

இந்தியாவில் 1970, 80-களில் மாற்று சினிமா அலையில் உருவான மிக முக்கியமான புதுமை இயக்குநர்களில் ஒருவர் ஜி.அரவிந்தன். அவர் இயக்கிய 18 திரைப்படங்களுக்கு ஏழு தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனாலும், அவரது திரைப்படங்களின் ஒரு நெகடிவ்கூடத் தற்போது இல்லை என்பதுதான் பரிதாபகரமானது. அவை தொலைந்துவிட்டன; அல்லது சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதாரமுற்ற நிலையில் உள்ளன. அவர் மரணமடைந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் 1979-ல் எடுத்த ‘கும்மாட்டி’, புனரமைப்பு செய்யப்பட்டு சினிமா ரிட்ரோவாடோ திரைத் திருவிழாவில் கடந்த மாதம் திரையிடப்பட்டது.
புனரமைப்பு செய்யப்பட்ட கும்மாட்டி திரைப்படத்தைப் பார்த்த ஜப்பானின் முன்னணித் திரைப்பட அறிஞரும் விமர்சகருமான டடாவோ சாடோவா, தான் இதுவரை பார்த்ததிலேயே மிக அழகிய திரைப்படம் என்று புகழ்ந்திருக்கிறார். இந்த திரைப்படத்தைப் புனரமைப்பு செய்த நிறுவனம் வேர்ல்ட் சினிமா ப்ராஜக்ட் ஆகும். பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸேஸீயின் தி ஃபிலிம் பவுண்டேஷன், தி ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த சினடெகா டி போலோக்னா ஃபிலிம் ஆர்க்கைவ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் பணியை முன்னெடுத்துள்ளன.
பாவ்லோ செர்சி உசாய் தனது நூலான ‘தி டெத் ஆஃப் சினிமா’வில் 1897-ல் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஒரு ஒளிப்பதிவுச் சட்டகத்தின் வாழ்க்கை என்பதைக் கணக்கிட்டால் ஒன்றே கால் நொடி அளவு என்று அதில் எழுதப்பட்டதைக் குறிப்பிடுகிறார். இது மிக அநித்யமான வஸ்து என்று குறிப்பிடும் உசாய், ஒரு சட்டகத்தின் வாழ்வென்பது ஒரு பட்டாசைவிடக் குறைவானது என்கிறார். அப்படியான நிலையில், சினிமா என்பது பார்வையாளர்களின் மனதில்தான் குடியிருக்க வேண்டுமென்று வியக்கிறார். அப்படியான நிலையில், பௌதீக நிலையில் திரைப்படத்தைப் பாதுகாப்பது இரண்டாம்பட்சமாகிவிடுகிறது. மாயை மற்றும் நிலையாமை போன்ற கருத்தாடல்களில் நாட்டம் கொண்டிருக்கும் இந்தியப் பண்பாட்டின் பின்னணியில் அதே அணுகுமுறைதான் சினிமாவுக்கும் கடைபிடிக்கப்படுவது போலத் தோன்றுகிறது.
சினிமா, அதன் பிம்பங்கள் மற்றும் சத்தங்கள், நட்சத்திரங்கள், பாடகர்கள் மற்றும் கதைகள் எல்லாம் நமது அன்றாட வாழ்க்கையையும் கற்பனையையும் மூழ்கடித்துள்ளன என்பதே உண்மை. ஆனால், சினிமாவைப் பாதுகாப்பது, ஆவணப்படுத்துவது, பராமரிப்பது ஆகியவற்றில் நாம் வெட்கப்படுமளவுக்குப் பின்தங்கியுள்ளோம். நமது தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் 1964-ல் தொடங்கப்பட்டது. இந்திய சினிமாவின் செலுலாய்டு யுகத்தின் பன்முகப்பட்ட கீர்த்தியும் வளமையும் இன்று நமக்குக் கிடைப்பதற்குக் காரணம், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் தொடக்க தசாப்தங்களில் அதற்குத் தலைமை தாங்கிய பி.கே.நாயருக்குத்தான் நாம் பெரும் பகுதியும் கடன்பட்டுள்ளோம். 26 ஆண்டுகள் பணியில் இருந்த அவர் தனது பணிக்காலத்தில் 12 ஆயிரம் திரைப்படங்களைச் சேகரித்தார். அதில் 8 ஆயிரம் இந்தியத் திரைப்படங்கள் ஆகும். பி.கே.நாயர் ஆவணக் காப்பகத்திலிருந்து ஓய்வுபெற்றபோது, ஊடகச் சூழலைத் தொலைக்காட்சி அலை மூழ்கடித்துவிட்டது. அதற்கும் வெகுகாலம் முன்பே டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆட்டத்தின் விதிகளையே மாற்றிப்போட்டுவிட்டன.
