Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கரோனாவின் கொடும் தாக்கம்

கரோனா பெருந்தொற்றுக்கான ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் ஒன்றரை ஆண்டு காலமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள் குறித்தும் ஒட்டுமொத்தமாகப் பள்ளிக் கல்வித் துறையில் நிகழ்ந்துள்ள சிக்கல்கள் குறித்தும் பல்வேறு களச் செயல்பாட்டாளர்களும் கல்வித் துறை நிபுணர்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். பொதுவாக, அரசுப் பள்ளிகள் அனைத்துமே இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் நடத்தப்படும் பள்ளிகள் ஏற்கெனவே பல்வேறு உள்கட்டமைப்புப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றன. கரோனா பெருந்தொற்றால் அவை மேலும் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் குழந்தை உரிமைகள் மற்றும் முன்னேற்ற மையம் (CCRD), சமூகச் செயல்பாடு மற்றும் மாற்றத்திற்கான மையம் (ROOTS) ஆகிய இரு அரசுசாரா நிறுவனங்கள் கள ஆய்வு நடத்தி, கரோனாவுக்குப் பிந்தைய ஆதிதிராவிட நலப் பள்ளிகளின் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

பள்ளிகளின் அவல நிலை

ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஜூலை மாதம் நிகழ்த்தப்பட்ட கள ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருப்பதும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்திருப்பதும் ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் பூட்டிக் கிடப்பதால், பல மாணவர்கள் பள்ளிக் கல்வியை விட்டு வெளியேறியிருக்கக்கூடிய ஆபத்து நிலவுவதும் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியின் துப்புரவுப் பணியாளர் அரசிடமிருந்து ஊதியம் கிடைப்பதில்லை என்றும் தலைமை ஆசிரியர் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து மாதம் ரூ.1,000 கொடுத்துவந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுவும் கரோனா காலத்தில் நின்றுவிட்டது. ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்று மாணவர்கள் கூறியுள்ளனர். மேல்காவனூர் கிராமம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்தின் சில பகுதிகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். கழிப்பறைகளை நாசப்படுத்துகின்றனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆதிதிராவிடர் நல உதவிக் கல்வி அலுவலரால் நடத்தப்பட வேண்டிய ஆய்வு பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் தன்னுடைய கைப்பணத்தில் பொருட்களை வாங்கிக்கொண்டுள்ளார். கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்காகத் துப்புரவுப் பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து (BDO) கிடைத்துவந்த ரூ.1,000 கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் துப்புரவுப் பணியாளர் இல்லை. ஆசிரியரல்லாத பணியாளர்கள் யாரும் இல்லாததால் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இரண்டிலும் சுற்றுச்சுவர்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளாகப் பள்ளி திறக்கப்படாததால் பள்ளியில் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. தூய்மைப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் இல்லை. 5-ம், 6-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சுவரொட்டியில் இருந்த வாசகங்களைப் படிக்கத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. பல கிராமங்களில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் மட்டுமல்லாமல் மற்ற சமூகத்தினருக்கும் இந்தப் பள்ளிகள் கல்வித் தொண்டாற்றிவந்துள்ளன. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பள்ளிகள் பலவும் 60-70 ஆண்டுகளாக இயங்கிவருபவை. அந்தக் கிராமங்களில் முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பள்ளிகளில் படித்து, இப்போது நல்ல பணிகளில் இருக்கிறார்கள். ஆனால், தற்போது ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் பலவற்றில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவருகிறது. வேலூர் மாவட்டம் சேயனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் 1996-ல் 175 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, தற்போது 18 ஆகக் குறைந்துள்ளது. ஆங்கில வழிக் கல்வி இல்லாமை, மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், தனியார் பள்ளிகளின் பெருக்கம் ஆகியவைதான் இதற்குக் காரணங்கள்.

தொடர்பு அறுந்த மாணவர்கள்

பெருந்தொற்றுக்குப் பின் ஆதிதிராவிடர் நலத் துறையால் நடத்தப்படும் விடுதிகளை விட்டுச் சென்ற மாணவர்கள் என்ன ஆனார்கள் என்பதைக் கண்டறிவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. தொடக்கக் கல்வியை நிறைவு செய்யும் அனைத்து மாணவர்களும் நடுநிலைப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளிலும் சேர்கிறார்களா என்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. 30% மாணவர்கள் மட்டுமே திறன்பேசிகளை (ஸ்மார்ட்போன்கள்) வைத்துக்கொள்ளும் வசதியுடன் உள்ளனர். இணைய வசதியும் முழுமையாகச் சென்றடையவில்லை. கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கான கால அட்டவணையைச் சில பள்ளிகள் மாணவர்களுக்கு அளித்திருக்கின்றன. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களைக் கல்விச் செயல்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபடுவதை உறுதிசெய்ய முயன்றிருக்கின்றனர். சில கிராமங்களில் பட்டதாரி இளைஞர்கள், மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துள்ளனர். கல்வித் தொலைக்காட்சியே பிரதானக் கற்பித்தல் ஊடகமாக இருந்துள்ளது. அதில் மாணவர்கள் சந்தேகம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இல்லை. இது போன்ற காரணங்களால் 70% மாணவர்களால் பெருந்தொற்றுக்குப் பின் கல்வியைத் தொடர முடியவில்லை என்று இந்த ஆய்வு கணித்துள்ளது.

பரிந்துரைகள்

முப்பதுக்கும் மேற்பட்ட அறிஞர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களைக் கொண்டு, இந்த ஆய்வின் அறிக்கை இறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிட நலத் துறையினால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆங்கிலம்வழிக் கல்வியை அறிமுகப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுதல், பழுதடைந்த, பழமையான கட்டிடங்களைப் புதுப்பித்தல், ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்குதல், ஊரடங்குக் காலம் முடியும் வரை ஆசிரியர்கள், மாணவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று மக்கள் பங்கேற்புடன் கூடிய குழுக் கல்விமுறையை உருவாக்குதல், பள்ளி மாணவர் குழுக்கள், உள்ளூர் கல்விக் கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றை உருவாக்குதல், அனைத்துப் பள்ளிகளிலும் அரசு அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வு, விடுதி மாணவர்களின் உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், அவர்களுக்குக் கணினி/ திறன்பேசி வழங்குதல் எனப் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆதிதிராவிடர் நலனுக்கான துணைத் திட்ட நிதி முழுவதும் ஆதிதிராவிட நலத் துறைக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்றும் ஆதிதிராவிட நல அமைச்சகம் வலுப்படுத்தப்பட்டு, முதல்வரின் தனிக் கவனம் பெற்ற அமைச்சகமாக ஆக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.

அமைச்சரின் அறிவிப்புகள்

நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அத்துறையின் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் நடத்தப்படும் 1,138 பள்ளிகளில் 83,259 மாணவர்கள் படிக்கிறார்கள். இவற்றில் 150 பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்படும், ரூ.4 கோடி செலவில் 13 பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுபோன்ற அறிவிப்புகள் நம்பிக்கையளிக்கின்றன. ஆனால், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுவதற்கும் மாணவர்களைக் கல்வியின் மூலம் ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்தல் என்னும் அவற்றின் நோக்கம் முழுமையாக நிறைவேறுவதற்கும் அரசும் ஆதிதிராவிடர் நலத் துறையும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாகக் குவிந்துகிடக்கின்றன.

- எஸ்.கோபாலகிருஷ்ணன்.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x