Last Updated : 07 Mar, 2016 09:09 AM

 

Published : 07 Mar 2016 09:09 AM
Last Updated : 07 Mar 2016 09:09 AM

ஐரோப்பிய ஒன்றியம்: வெளியேறுமா பிரிட்டன்?

பிரிட்டனின் பொருளாதார வலிமைக்குப் பாதிப்பு நேரிடலாம் என்கிறது ஐ.எம்.எஃப்

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகத் தொடர்ந்து இருக்க வேண்டுமா அதிலிருந்து வெளியேற வேண்டுமா என்ற கேள்விக்கு, பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பதில் அளிக்க வேண்டும். இதற்கான அதிகாரபூர்வ கருத்தறியும் வாக்கெடுப்பு வரும் ஜூன் 23-ல் நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையே, வெளியேறிவிடலாம் என்று 38% பேரும், தொடரலாம் என்று 37% பேரும் ‘யுகவ்’ எனும் ஆய்வு நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்சத்தில் அச்சம்

‘ஜி20’ நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் சீனத்தின் ஷாங்காய் நகரில் பிப்ரவரி மாத இறுதியில் நடந்தது. அப்போது ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால் உலகப் பொருளாதார மீட்சிக்கு ஏற்படக்கூடிய பின்னடைவுகளும் இடர்களும் அதில் பட்டியலிடப்பட்டிருந்தன. ‘ஜி20’ அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களுடைய அச்சங்களை அப்போது தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருப்பதுதான் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றுக்குத் தேசியப் பாதுகாப்பையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் அளிக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஜேக் லியு வலியுறுத்தினார்.

பிரிட்டனின் வெளியேற்றத்தால் பிரிட்டிஷ் பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல, பிரிட்டனில் தங்கித் தொழில்நடத்தும் பல்வேறு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் நலனுக்கும் பாதகங்களைத்தான் ஏற்படுத்தும் என்பதை இந்த எச்சரிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்க நாடு வெளியேறப்போகிறது என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த நிலையில் பிரிட்டனும் அதே முடிவை எடுத்து வெளியேறினால் அந்த முடிவு பிற நாடுகளையும் தொற்றி, உலகின் மிகப் பெரிய வர்த்தகக் கோட்டம் சிதைந்து வலுவிழந்துவிடுமே என்ற அச்சம் அனைவரிடமும் காணப்படுகிறது.

பொருளாதாரம் சரியலாம்

வேறு சில அச்சங்களும் நிலவுகின்றன. பிரிட்டனின் பொருளாதார நிலை குறித்து பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) வெளியிட்ட ஆய்வறிக்கை, பிரிட்டனின் பொருளாதார வலிமைக்குப் பாதிப்பு நேரிடலாம் என்று எச்சரித்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால், அதன் செலாவணியான பவுண்ட் 1980-களில் இருந்த அளவுக்கு மதிப்பிழந்து, இப்போதைய ஐரோப்பிய டாலரைவிடவும் குறைந்துவிடும் என்று எச்.எஸ்.பி.சி. வங்கியின் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

‘சொசைய்டே ஜெனரேல்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆண்டுக்கு ஒரு சதவீதம் என்ற அளவுக்கு பிரிட்டனின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சரிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சியும் ஆண்டுக்கு 0.25% என்ற அளவுக்குக் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.

அரசின் அச்சம்

மிகக் கடுமையான எச்சரிக்கை பிரிட்டிஷ் அரசிடமிருந்தே வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் விலகினால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்படக்கூடிய நிச்சயமற்ற பொருளாதார நிலைமை குறித்து ‘அமைச்சரவை அலுவலகம்’ விரிவாகத் தெரிவித் திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கையின் 50-வது பிரிவில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைப் பிடித்துத்தான் பிரிட்டன் வெளியேற வேண்டியிருக்கும். அதைப் பின்பற்றும்போது பிரிட்டன் பல இடர்களை எதிர்கொள்ள நேரும். அதைத்தான் ‘அமைச்சரவை அலுவலகம்’ விவரித்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால், ஐரோப்பிய ஆணையத்திலிருந்தும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்தும்கூட விலக வேண்டும். அத்துடன் வெளியேறுவதற்கான சம்பிரதாயங்களை ஒன்றுவிடாமல் கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை எந்த நாடும் முழுமையாக வெளியேறாததால், அப்படிச் செய்யப்போகும் முதல் நாடு பிரிட்டன்தான் என்பதால் அதன் பாதகங்களை அது அனுபவித்தே தீர வேண்டும். ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகு, பிற ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளைத் தொடருவதாக இருந்தால் தனித்தனியாகப் பேச்சு நடத்தி உடன்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். பிரிட்டனின் ஏற்றுமதியில் 44% பொருட்கள் ஐரோப்பிய நாடுகளால்தான் வாங்கப்படுகின்றன. எல்லா நாடுகளுடனும் பேசி உடன்பாடுகள் காண்பதை 2 ஆண்டுகளுக்குள் செய்துமுடிக்க வேண்டும்.

