Published : 02 Mar 2016 11:24 AM
Last Updated : 02 Mar 2016 11:24 AM

பட்ஜெட்: வரவும் செலவும்

முன் குறிப்பு:இடப்பக்கத்தில் உள்ள 'பட்ஜெட்: வரவும் செலவும்' என்ற இணைப்பை க்ளிக் செய்து பெரிதாக்கி வரைபடத்தைக் காண்க.

*



பட்ஜெட்: நடைமுறைக்கேற்ற அறிக்கை

அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை நடைமுறைக்கு ஏற்றது. இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட அவர் அடையாளம் கண்டுள்ள ‘9 தூண் அமைப்பு’ உதவும்.

சமூக நலன், ஊரக வளர்ச்சி, அடித்தளக் கட்டமைப்புகளில் முதலீடு, சுகாதாரக் காப்பீடு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு என்று அனைத்துக்கும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அரசின் செலவுகளை அதிகரித்திருந்தாலும் நிதிப் பற்றாக்குறையை வரம்புக்குள் வைப்பதிலும் அக்கறை காட்டப்பட்டுள்ளது. நிதிச் சீர்திருத்தம், தொழில் தொடங்க எளிமையான வழிமுறைகள், வரிச் சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

தொழிலில் திவால் ஆனவர் அதை அறிவித்து விரைவாக விடுபடவும் அந்தத் தொழிலை மற்றொருவர் உடனடியாகத் தொடங்கி நடத்தவும் வழிமுறைகள் காணப்பட்டுள்ளன. முந்தைய நிதி ஆண்டுகளுக்கான வரி புதிதாக விதிக்கப்பட மாட்டாது என்ற அவருடைய வாக்குறுதி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும். இந்தியாவில் தயாரிப்போம், எழுந்திரு இந்தியா என்ற கோஷங்களுக்கு ஏற்பச் செயல்முறைகள் வகுக்கப்படுவது சிறப்பு. சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகப்படுத்தும். 160 விமான நிலையங்களுக்குத் தலா ரூ.100 கோடி ஒதுக்குவதால் அந்த நகரங்கள் விரைவுப் போக்குவரத்தில் இணைக்கப்படும். உலக அளவில் பொருளாதாரம் சுணங்கியிருக்கும்போது இந்தியப் பொருளாதாரம் வலிமையாகவும் துடிப்பாகவும் இருப்பது சிறப்பானது.

****

- குமார் மங்கலம் பிர்லா, தொழிலதிபர்.

வேலைவாய்ப்புகள் எங்கே?

பொதுத் துறை 176.09 லட்சம் பேருக்கும் தனியார் துறை 119.70 லட்சம் பேருக்கும் நிரந்தரமான வேலைகளைத் தந்துள்ளது. பொருளாதார அறிக்கையின்படி 235 மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் லாபம் 2014-2015ல் 1.3 லட்சம் கோடி. நஷ்டத்தில் இயங்கும் 77 பொதுத் துறை நிறுவனங்களின் நஷ்டம் 27,360 கோடிதான்.

ஆனால், நிதிநிலை அறிக்கையில் லாபம் தரும் நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.56,500 கோடி வருமானம் ஈட்டுவோம் என்கிறார்கள்.

முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை 2005-க்கும் 2012க்கும் இடையில் 48%லிருந்து 54.6% ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 90% தொழிலாளர்கள் நிரந்தர வேலை இல்லாதவர்கள். நிரந்தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக நிதிநிலை அறிக்கை இல்லை. நாட்டில் 43.5% வீடுகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை. 46.9% வீடுகளில் கழிப்பறை இல்லை என்கிறது பட்ஜெட்டை ஒட்டி மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கை.

நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக இருந்தாலும், மனித வள மேம்பாட்டில் இந்தியா 130-வது இடத்தில்தான் 25 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. பொருளாதார அறிக்கையின்படி பணக்காரர்களுக்கான மானியம் ரூ.1.03 லட்சம் கோடி. ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தைக் கணக்கிட்டால் ரூ.16,369 கோடிதான் வருகிறது. இது முறையா?

