Last Updated : 03 Feb, 2016 09:13 AM

 

Published : 03 Feb 2016 09:13 AM
Last Updated : 03 Feb 2016 09:13 AM

எட்டாத தூரத்தில் டிஎன்பிஎஸ்சியை வெச்சது யாரு?

என்னய்யா நடக்குது இங்க?! தமிழ்நாட்ல அம்மா ஆட்சிதாம் நடக்குதான்னு சந்தேகமால்ல இருக்கு.

ஆசிரியர்கள் எல்லாம் துணிஞ்சிப் போராட்டம் நடத்துறாங்க. அரசு ஊழியர்கள் சம்பளத்தைக் கூட்டச் சொல்லுதாங்க. இளங்கோவன், விஜயகாந்த் மாதிரி பூராப்பேரும் அரசாங்கத்தைத் துணிச்சலா திட்டுறாங்க! அம்மா தும்முனாக்கூட, ‘புரட்சித் தலைவி, தங்கத் தாரகை அம்மா அவர்கள் ராசதந்திரத்தோடு சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு’ன்னு புகழும் கிரீன் தமிழன் சரத்குமாரே ஆளுங்கட்சிக்கு எதிரா பேசிருவார் போலிருக்கு. பூராப்பேருக்கும் குளிர்விட்டுப்போச்சு போல!

அமைதிப் பூங்கா

அப்பிடியே ஒரு ஆறு மாசம் பின்னாடி போய்ப் பாருங்க. தமிழ்நாடு எப்பிடி ‘அமைதிப் பூங்கா’வா திகழ்ந்துச்சுன்னு. ஜெயலலிதா உள்ள போன நேரத்துல, மதுரையில ஒரு ரிப்போர்ட்டர் குரூப்ல ஒருத்தர் ‘ஓபிஎஸ்க்கு அடிச்சிது பாரு அதிஷ்டம்’னு கமெண்ட் போட்டாரு. உடனே, அவரைக் குரூப்பை விட்டே தூக்கிட்டாரு அட்மின். பின்னாடியே, “அனைத்து வாட்ஸ்அப் குரூப்களையும் உளவுத் துறை போலீஸார் கண்காணிக்கிறார்கள். அதிமுக அரசையோ, ஜெயலலிதாவையோ யாரும் விமர்சிக்க வேண்டாம்”னு ‘வாட்ஸ்அப்’அட்மின்கள் எல்லாம் சர்க்குலர் போட்டாங்க. அந்தப் பயமெல்லாம் இப்ப எங்க போச்சு?

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை ‘பூட்ஸ் கால்’ கொண்டு அடக்குனதும், டாஸ்மாக் போராட்ட மாணவர்களை லத்தியால் சாத்தியதும், பாட்டுப் பாடுன கோவன் மேல தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாஞ்சதும் மறந்துபோச்சா? அப்பெல்லாம் கொத்துக்கொத்தா அமைச்சர்களை மாத்துனாக்கூட விவாதம் பண்ண மாட்டாங்க. இப்ப ஒத்த ஆளு, அதுவும் எம்.எல்.ஏவ நீக்குனாக்கூட பூரா டிவியிலயும் கூட்டிக்கிட்டுப் போய் கும்மியடிக்காங்க. அதுகூடப் பராவால்ல. எவ்வளவு அசிங்கப்படுத்துனாலும் போயஸ் கார்டன் வாசலைவிட்டுப் போக மாட்டேன்னு அடம்பிடிச்சவங்க எல்லாம், இப்ப அதிமுகவ விமர்சிச்சிப் பேசும்போது, நமக்கே சங்கடமால்ல இருக்கு?

டிஎன்பிஎஸ்சி

கெட்டதுலயும் ஒரு நல்ல விஷயம் இருக்கு. இப்ப டிஎன்பிஎஸ்சி பத்துன பேச்சும் வந்திருக்கு. “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தோட கிளையை மதுரையில் அமைக்கணும்”னு ஒரு கம்யூனிஸ்ட் எம்எல்ஏ, போன சட்டசபைக் கூட்டத்துல பேசிருக்கார். நிறையப் பேர் அதப் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டாங்க.