பாதிக்கப்படக்கூடிய துறைகள்

2 ஆண்டுகளுக்குள் பிரிட்டன் பேச்சு நடத்தி உடன்பாடு காணாவிட்டால், ‘உலக வர்த்தக நிறுவனம்’(டபிள்யு.டி.ஓ.) விதித்துள்ள நிபந்தனைப்படிதான் வர்த்தகம் செய்ய வேண்டும். அப்படியென்றால், பிரிட்டிஷ் பண்டங்களைக் குறைந்த விலைக்கு விற்கவும் முடியாது, தனக்குத் தேவைப்படும் பண்டங்களை மலிவாக வாங்கவும் முடியாது. இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிட்டன் எந்த வரியும் விதிக்காததால் எளிதாக விற்க முடிகிறது. வாங்குவதும் அப்படித்தான்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் மூலம் பிரிட்டனின் மோட்டார் வாகன உற்பத்தித் தொழில்கள், நிதிச் சேவை நிறுவனங்கள், வேளாண் பண்ணைகள் கடுமையாகப் பாதிப்படையும். சீனத்தில் பொருளாதார மந்த நிலை நிலவினாலும் ஐரோப்பியக் கண்டத்தில் மோட்டார் வாகனங்களுக்குத் தேவை அதிகரித்திருப்பதால், பிரிட்டனின் மோட்டார் வாகன வியாபாரம் நன்றாக நடக்கிறது. நிதிச் சேவை நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்காற்றுக் கட்டமைப்பிலிருந்து விலகிச் செயல்பட்டாக வேண்டும். பிரிட்டனின் பண்ணைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் விற்பதற்கு மானியம் கிடைக்காது. அத்துடன் முன்னுரிமை தந்தும் அதன் பொருட்களை ஐரோப்பாவில் இனி வாங்க மாட்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை விலக்கிக்கொள்வதற்கான வாக்களிப்பு என்பது ‘இறுதி’ நடவடிக்கையாக இருந்துவிடாது, பல பிரச்சினைகளுக்குத் ‘தொடக்க’நடவடிக்கையாகவே இருக்கும். என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லாமல் இருக்கும், எத்தனை காலம் தொடரும் என்று சொல்ல முடியாது, என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்றும் ஊகிக்க முடியாது என்பதை ‘அமைச்சரவை அலுவலக’அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிரிட்டன் வெளியேறியே தீர வேண்டும் என்று தீவிரமாக இருப்பவர்கள் இந்த எச்சரிக்கைகளை ‘வெற்று மிரட்டல்கள்’ என்று நிராகரிக்கின்றனர். “பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இந்த அச்சத்தை விதைக்கிறார்” என்று லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்சன் கூறுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், ஒன்றியத்தில் இருப்பதால் ஏற்பட்டுள்ள பலவீனங்களையும், இறக்கங்களையும் சாமர்த்தியமாகப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால், மாற்று என்ன அல்லது ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்று அவர்களால் தெளிவாகக் கூற முடியவில்லை.

உலக அளவிலான ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனின் பங்கு வெறும் 3% தான். இந்நிலையில், வெளியேறுவதால் பிரிட்டன் வலிமையான நாடாகிவிடும், தன்னுடைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுவிடும், தனக்கான சட்டங்களைத் தானே இயற்றிக்கொள்ள முடியும் என்று மட்டும்தான் வெளியேறத் துடிப்பவர்களால் சொல்ல முடிகிறது. ‘பிரிட்டன் ஏன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்க வேண்டும்’ என்ற புத்தகத்தை எழுதிய ஹியூகோ டிக்சன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய நார்வே, சுவிட்சர்லாந்தை மாற்று உதாரணங்களாகக் கொள்ளலாம் என்பதை நிராகரிக்கிறார். இவ்விரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் எந்தவிதக் கேள்வியும் எழுப்ப முடியாமல் ஒப்புக்கொள்ள நேர்ந்திருப்பதையும் வாக்களிக்கும் அதிகாரத்தை இழந்துவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் பொதுமக்களில் பலர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து மற்றவர்கள் வந்து பிரிட்டனில் குடியேறுவது தடுக்கப்படும் அல்லவா என்று பாமரத்தனமாகக் கேட்கின்றனர். ஒரு நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய விவாதத்துக்கு இதையொரு ஆக்கபூர்வமான காரணமாகவோ மையமாகவோ கொள்ள முடியாது என்பதே உண்மை.

தமிழில்: சாரி, © பிசினஸ் லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x