அரசின் கொள்கைகள் காரணமாக வராக் கடன் அதிகரித்துள்ளது. வராக் கடனில் பெரும்பகுதி 30 பெருமுதலாளிகளிடம்தான் உள்ளது. வராக் கடன்களை வசூல் செய்வதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லை.

- டி.பி. பிராங்கோ, தலைவர், அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சம்மேளனம்.

***

பட்ஜெட்: யாரிடம், எவ்வளவு வரி?

பட்ஜெட் அறிவிப்புகளால் பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர் வருமான வரி தொடர்பாக சுமார் ரூ.1,000 கோடி வரி வருமான இழப்பு என்கிறார்கள். ஏழைகளைப் பாதிக்கும் மறைமுக வரிகளான கலால் வரி, சுங்க வரி, சேவை வரிகளில் ரூ. 20,000 கோடிக்கு வரி வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்.

நல்ல பட்ஜெட்டில் நேர்முக வரிகளே அதிகமாக இடம்பெற வேண்டும். இந்தியாவில் மொத்த வரி வருமானத்தில் மறைமுக வரிகளின் பங்கு 65% ஆக இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ. 38,000 கோடி ஒதுக்கியதை சாதனையைப் போலச் சொல்கின்றனர். ஆனால், 2010-11ம் ஆண்டிலேயே ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூகத் துறைகளுக்கு 2015-16ல் ரூ.32,149 கோடி செலவிடப்பட்டது. 2016 -17 பட்ஜெட்டில் ரூ.32,134 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டால், இது சரிவுதான்.

கல்விக்கான மொத்த ஆண்டுச் செலவு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4%-க்குக் குறைவாகவே உள்ளது. சுகாதாரத்துக்கு 1% முதல் 1.5%-க்கும் குறைவாகவே உள்ளது.

- வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர்.

*****

இந்தியா - சீனா: ஓர் ஒப்பீடு!

ஒரு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி மதிப்பு ஜிடிபியில் எத்தனை சதவீதம் என்று அளப்பது உலகமயமாக்கலின் விளைவு. 1990-ல் இந்திய வர்த்தகம் ஜிடிபியில் 15%தான். சீனத்தின் சதவீதத்தில் இது பாதி. 2014-ல் இந்திய வர்த்தகம் ஜிடிபியில் 49%. சீனத்திலோ 41%. ஆனால், சீனத்தின் வர்த்தகம் அதற்கு முன் 63% வரை உயர்ந்து இறங்கியது. இது உள்நாட்டில் ஏற்பட்ட பொருள் தேவையை உணர்த்துகிறது.

1991-ல் தாராளமயத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சீனத்தைப் போலவே பெரிதாக இருந்தது. இன்றைக்கு சீனத்தின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது. இந்தச் சரிவு பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்மறை விளைவல்ல, சீர்திருத்தங்களை ஆழமாகவும் விரைந்தும் மேற்கொள்ளாததால் ஏற்பட்டதே.

1990-ல் சீன ஜிடிபியில் 91%ஆக இந்திய ஜிடிபி இருந்தது. சீன ஜிடிபி 359 பில்லியன் டாலர், இந்திய ஜிடிபி 327 பில்லியன் டாலர். 2005-ல் சீன ஜிடிபியில் இந்திய ஜிடிபி 36.8% ஆகக் குறைந்தது. அந்த ஆண்டில் சீன ஜிடிபி 2.3 ட்ரில்லியன் டாலர். இந்திய ஜிடிபியோ 834 பில்லியன் டாலர்தான்.

இன்றைக்கு சீனத்தின் ஜிடிபியுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் ஜிடிபி 19.8%தான். சீன ஜிடிபி 10.3 ட்ரில்லியன் டாலர்கள். இந்திய ஜிடிபி 2.05 டிரில்லியன் டாலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x