சினிமா பாதுகாப்பு மற்றும் ஒளிப்பதிவின் தரத்தைப் பேணுவதைப் புதிய தொழில்நுட்பங்கள் எளிமையாக்கிவிட்டன. குறைந்த இடவசதி மற்றும் உள்கட்டமைப்பைக் கொண்டே செய்துவிட முடியும். ஆனால், சினிமா பாதுகாப்பு, ஆவணப்படுத்தல், புனரமைப்பில் அளவு, தரம் மற்றும் வேகத்தை இந்த வசதிகள் அதிகரித்துள்ளனவா?
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் பிரகாஷ் மேக்தம் கருத்துப்படி, “மௌன சினிமா யுகத்தில் இந்தியாவில் 1,300 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அவற்றில் 30 படங்கள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. அவையும் முழுமையாக இருக்கிறதென்று சொல்ல முடியாது. திரைப்படத்தைத் தயாரிப்பவர் சட்டப்படி தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்துக்கு ஒரு பிரதியைச் சேகரிப்புக்குக் கொடுக்க வேண்டுமென்ற நிலை இந்தியாவில் இல்லை. 1952-ம் ஆண்டின் ஒளிப்பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு இந்த அம்சத்தைச் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் இரண்டு லட்சம் ரீல்களுக்கு மேலாக திரைப்படச் சுருள்கள் உள்ளன. அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஐந்தாயிரம் திரைப்படங்களைச் சேகரித்துள்ளோம்.”
சினிமா வரலாற்றியலரும் கோட்பாட்டாளருமான ஆசிஷ் ராஜதியாக்ஷா, இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட செலுலாய்டு திரைப்படங்களில் எட்டு முதல் 10% படங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன என்று கூறுகிறார். உலகளவில் பாதுகாக்கப்படும் சினிமாக்களை ஒப்பிடும்போது, இந்த வீதம் மிகவும் மோசமானது என்கிறார். சீனா 31% திரைப்படங்களையும் அர்ஜெண்டினா 30% திரைப்படங்களையும் அழியாமல் பாதுகாத்துள்ளன. அரசாங்கங்களைப் பொறுத்தவரை சினிமாவை வெகுஜனப் பொழுதுபோக்கு வடிவமாகவே பார்க்கின்றன. தணிக்கை மூலம் மட்டுப்படுத்துவதற்கான, வரிகள் மூலம் உறிஞ்சுவதற்கான வடிவமாகவே அரசாங்கங்கள் சினிமாவைக் கருதுகின்றன.
தமிழ் சினிமா வரலாற்றியலரான தியடோர் பாஸ்கரன், “திரைப்படங்களைப் பாதுகாத்துப் பேணுவதற்கு 1960-கள் வரை அரசோ வர்த்தக நிறுவனங்களோ எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை. நூல்கள் பதிவுச் சட்டம் 1867-ன் படி, பதிப்பிக்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களின் பிரதிகளும் தேசிய நூலகங்களில் வாங்கிச் சேகரிக்கப்பட வேண்டும். அப்படியான விதி திரைப்படங்களுக்கு இல்லை. இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு தொடங்கி 50 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திரைப்படங்களைப் பாதுகாத்துப் பேணுவதற்கான தேவை உணரப்பட்டது. 1920, 30-களில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகளைப் பார்த்தால், சினிமாவைப் பற்றி எந்தச் செய்தியும் இருக்காது. பண்பாட்டுரீதியான, பிரம்மாண்டமான வடிவம் ஒன்று தங்கள் மத்தியில் பிறந்துவிட்டதை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை” என்கிறார்.