‘உங்க வீட்டுப் பக்கம் இருக்கிற இந்த ஸ்கூல்ல இத்தனாம் தேதி பரீட்சை’ன்னு நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடியே டிஎன்பிஎஸ்சி அறிவிச்சாலும்கூட, ஒன்றரை லட்சம் பேர்ல 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகிடுறாங்க. இந்த லட்சணத்துல மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுன்னு சும்மாச் சும்மா சென்னை ஆபீஸுக்குக் கூப்டிங்கன்னா, எப்பிடி வர்றது?

குரூப் 1, 2, 3, 4ன்னு எந்தப் பரீட்சை எழுதுனாலும், வேலை வேணுமின்னா குறைஞ்சது நாலஞ்சி தடவை சென்னைக்குப் போய்த்தான் ஆவணும். தென் மாவட்டத்துக்காரங்க சென்னைக்குப் போறது லேசுப்பட்ட காரியமா? வேற மாநிலத்துக்கே போயிட்டு வர்ற மாரி இருக்கும், அம்புட்டுத் தூரம். அதைவிட, பெரிய பிரச்சின டிரெயின்ல டிக்கெட் கெடைக்கணுமே?! தென் மாவட்டத்துல இருந்து ஒருத்தன் சிரமம் இல்லாம டிக்கெட் புக் பண்ணி சென்னை போயிட்டு வர்றாம்னா ஒண்ணு, அவன் செல்வாக்குள்ளவனா இருக்கணும். இல்லன்னா, ரெயில்வே ஊழியர்களோட சொந்தக்காரனா இருக்கணும். இல்லாட்டி ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே டிக்கெட்ட புக் பண்ணியிருக்கணும். ஏன்னா, இருக்கதே ரொம்பக் கம்மியான ரெயில்கதாம்.

பொண்ணுக, மாற்றுத்திறனாளிக நெலமதாம் ரொம்ப மோசம். ஒரு பொண்ணு சென்னைக்குப் போனா, தொணைக்கு ஒருத்தரக் கூட்டிக்கிட்டுப் போவணும். பஸ் டிக்கெட், சாப்பாடு, ரூம் செலவுன்னு ஒவ்வொரு தடவையும் குறைஞ்சது நாலாயிரம் ரூவா செலவுன்னு வெச்சிக்கிட்டா, ஆர்டர் வாங்குறதுக்குள்ல இருபதாயிரம் போயிரும். அவ்வளவு காசு இருந்தாத்தாம் உள்ளூர்லயே சத்துணவு உதவியாளர் வேலை வாங்கிறலாமே?

பூரா உயரதிகாரிகளும் மெட்ராஸ்லதான இருக்கீங்க? அமைச்சர்களும் மெட்ராஸ்லதான இருக்கீங்க. நேர்முகத் தேர்வு, கவுன்சிலிங் நடக்குற நேரத்துல பிராட்வேக்குப் பின்னாடி இருக்குற டிஎன்பிஎஸ்சி ஆபீஸ் பக்கம் போயிருக்கீங்களா? வேலைக்குத் தேர்வானவங்க பிள்ள குட்டியோட, வயசான தாய் தகப்பன்களோட பிளாட்ஃ பாரத்துல கெடக்கிறதப் பாக்கலாம். ஆனாலும், ஆபீஸ சென்னையிலதாம் வெச்சிருப்போம். கிளை தொறக்க மாட்டோம்னு சொல்ல எப்படி மனசு வருது உங்களுக்கு?

மத்திய அரசோட, ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தலைமையகம் டெல்லியில் இருந்தாலும், அதன் மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 9 இடங்கள் லயும் இயங்குது. ஒவ்வொரு மாநிலத் தலைநகர்லயும் பிரிவு அலுவலகங்களும் இருக்கு. சின்ன மாநிலமான கேரளாவுலயே அரசுப் பணியாளர் தேர்வாணையத்த மூணு மண்டலமா பிரிச்சி வெச்சிருக்காங்க. ஆனா, இம்மாம் பெரிய தமிழ்நாட்ல எந்தக் கிளையும் கெடையாது.

