

துணைவேந்தர் பதவி என்பது அரசியல் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. தமிழ்நாட்டில் 24 பல்கலைக்கழகங்களில் அப்போது துணைவேந்தர்களாகப் பதவி வகித்தவர்களின் சாதிவாரிப் பட்டியல் அதில் தரப்பட்டிருந்தது. ஒரு தலித்கூட இடம்பெற்றிராத அந்தப் பட்டியலில், முற்பட்ட வகுப்பினர் 10 பேரும் இடைநிலை சாதியினர் 14 பேரும் இடம்பெற்றிருந்தார்கள். இந்தச் செய்தி மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டிருந்தது. அப்போது துணைவேந்தர் பதவிகள் காலியாக இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தலித் ஒருவரைத் துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்பதை அரசுக்குக் கோரிக்கையாக வைப்பதே அந்தச் சுவரொட்டியின் நோக்கம். அதன் பிறகு பல்வேறு பல்கலைக்கழகங்களில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், ஒருவர்கூட தலித் இல்லை என்பதே நிலை.
ஏழு காலியிடங்கள்
தற்போது தமிழகத்தின் ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. அதற்குத் தகுதியான நபரைத் தேடும் பணியைத் தேடுகுழு மேற் கொண்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுகுழுவுக்கான உறுப்பினரைத் தேர்ந் தெடுக்கும் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது, இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி. ஒரு உறுப்பினர் தனது எதிர்ப்பை ஆட்சிக் குழுக் கூட்டத்திலேயே பதிவுசெய்திருக்கிறார்.
தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி) 2010 விதியின்படி நடத்தப்பட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்படும் முறை குறித்து நீதிமன்றம் விளக்கம் கேட்டபோது, இரண்டு பல்கலைக்கழகங்கள்தான், அதுவும் யூ.ஜி.சி. விதியின் பகுதியை மட்டுமே பின்பற்றியுள்ளதாகப் பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. மேலும், யூ.ஜி.சி. விதிகள் சட்டசபையில் வைத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகவே, அவற்றைத் துணைவேந்தர் நியமனத்தில் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது.
பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. பணி நியமனம், இடம் மாறுதல், புதிய கல்லூரி களுக்கான அங்கீகாரம் என அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் துணைவேந்தருக்கு உண்டு. இந்த அதிகாரக் குவியலினால்தான் துணைவேந்தர் பதவிக்கு இவ்வளவு போட்டியும் சர்ச்சையும். துணைவேந்தரின் தகுதிகள், யூ.ஜி.சி. விதியைப் பின்பற்றுதல் குறித்து விவாதம் நடக்கும் வேளையில், ஒரு தலித்கூடத் துணை வேந்தராக இல்லை என்பது குறித்த விவாதம்கூட எழாமல் இருப்பது சாதிய சமூகத்தின் மனதைக் காட்டுகிறது.
துணைவேந்தர் தேடுகுழு
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தரை நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, மூன்று பேர் அடங்கிய தேடுகுழு ஒன்று அமைக்கப் படும். இதில் பல்கலைக்கழகப் பேரவை (senate) உறுப்பினர் ஒருவரையும், பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை (Syndicate) உறுப்பினர் ஒருவரையும் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தப் பல்கலைக்கழகத்துடன் எந்தத் தொடர்பும் கொண்ட வராக இருக்கக் கூடாது. மூன்றாவதாக ஒருவர், மாநில ஆளுநரால் நியமிக்கப்படுவார். இவரே தேடுகுழுவின் ஒருங்கிணைப்பாளர். இந்தத் தேடுகுழு தகுதியானவர் களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, அதில் மூவரைத் தேர்ந்தெடுத்து ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். இதில் ஒருவரைத் துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார். இதுவே தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை.
மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லாமே ஜனநாயக முறையில் நடப்பதாகவே தோன்றும். ஆனால், நடைமுறையில் எல்லாமே அரசியல் நிழலிலேயே நடக்கின்றன. தேடுகுழுவுக்கான பொதுச் சட்டங்கள், வழிகாட்டுதல்கள் என ஏதும் தமிழகத்தில் வரையறுக்கப்படாத சூழலில், ஒவ்வொரு பல்கலைக்கழகத் தேடுகுழுவும் துணைவேந்தருக்கான தகுதி குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த தாகிறது.
