

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி, ஓர் உணவு விடுதியில் அசைவ உணவு சாப்பிட்டு இறந்த செய்தி தமிழ்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் அந்த விடுதியில் சாப்பிட்ட சிறுமியின் அப்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரும் ‘உணவு நஞ்சானதால்’ பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சையில் இருக்கின்றனர்.
என்ன காரணம்?
நம் நலம் காக்கும் உணவுகளே உயிர் பறிக்கும் அளவுக்கு நஞ்சாவதற்கு என்ன காரணம்? கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடுவதுதான் முக்கியக் காரணம். உணவு ஆய்வாளர்கள் ஆரணி உணவு விடுதியில், பல நாள் கெட்டுப்போன இறைச்சியைச் சேகரித்துள்ள முதல்கட்டத் தகவல் இதை உறுதிப்படுத்துகிறது. சைவ உணவுகளைவிட அசைவ உணவுகள் விரைவில் கெட்டுவிடும் என்பது எதார்த்தம். பலியான சிறுமியும் அவர் அப்பாவும் சாப்பிட்டது தந்தூரி சிக்கன் பிரியாணி. இது கெட்டுப்போன இறைச்சியால் தயாரிக்கப்பட்டிருக்கக்கூடும். பொதுவாக, ஓர் உணவு கெட்டுப்போவதற்கு நான்கு காரணங்கள் முக்கியமானவை. இறைச்சி நாட்பட்டதாக இருக்கலாம். அதைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டியிருக்கலாம். இறைச்சியைச் சமைக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் அசுத்தம் இருக்கலாம். சமையல் சேர்மானப் பொருள்களில் நச்சுத்தன்மையுள்ள கலப்படங்கள் இருக்கலாம்.
வழக்கத்தில், கெட்டுப்போன இறைச்சிகளில் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் சில மணி நேரங்களில் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகிவிடுகிற ஆபத்து நிறைந்தவை. இவற்றில் கேம்பிலோபாக்டர், கிளாஸ்டிரிடியம் பெர்ஃபிரின்ஞென்ஸ், இ.கோலி எனும் பாக்டீரியாக்கள் அதிக வீரியமுள்ளவை. இவைதான் அசைவ உணவை உடனே கெட்டுப்போகச் செய்துவிடும் தன்மையுள்ளவை. உலகில் இதுவரை ஏற்பட்டுள்ள உணவு நஞ்சாதல் தொடர்பான உயிராபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இந்த பாக்டீரியாக்களே இருந்திருக்கின்றன.
பொதுவாக, இம்மாதிரியான பாக்டீரியாக்கள் நேரடியாகவோ, நச்சுக் கூறுகளை வெளியிட்டோ நம் இரைப்பை மற்றும் குடல் நலத்தைச் சீக்கிரத்தில் சீர்குலைத்துவிடும். அதனால்தான் நச்சு உணவைச் சாப்பிட்டவர்களுக்கு உடனடியாகக் குமட்டலும் வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்படுகின்றன. அடுத்ததாக, இந்தக் கிருமிகளின் நச்சுக் கூறுகள் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் முழு நலனையும் பாதிக்கும். அப்போது, கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி போன்றவை உண்டாகின்றன. வயிற்றுப்போக்கு நீடிக்குமானால், உடலிலிருந்து தண்ணீர்ச் சத்து வெகுவாகக் குறைந்துவிடும். நாக்கு வறண்டுவிடும். சிறுநீர் பிரியாது. இந்த நிலை மிகவும் அபாயமானது. உடனடியாக இந்த நீரிழப்பைச் சரிசெய்யாவிட்டால், ரத்த அழுத்தம் குறைந்து, உயிருக்கு ஆபத்தைக் கொடுக்கும். ஆகவே, உணவு நஞ்சானதற்கு அறிகுறிகள் தெரிந்தால், சுய சிகிச்சையில் காலம் தாழ்த்தாமல், மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும். பெரும்பாலும் சிறு வயதினர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோர்தான் நச்சு உணவு சாப்பிட்ட காரணத்தால் சிகிச்சை கொடுத்தும் பலனில்லாமல் இறப்பைச் சந்திக்கின்றனர். மற்றவர்கள் மருத்துவ சிகிச்சையில் தப்பித்துவிடுகின்றனர். ஆரணி நிகழ்விலும் இது உறுதியாகியிருக்கிறது.
உணவு விடுதிக்காரர்கள் கவனிக்க!