பக்கத்து மாநிலத்துக்கெல்லாம் முன்னோடியா நம்ம அரசுப் பணியாளர் தேர்வாணையத்த 1924-லயே தொடங்கிட்டாங்க. அப்ப சென்னை மகாணம் ரொம்பப் பெருசா இருந்ததால, தலைமைச் செயலகம் மொதக்கொண்டு எல்லாத்தயும் சென்னையிலயே வெச்சிக்கிட்டாங்க. தமிழ்நாடு தனி மாநிலமா உருவான பெறகு, சென்னை ஒரு மூலயில ஒதுங்கிடுச்சி. அதனால, மதுர மட்டுமில்ல கோவையிலுங்கூட ஒரு கிளை தொறக்கலாம். இது டிஎன்பிஎஸ்சிக்கு மட்டுமில்ல, எல்லாத் துறைக்கும் பொருந்தும். ஹைகோர்ட் கிளையே செறப்பா செயல்படுதே?

அரசியல் தலையீடு

இன்னொரு விஷயம், டிஎன்பிஎஸ்சில அரசியல் தலையீடு. நம்ம நாட்ல ஐஏஎஸ் படிச்ச அதிகாரிகள, அஞ்சாப்பு பெயிலான அரசியல்வாதிங்க ஆட்டுவிக்கிற மாதிரி, ஊருக்கே பரீட்சை வெக்கிற டிஎன்பிஎஸ்சிக்கு சேர்மனா எந்தப் பரீட்சையுமே எழுதாத ஆளுங்க வாராங்க. முன்னாடியாவது ‘கரைவேட்டி’கட்டாத அரசியல்வாதியப் போட்டாங்க. இப்ப கூட்டுறவு சங்கத் தலைவர்களை நியமிக்கிற மாதிரி, கரை வேட்டி ஆட்களையே பகிரங்கமா நியமிக்காங்க.

“அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினரா புதுசா நியமிச்ச 11 பேர்ல 7 பேர் அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவங்க. மிச்சப் பேரு அதிமுக அனுதாபிங்க”ன்னு டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருக்காரு. இது டிஎன்பிஎஸ்சியா? அதிமுகவின் துணை அமைப்பான்னு கேட்டிருக்காரு. சரிதாம். முன்னாடி டிஎன்பிஎஸ்சி சேர்மனா இருந்தது யாரு? அதிமுக வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகி ‘குதிரை றெக்கை புகழ்’ நவநீதகிருஷ்ணன். அவர் எம்பியானதும், பொறுப்புத் தலைவரான சி.பாலசுப்பிரமணியமும் வழக்கறிஞரணி நிர்வாகி தாம். அதுக்கு முன்னாடி தலைவரா இருந்த ஆர்.நட்ராஜ் யாரு? ஆள் மாறாட்டத்துல தப்பா கட்சிய விட்டு நீக்கிட்டு, ஒரு சின்ன ஸாரிகூடக் கேக்காம, ‘திரும்ப வா’ன்னு கூப்பிட்டதும் விசுவாசத்தோடு குடுகுடுன்னு ஓடியாந்தவர்.

திமுக ஆட்சியில கருணாநிதிய நிர்ப்பந்தப்படுத்தி, சொந்த சாதிக்காரர் ஒருத்தர டிஎன்பிஎஸ்சி தலைவரா போட்டவர்தான் ராமதாஸ்ன்னாலும், இப்ப அவர் பேசியிருக்கது சரிதான? டிஎன்பிஎஸ்சில அரசியல் தலையீடு கூடாது. இல்லன்னா, நாளைக்கே பாமக ஆட்சி வந்து, டிஎன்பிஎஸ்சி தலைவரா காடுவெட்டி குருவை உக்கார வெச்சிருவாங்க. குரு சீட்ல உட்கார்ந்திருக்க… பின்னாடி ரெண்டு பேரு ‘முதல்வர் அன்புமணி’ படத்தையும், ‘மக்களின் முதல்வர் ராமதாஸ்’ படத்தையும் தூக்கிப் பிடிச்சிக்கிட்டு இருக்க மாரியான போட்டோலாம் பேப்பர்ல வரும்.

இந்தக் கொடும நமக்குத் தேவையா? எல்லா இடத்துலயும் அரசியல்வாதிங்க பூந்துட்டீங்க. இந்த ஒண்ணையாவது விட்டு வைங்க. பாவம், இளைஞர்களோட ஒரே நம்பிக்கையையும் கெடுத்துடாதீங்க!

- கே.கே. மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x