Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

பொறியியல் கல்வியில் மதிப்பீட்டு முறைகள்

சி.கோதண்டராமன்

நான் 1981-ல் பொறியியலில் பட்டம் பெற்றபோது, தமிழகத்தில் 8 பொறியியல் கல்லூரிகள்தான் இருந்தன. 1987-ல் புதுவையில் விரிவுரையாளராகப் பணியேற்றபோது, புதுவையில் ஒரு பொறியியல் கல்லூரிதான் இருந்தது. 1990-களில் ஒன்றிய அரசு புதிய பொறியியல் கல்லூரிகளின் அவசியத்தை உணர்ந்தது. நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, அரசு தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவித்தது. அது தகவல் தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துகொண்டிருந்த காலம். இது அடுத்த 15 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகள் பெருமளவில் பெருகக் காரணமாகியது. தமிழகத்தில் மட்டும் கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது, ஆந்திரத்தில் 700-ஐக் கடந்தது.

தேர்வு முறை

பொறியியல் கல்லூரிகளில் பரவலாக இருந்துவரும் தேர்வு முறையானது உள்மதிப்பீட்டுக்கு 25%, பருவத் தேர்வுக்கு 75% என்பதாகும். ஒரு மாணவர் தேர்வில் வெற்றி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 50% பெற வேண்டும்.

உள்மதிப்பீடு எப்படிச் செய்யப்படுகிறது? இரண்டு அல்லது மூன்று தேர்வுகள் வாயிலாகவும் ஓர் ஒப்படைப்புப் பயிற்சியின் வாயிலாகவும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அளிக்கப்படுகிறது. எண்பதுகளின் இறுதியில் உள்மதிப்பீட்டுக்கு நாங்கள் நடத்திய தேர்வுகள் மிகவும் தரமானதாக இருந்தன. அப்போது ஒரு வகுப்புக்குள் அதிகபட்ச மதிப்பெண்ணுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறைவாகவே இருந்தது. பருவத்தின் இறுதியில் 25%க்கு உள்மதிப்பீட்டைக் கணக்கிடும்போது, சுமார் 5% முதல் 10% மாணவர்கள் மட்டுமே குறைவான மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். பல்கலைக்கழகப் பருவத் தேர்விலும் கிட்டத்தட்ட அதே நிலை நீடித்தது. இப்படிப்பட்ட நிலைமை சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது.

சமரசங்கள்

கல்லூரிகள் பல்கிப் பெருகிய காலத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அதிக வேலைவாய்ப்பு இருந்தது. மாணவர்கள் அப்படியான துறைகளையே தேர்ந்தெடுத்தார்கள். தங்களுக்கு விருப்பமான துறைக்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்கள். கல்லூரியின் தரத்தை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதாவது, ஒரு நல்ல கல்லூரியில் இயந்திரவியல் படிப்பதைவிட ஒரு சுமாரான கல்லூரியில் கணினியியல் படித்தார்கள். இதனால், தரமான கல்லூரிகளில்கூட ஒரே வகுப்பில் மாணவர்களுக்கு இடையிலான கல்வித் தரத்தில் பெரும் வேறுபாடு ஏற்பட்டது. அதன் விளைவு, ஒரு வகுப்பில் மென்மையாக இருந்த மாணவர்களின் அறிவுத்திறனின் சாய்வு, செங்குத்தாக மாறத் தொடங்கியது. இது உள்மதிப்பீட்டுத் தேர்வு முடிவுகளில் எதிரொலித்தது. பழைய முறையில் தரமான கேள்விகளைக் கேட்டுத் தேர்வு நடத்தினால், குறைவான மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை 60-80%-ஐத் தொட்டது. முன்பெல்லாம் இது 5 முதல் 10-ஐத் தாண்டாது. இந்த நிலை எங்களுக்குச் சவாலாக அமைந்தது.

மேலும், பருவ இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நிலைமையைச் சரிசெய்யத் தனிப் பயிற்சி வகுப்புகள் தொடங்கினோம். தேவைப்படும் மாணவர்களுக்குக் கூடுதல் கவனிப்பு வழங்க முற்பட்டோம். இவை எதுவும் மாணவர்கள் மத்தியில் பெரியதொரு வரவேற்பைப் பெறவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்மதிப்பீட்டுத் தேர்வுகளில் எளிதான கேள்விகளைக் கேட்பது ஒரு தற்காலத் தீர்வாக அமைந்தது. இது கல்வியின் தரத்தில் மறைமுகமாக நுழைந்த முதல் சமரசம். அடுத்து பருவத் தேர்வு. இதில் ஒருவர் குறைந்தபட்சம் 40% பெற வேண்டும். (அதாவது 75-க்கு 30 மதிப்பெண்). ஆனால் ஒருவர் சுமார் 35% அளவுக்கு மதிப்பெண் பெற்றால், அதை 40% ஆக உயர்த்துவது ஏற்கப்பட்டது. இது இரண்டாவது சமரசம். இறுதியாக, இந்த உள்மதிப்பீட்டு மதிப்பெண்ணையும் பருவத் தேர்வு மதிப்பெண்ணையும் கூட்டினால் 50 வர வேண்டும். ஆனால் அது 48 என்று வந்தால், ‘கருணை மதிப்பெண்’ இரண்டைக் கூட்டி மொத்தம் 50 மதிப்பெண் என்று உயர்த்திக்கொள்வது அனுமதிக்கப்பட்டது.

