்களாலேயே அடையாளம் காணப்படுவதும் மன்னராட்சிக் கால எச்சங்களே. நீதிபதிகளுக்குத் தரப்படும் அதிகாரபூர்வமான மரியாதையின் குறியீடுகளும் மன்னராட்சிக் காலத்தின் அடையாளங்கள்தாம். இவையெல்லாம் நமக்கு விசித்திரமாகவே தெரிவதில்லை என்பது நாம் இன்னமும் ஜனநாயகத்துக்குத் தயாராகவில்லையோ என்னும் கேள்வியை எழுப்புகிறது.

குடும்ப வாரிசுரிமை என்பதைப் பிறப்பின் அல்லது குடும்ப உறவுகளின் அடிப்படையில் உரிமை கைமாறுவதை உறுதிசெய்யும் போக்கு எனச் சொல்லலாம். பிறப்பின் அடிப்படையில் வாய்ப்பு என்றால் அதற்கு என்ன பொருள்? மன்னரின் மகன் மன்னன், புரோகிதரின் மகன் புரோகிதர், வணிகரின் மகன் வணிகர். சலவைத் தொழிலாளியின் மகன் சலவைத் தொழிலாளி. இதற்கு என்ன பெயர்? வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையிலான சமூக அமைப்பு என்றுதானே? அப்படியானால், தலைவரின் மகன் அல்லது மகள் தலைவராவதற்கு என்ன பெயர்?

நவீனத்துவப் பார்வை எங்கே?

ஜனநாயகம் என்பது நவீனத்துவத்தின் கனிகளில் ஒன்று. நவீனத்துவம் அறிவியல் பார்வையையும் சமத்துவத்தையும் சம வாய்ப்பையும் முக்கியக் கூறுகளாகக் கொண்டது. நவீனத்துவத்தின் எழுச்சியும் பரவலாக்கமும்தான் உலகம் முழுவதும் நிலவிவந்த பல்வேறு அநீதிகளைக் களைந்தன. சாதி, மதம், பாலினம், பிறப்பிடம் முதலான அடிப்படைகளில் நிலவிவந்த பாரபட்சங்களுக்குக் குறிப்பிடத் தக்க அளவில் முடிவுகட்டியது. காலங்காலமாக இழைக்கப்பட்டுவந்த அநீதிகள் பெருமளவில் களையப்பட்டன. பிணம் எரிப்பவரின் மகன் பிணம் எரிப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பதை இதுதான் நிலைநிறுத்தியது. மன்னரின் மகன்தான் மன்னராக முடியும் என்பதையும் இது மாற்றியது. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் எனினும் நவீனத்துவம் போட்டுக்கொடுத்த பாதையே சமத்துவத்துக்கும் அறிவியல் கண்ணோட்டத்துக்குமான பாதையை அகலமாகத் திறந்துவைத்தது. அந்தப் பாதையில் நமது பயணம் எப்படி இருக்கிறது?

மன்னராட்சிக் காலத்தில் நடந்தவை எல்லாமே தவறானவை அல்ல. ஆனால், அப்போது நடந்த நல்ல விஷயங்கள் தனிநபர்களின் தார்மிக உணர்வுகளின் அடிப்படையில் நடந்தவை. அதிகாரத்தில் இருப்பவர்களின் இயல்புதான் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்தது. அனைவருக்கும் பொதுவான சட்டமோ சாசனமோ ஜனநாயகபூர்வமான விவாதங்களோ அல்ல.

இன்று பொதுவான சட்டங்கள் உள்ளன. சட்டங்களைப் போடுவதும் மாற்றுவதும் இன்று ஓரளவுக்குத் தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றன. எனினும், இதே சட்டம் கொடுக்கும் அதிகாரம், சமத்துவச் சமன்பாடுகளை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாக மாற்றி எழுதுவதைப் பார்க்கிறோம். அதாவது, ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே ஒரு சிலரது சர்வாதிகாரம் நடக்க முடியும் என்பதைப் பார்த்துவருகிறோம். இதை மாற்று வதற்கான அம்சமும் ஜனநாயகத்திலேயே இருப்பதால் இதை ஓரளவேனும் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என்றும் நம்பலாம்.

ஆனால், குடும்ப வாரிசுரிமை இந்தச் சூழலை மேலும் சீர்குலைக்கிறது. அதிகாரத்தைப் பிறப்பு அல்லது குடும்ப எல்லைகளுக்குள் முடக்குகிறது. இந்திய வரலாற்றின் மிகப் பெரும் களங்கங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் வர்ண அடிப்படையிலான நீதிக்கு இது வேறு வகையில் புத்துயிர் கொடுக்கிறது. வர்ண அடிப்படையிலான பேதத்தை ‘குண கர்ம விபாகஷஹ’ என்கிறது கீதை. அதாவது, மனித இயல்புகள் (குணம்), பணிகளின் (கர்மம்) அடிப்படையிலான பிரிவினைதான் (விபாகஷஹ) வர்ணாசிரம தர்மம் என்று சனாதனிகள் விளக்கம் அளிக்கலாம். நடைமுறையிலோ இது பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. பல நூற்றாண்டு கால யதார்த்தம் இது. இதை மறுக்க அவர்கள் முன்னிறுத்தும் வால்மீகிகளும் பாணாழ்வார்களும் விதிவிலக்குகளாகவே இருக்கிறார்கள். இதே கண்ணோட்டம்தானே தலைவரின் மகன் / மகள் தலைவர், முதல்வரின் மகன்/ மகள் அடுத்த முதல்வர் என்னும் நடைமுறையில் பிரதிபலிக் கிறது? மனு தர்மத்துக்கும் வர்ணாசிரம தர்மத்துக்கும் எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் இதே போக்கில் செயல்படுவதை எப்படிப் புரிந்து கொள்வது?

அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணப்படும் இந்தப் போக்கு ஜனநாயக இயக்கத்தைப் பின்னோக்கித் தள்ளுகிறது. ‘ஜனநாயகபூர்வ’மாகவே இதைச் செய்ய முடிகிறது என்பதுதான் காலத்தின் முரண்நகை.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x