கடந்த 20 ஆண்டுகளாகத் துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீடு கண்கூடாகத் தெரிகிறது. அமைச்சர்களின் நேரடி உறவினர்கள், கட்சிக்காரர்கள், தனியார் கல்லூரிகளை நேரடியாகவோ பினாமி மூலமோ நடத்தக்கூடிய பெரும் பணக்காரர்கள், சாதி பலம் கொண்டவர்கள் போன்றவர்களே துணைவேந்தராக வர முடியும் என்ற நிலைக்குத் தமிழகம் வந்துள்ளது. ஒரு ஆட்சியில் அமைச்சரின் மருமகன் என்றால், மற்றொரு ஆட்சியில் அமைச்சரின் மருமகள் என்று பரிசாக வழங்கப்படுகின்றன துணைவேந்தர் பதவிகள்.
துணைவேந்தர் நியமனத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. யூ.ஜி.சி. 2010 விதியின்படி 10 ஆண்டுகள் பேராசிரியராகவோ, அதற்கு இணையான கல்லூரி முதல்வர், ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவோ பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், இந்த விதிகள் எல்லாம் பெயரளவில் மட்டுமே. உதாரணமாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பில், “துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும் இல்லாத நிலை யில், மத்திய அரசு ஏற்படுத்திய விதிகளையே பின்பற்ற வேண்டும். மேலும், பேராசிரியர்கள் நியமனத்திலும் சம்பள நிர்ணயத்திலும் யூ.ஜி.சி. விதியைப் பின்பற்றிவிட்டு, துணைவேந்தர் நியமனத்தில் மட்டும் வசதியாக யூ.ஜி.சி. விதியை மறப்பது அபத்தம்” என்றார் நீதிபதி இராம சுப்பிரமணியன். ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று, உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாததாக்கிவிட்டு பதவிக் காலத்தையும் முடித்துச் சென்றார் அந்தத் துணைவேந்தர். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் துணைவேந்தர் நியமனத்தில் யூ.ஜி.சி. விதியைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
தலித் துணைவேந்தரைக் கண்டடைவோமா?
தமிழகத்தில் தற்போது 20 பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இப்பல்கலைக் கழகங்களில் இதுவரை துணைவேந்தர்களாகப் பதவி வகித்தவர்கள் 150 பேருக்கு மேல் இருப்பார்கள். ஆனால், தமிழக வரலாற்றில் இதுவரை வெறும் 6 தலித்துகளே துணைவேந்தர்களாகப் பதவி வகித்திருக்கிறார்கள்.
அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியை மட்டுமே பார்த்தால், இன்னும் எத்தனையோ தலித்துகள் துணைவேந்தர்களாகி இருக்க முடியும். ஆனால், துணை வேந்தர் பதவி என்பது அரசியல் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பதவி என்றாகிவிட்டதால், பொது அரசியலில் புறக்கணிக்கப்படும் தலித்துகள் உயர் அரசுப் பதவிகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
புறக்கணிப்பின் அரசியல்
இன்றைய சூழலில், தலித்துகளில் ஒருவர்கூடத் துணைவேந்தராக இல்லாமல் இருப்பதும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே எட்டுப் பேர் துணைவேந்தர்களாக இருப்பதையும் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏன் இந்த நிலை என்பதற்கான பதில், அரசியல் சூழலில் இருக்கிறது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பட்டியலை வாங்கிப்பாருங்கள். தலித்துகளை எண்ணி விடலாம். அதேசமயம், ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையான கட்சிப் பதவிகளில் இருப்பதும் கவனத்துக்கு வரும். அமைச்சரவையில் இடம் அளிக்கப் பட்டால்கூட, இங்கே தலித்துகளுக்கான பதவிகளாகப் பார்க்கப்படுபவை பெரும்பாலும், ஆதிதிராவிட நலத்துறை, கால்நடைத் துறை, செய்தித் துறை போன்ற அதிக முக்கியத்துவம் இல்லாத பதவிகள்தானே?
- ஜெ. பாலசுப்பிரமணியம்,
மதுரை - காமராசர் பல்கலைக்கழக இதழியல் - அறிவியல் தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியர்.