ஒரு மாணவர் தேர்ச்சி பெறுவதற்குக் குறைந்தபட்சம் 50% அவசியம் என்ற அளவீடு எந்த அடிப்படையில் எப்போது நிர்ணயிக்கப்பட்டது? 50% என்கின்ற எல்லையை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்கிற துடிப்பு ஒருசில மாணவர்களைத் தவறான வழிமுறைகளைப் பின்பற்றத் தூண்டுகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பம் தவறான வழிமுறைகளுக்குச் சாதகமாகவும் அமைகிறது.

தேர்வில் நூதனம்

இப்போது ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்வோம். ஒரு மாணவர் ஏன் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் பெற வேண்டும்? இந்தக் கேள்வியைச் சற்று மாற்றியும் கேட்கலாம். ஒரு மாணவர் தேர்வில் வெற்றிபெற்றார் அல்லது தோல்வி அடைந்தார் என்று ஏன் சொல்ல வேண்டும்? சிறப்பான கல்வி வழங்கப்பட்டது; தேர்வுகள் முறையாக நடத்தப்பட்டன; விடைத்தாள்கள் சரியாக மதிப்பிடப்பட்டன. இவையல்லவா முக்கியம்? இவற்றுக்கு நாம் முழு உத்தரவாதம் தர வேண்டும். ஒரு மாணவர் நூற்றுக்கு 30 மதிப்பெண் பெற்றார், இன்னொருவர் 90 மதிப்பெண் பெற்றார். அத்தோடு தேர்வை முடித்து சான்றிதழை வழங்கினால் என்ன? ஏன் வெற்றி, தோல்வி என்று சொல்ல வேண்டும்? யார் வெற்றி பெற்றார், யார் தோல்வியுற்றார் என்பதைக் காலம் சொல்லட்டும். நாம் செய்ய வேண்டியது, மாணவர்கள் பெற்ற 30 அல்லது 90 என்கின்ற மதிப்பெண் அவரவர் தகுதிக்கு ஏற்ற சரியான அளவீடு என்பதை உறுதிசெய்வது மட்டும்தான்.

குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர் விருப்பப்பட்டால் மீண்டும் தேர்வு எழுதட்டும், எத்தனை முறை எழுத வேண்டும் என்பதை அவரே முழு சுதந்திரத்துடன் முடிவு செய்யட்டும். பொதுவாக, மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் ஒரே அளவிலான மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் குறைவு. அவரவர் திறமைக்கேற்பச் சில பாடங்களில் அதிக மதிப்பெண்ணும் மற்ற பாடங்களில் குறைவான/ திட்டமான மதிப்பெண்ணும் பெறுவதுதான் இயல்புநிலை. ஒரு மாணவர் அவர் பெற்ற மதிப்பெண்களைப் பாடரீதியாக வரிசைப்படுத்திச் சான்றிதழ் வழங்கினால், அது அவரது உண்மையான திறமையின் பிரதிபலிப்பாக அமையும். குறிப்பிட்ட பணிகளுக்குக் குறிப்பிட்ட பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணைப் பரிசீலிக்கும் போக்கும் இதனால் ஏற்படும்.

தரம், சுதந்திரம், பொறுப்பு

படிப்புக்கான இடங்கள் பன்மடங்காக உயர்ந்திருக்கிறபோது தரக்கட்டுப்பாடு உயிரோட்டமாக அமைய வேண்டும். எதிர்வரும் காலத்தில் வகுப்பறை பயிற்றுவிப்பு என்பது வெகுவாகக் குறையலாம். உயர் கல்வி வகுப்புகளில் மாணவர்கள் நீண்ட நேரம் செவிசாய்த்துக் கற்கும் திறன் குறைந்துவருகிறது. தேவையான பாடங்களை இணையதளம் வாரி வழங்க முடியும். மாணவர்களின் திறமையைப் புதுமையான தேர்வுகள் மூலம் வெளிக்கொணர்வதுதான் எதிர்கால ஆசிரியர்களின் முக்கியப் பங்காக அமையும். மாணவர்களிடையே முழு சுதந்திரத்துடன் பொறுப்பையும் சேர்த்து ஒப்படைத்துவிடுவோம். இதனால் வியத்தகு மாற்றங்கள் விளையும். பொறியியல் கல்வியின் தரம் உயரும். நாட்டின் மனிதவளம் தழைத்து, பொருளாதாரம் உயர வழி வகுக்கும்.

- சி.கோதண்டராமன், புதுவைப் பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் கட்டிடவியல் துறைப் பேராசிரியர். தொடர்புக்கு: skramane@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x