அசைவ உணவுகளைப் பொறுத்தவரை இறைச்சியை வாங்கிய அன்றே சமைப்பது முக்கியம். மிச்சமாகிப்போன இறைச்சியைப் பாதுகாத்து மறுநாளோ, அதற்குப் பிறகோ சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இறைச்சியை நன்றாக வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைத்ததை 2 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாத்து மறுபடியும் மறுபடியும் வேக வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சரியான வெப்பநிலையில் அவற்றைப் பாதுகாக்காவிட்டால் கிருமிகள் வளர்ந்துவிடும். நாட்டில் தவிர்க்க முடியாத மின்தடை காரணமாகக் குளிர்சாதனப்பெட்டிகளில் சரியான வெப்பநிலையைப் பராமரிப்பது கடினம்.
அடுத்து, வாடிக்கையாளர்களை ஈர்க்க, சிவக்கச் சிவக்கப் பொரிக்கப்படும் இறைச்சியில் செயற்கை நிறமிகளை அதிகமாகச் சேர்க்கின்றனர். இதையும் தவிர்ப்பது நல்லது. இயலவில்லை என்றால், செயற்கை நிறமிகளில் இறைச்சியை ஊற வைக்கும் நேரத்தையாவது குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக நேரம் இறைச்சி அவற்றில் ஊறினால், நிறமிகளில் கலந்திருக்கும் ரசாயனங்களும் நஞ்சாகிவிட வாய்ப்புண்டு. உணவு விடுதிகளில் சமையலறைச் சுத்தம், சமையல்காரர்களின் சுத்தம், உணவைப் பரிமாறுபவர்களின் சுத்தம் முக்கியம். உணவுத் தயாரிப்பு முறைகளிலும் சுத்தம் காக்கப்பட வேண்டும். குறிப்பாக, இறைச்சியைச் சுத்தமான தண்ணீரில்தான் கழுவ வேண்டும். கழுவும் தண்ணீரை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும். சமைக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கும் குடிநீரையும் உணவையும் பிளாஸ்டிக் கலங்களில் பாதுகாக்கவும் கூடாது. பரிமாறவும் கூடாது. இதுவும் முக்கியம். பரிமாறுபவர் கையுறையும் முகக்கவசமும் அணிந்துகொள்ள வேண்டும்.
பயனாளிகள் கவனம்!
இப்போதெல்லாம் வாரத்துக்கு ஒருமுறையாவது விடுதிகளில் சாப்பிடுபவர்கள் பெருநகரங்களில் அதிகரித்துவருகின்றனர். வெளியில் சாப்பிடுவது தவறில்லை. அங்கே கவனிக்க வேண்டியவை என்ன? உணவு விடுதியில் ஈக்கள் மொய்க்கக் கூடாது. கைகழுவும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அங்கே சோப்போ சானிட்டைசரோ இருக்க வேண்டும். பயனாளிகள் கட்டாயம் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். அங்குள்ள துவாலைகளைப் பலரும் பயன்படுத்துவதால் சொந்தக் கைக்குட்டையில் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்வதே நல்லது. தனித்தனி மென்தாளையும் பயன்படுத்தலாம். உணவு பரிமாறப்படும் தட்டுகள், கிண்ணங்கள், குவளைகள், சிறுகரண்டிகள் எல்லாமே சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். உணவு பரிமாறுபவரின் விரல்கள் தண்ணீர்க் குவளைக்குள் நுழையும்படியாகக் கொண்டுவந்தால், அந்தத் தண்ணீரைக் குடிக்கக் கூடாது. பாட்டில் தண்ணீருக்கு மாற்றாக வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கலாம். ஆவியில் தயாரிக்கப்படும் அசைவ உணவு நன்றாக வெந்திருக்கும். அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
அரசின் கடமை என்ன?
நம் மாநிலத்தைப் பொறுத்தவரை, பயனாளிகளிடமிருந்து புகார்கள் வந்தால் மட்டுமே பெரும்பாலான உணவு விடுதிகளை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முறையான கால இடைவெளிகளில் உணவு விடுதிகளை இவர்கள் ஆய்வுசெய்து, அங்கு சுத்தமும் சுகாதாரமும் காக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கலப்பட உணவு இல்லை என்பதற்கும் சான்றளிக்க வேண்டும். அங்கு பணிபுரிபவர்களுக்கு முறைப்படி மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தொற்றும் நோய்கள் இல்லை எனும் சான்றிதழையும் பெற வேண்டும். இந்த மூன்றையும் முறைப்படி நடைமுறைப்படுத்த அரசு கடுமை காட்டினால் மட்டுமே உணவு நஞ்சாகும் நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்து வரும் உயிராபத்துகளும் தவிர்க்கப்படும்.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com