தமிழில் திரைப்படம் பேசத் தொடங்கியபோது முதல் தசாப்தத்தில் வந்த தமிழ்த் திரைப்படங்கள் 240. அவற்றில் 15 மட்டுமே தற்போது பிழைத்திருக்கின்றன என்கிறார் தியடோர் பாஸ்கரன். 1931-ல் உருவாக்கப்பட்ட ‘மார்த்தாண்ட வர்மா’, தப்பித்ததற்குக் காரணம், ஆவணப்படுத்தும் முயற்சி காரணமாக அல்ல. சட்டரீதியான பிரச்சினையால் அது காப்பாற்றப்பட்டது. அப்படம் வெளியாகியவுடன் ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை என்று கூறி காப்புரிமை வழக்கு ஒன்றைப் பதிப்பாளர் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து அத்திரைப்படம் பறிமுதல் செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து 1974-ல் திருவனந்தபுரத்தில் உள்ள புத்தக டெப்போவில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘மார்த்தாண்ட வர்மா’ திரைப்படத்தின் 11 ஆயிரத்து 905 அடிகள் கொண்ட திரைப்படச் சுருளில் மீட்கப்பட்டது 7 ஆயிரத்து 915 அடிகள் மட்டுமே.
“அநித்தியமானது என்றும் புறக்கணிக்க வேண்டியது என்றும் காட்சிக் கலையைப் பாராமுகமாக அணுகுவதற்கு நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். அது மிகவும் தவறானது” என்கிறார் மார்ட்டின் ஸ்கார்ஸேஸீ. படச்சுருளின் இயல்பே, சினிமாவைப் பாதுகாப்பதற்கு மோசமான எதிரியாக இருக்கிறது. வெப்பமண்டலச் சூழல்களில் ஃபிலிமில் உள்ள நைட்ரேட் சீக்கிரத்திலேயே சிதைவுக்குக் காரணமாகிவிடுகிறது. திரைப்படச் சுருள்களில் உள்ள வெள்ளி மூலகத்தை எடுப்பதற்காக அழிக்கப்படுவதும் ஒரு காரணம். திரையரங்குகளில் ஓட்டத்தை முடித்துக்கொண்ட பிறகு, பெரும்பாலான படச் சுருள்கள் எங்கேயோ மூலையில் விடப்பட்டுச் சிதைகின்றன. அல்லது பழைய பொருள்களாக விற்கப்பட்டுவிடுகின்றன. பல நைட்ரேட் ஃபிலிம்கள் தீ விபத்துகளில் அழிந்துவிட்டன. தீப்பிடிக்காத வகையில் பிற்காலத்தில் வந்த செலுலோஸ் அசிடேட் திரைப்படச் சுருள்களும் சரியான தட்பவெப்பத்தில் பராமரிக்கப்படாமல் அழியும் நிலை ஏற்பட்டது.
வீடியோ தொழில்நுட்பங்களின் வருகையால் திரைப்படங்கள் விஎச்எஸ் கேஸட்டுகள் வடிவில் வீடுகளில் புகுந்து திரைப்படங்கள் தங்கள் ஆயுள்காலத்தை நீட்டித்துக்கொண்டன. தொலைக்காட்சி ஊடகத்தின் வருகை பழைய திரைப்படங்களுக்குப் புதிய மவுசை உருவாக்கியது. டிஜிட்டல் புரட்சி எளிமையாக சினிமாவைக் கையடக்கத்தில் வைத்துக்கொள்ளும் வகையில் விசிடிகளும் டிவிடிகளும் உதவின. இறுதியாக வந்த இணையதளங்களும் யூட்யூப் போன்ற ஊடகங்களும் டாரன்ட்டுகளும் மிச்சமிருக்கும் சினிமாக்கள் பொதுவெளியில் கிடைப்பதற்கு வழிசெய்தன. ஆனால், இதன் மோசமான பின்விளைவாக, தரத்தில் இழப்பு ஏற்பட்டது. குறைவான துல்லியத்தில், சிதைவுற்ற நிலையில் பழைய திரைப்படங்களின் பிரதிகளைப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எப்படியான திரைப்படங்களைப் பாதுகாப்பது என்பதும், குறிப்பிட்ட ஒரு பிரச்சினையாக நிலவுகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய திரைப்படங்களின் எண்ணிக்கையும் நம் கையில் உள்ள வளங்களும் எந்தத் திரைப்படத்துக்கு முன்னுரிமையை அளிப்பது என்ற சிக்கலை உருவாக்குகின்றன. சர்வதேசத் திரைப்பட ஆவணக் கழகம் தனது அறிவிக்கையில் எந்த ஃபிலிமையும் தூக்கி எறியாதீர்கள் என்று சொல்கிறது. அத்துடன் திரைப்படச் சுருளின் ஒவ்வொரு பகுதியும் பின்வரும் தலைமுறையினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய காட்சிரீதியான ஆவணம் என்று கருதுகிறது. ஆனால், அரசாங்க நிறுவனங்கள் இப்படிப்பட்ட வேட்கையோடும் எல்லாவற்றையும் உள்ளடக்கும் மனநிலையோடும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு திரைப்படம் எடுக்கப்பட்ட காலம், வாங்கிய விருதுகள், விமர்சகர்களின் பாராட்டு, வரலாற்று முக்கியத்துவம், அந்தத் திரைப்படத்தின் ஃபிலிம் இருக்கும் நிலை என்ற அடிப்படையில் முன்னுரிமையில் செயல்பட்டால் அந்த வரம்புகளுக்குள் வராத படங்கள் வெளியே போய்விடும். அரசியல்ரீதியான சார்பு நிலைகளும் அரசாங்க நிறுவனங்களைப் பாரபட்சத்துக்கு இட்டுச்செல்லும். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை பழைய தொழில்நுட்பங்கள் இல்லாமலாகிய நிலையில், அடிப்படையான தயாரிப்புச் செயல்முறைகளும் மறைந்துவிட்டன.
அத்துடன் சுதந்திர, சோதனைரீதியான திரைப்படப் படைப்பாளிகள் மிகக் குறைந்த செலவில் எடுத்த திரைப்படங்களின் நிலைதான் மிகவும் மோசமானது. தொழில்நுட்பம் மாறும்போதோ, இடநெருக்கடி ஏற்படும்போதோ இந்தத் திரைப்படங்களின் நெகட்டிவ்களும் பிரின்ட்களும்தான் முதலில் அநாதையாக அழிபவை. இந்தச் சூழலில், இந்தியாவின் மிக முன்னணி இயக்குநர்களின் திரைப்பட நெகட்டிவ்கள் கூட மறுஉருவாக்கம் செய்வதற்குக் கிடைக்கவில்லை. சமீப காலத்தில், அரசு சாராத இரண்டு முக்கிய முயற்சிகள் இந்திய சினிமாவைப் பாதுகாப்பதில் நிகழ்ந்துள்ளன. ஆவணமாக்கும் தீவிர விருப்பு, வரலாற்றுப் பார்வை, சினிமாவைக் கல்வியாகப் பார்க்கும் தெளிவோடு இந்தியன் சினிமா தளம் டிஜிட்டல் சேகரமாக வளம்வாய்ந்த இந்திய சினிமா தொகுப்பை உருவாக்கியுள்ளது. துங்கார்புர் அறக்கட்டளை நிறுவனம் அரவிந்தனின் ‘கும்மாட்டி’க்கு அடுத்து இன்னொரு செவ்வியல் படைப்பான ‘தம்பு’வைப் புனர்நிர்மாணம் செய்துள்ளது. சத்யஜித் ராயின் ‘ஆரண்யேர் தின் ராத்ரி’யும் சியாம் பெனகலின் ‘மண்டி’யும் இதில் சேரும். ஆனால், இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஆண்டுதோறும் 45 மொழிகளில் 2 ஆயிரம் திரைப்படங்கள் வெளியாகும் நாட்டில், இது பிரம்மாண்டமான பணிதான்.
ஏற்கெனவே மிகவும் தாமதமாகிவிட்ட நிலையில், இப்போதாவது செயல்படாவிட்டால் உலகின் உயிர்ப்பு மிக்க செலுலாய்டு பாரம்பரியமும், நமது வாழ்க்கையின், நமது நிலம், பண்பாட்டின் வளம் மிகுந்த காட்சி ஆவணங்களும் எப்போதைக்குமாகத் தொலைந்துபோகும் நிலை ஏற்பட்டுவிடும்.
- ‘தி இந்து’. தமிழில்: ஷங்கர்