Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

பாராலிம்பிக் ஏற்றிய ஒளி!

உ.ஸ்ரீராம்

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்/ வீராங்கனைகள் பெற்றிருக்கும் வெற்றி, தேசத்தைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 1960-ல் தொடங்கிய பாராலிம்பிக்கில் டோக்கியோவுக்கு முன்பு வரை இந்தியா மொத்தமாகவே 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. சராசரியாக ஒரு பாராலிம்பிக்குக்கு 0.8 என்ற எண்ணிக்கையே வருகிறது. உலக அரங்கில் இந்தியா ஒரு பதக்கத்தை வென்றுவிடாதா என ஏங்கித் தவித்திருக்கிறோம். ஆனால், இந்த முறை நிலைமை வேறு. டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் இந்தியா 19 பதக்கங்களை வென்றிருக்கிறது. ஆனால், இத்தகைய வெற்றிக்குப் பின்னால் பல வீரர்/ வீராங்கனைகளின் வலிமிகு வாழ்க்கை ஒளிந்திருக்கிறது.

போலியோவால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கும் 34 வயது பவினா படேல்தான் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வெள்ளியாகப் பெற்றுக்கொடுத்தார். டேபிள் டென்னிஸில் இவர் ஆடிய ஒவ்வொரு போட்டியுமே ‘மீண்டெழுதல்' எனும், வாழ்க்கைக்கு இன்றியமையாத குணாதிசயத்தைப் பயிற்றுவித்தது. அரையிறுதியில் இவரைத் தவிர மூவருமே சீனர்கள். வீழ்த்தவே முடியாத சீன வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

துப்பாக்கிச் சுடுதலில் அவனி லேகாரா தங்கம், வெண்கலம் என்று இரண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக்-பாராலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை இவரே. 19 வயதே ஆன இவர் பட்டாம்பூச்சியாய் பறந்துகொண்டிருந்த 12 வயதில் கார் விபத்தில் சிக்கி, முதுகுத்தண்டில் பலத்த அடி வாங்கி, இடுப்புக்குக் கீழ் மொத்தமாகச் செயலிழந்த நிலைக்குச் சென்றவர்.

இரட்டை இலக்கத்தில் இந்தியா பதக்கம் வெல்லக் காரணமாக அமைந்தது துப்பாக்கிச் சுடுதலும் பேட்மின்ட்டனுமே. துப்பாக்கிச் சுடுதலில் 5 பதக்கங்களையும் பேட்மின்ட்டனில் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ண நாகரின் தங்கம் உட்பட 4 பதக்கங்களையும் இந்தியா வென்றிருக்கிறது.2004, 2016 பாராலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் உலக சாதனையோடு தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா இந்த முறையும் சிறப்பாகச் செயல்பட்டு வெள்ளி வென்றிருக்கிறார். மூன்று தொடர் பாராலிம்பிக்களில் தொடர்ச்சியாக மூன்றாவது பதக்கம். இந்தியர்களுக்கு இதுவரை சாத்தியப்படவே செய்யாத சாதனை இது. சிறுவயதில் விளையாட்டாக மின்கம்பியைத் தொட்டு இடக்கையை இழந்தவர், இன்றைக்கு 40 வயதுக்கு மேலும் நம்பிக்கையோடு இந்தியாவுக்குப் பெரும் புகழைச் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

ஈட்டி எறிதலின் இன்னொரு பிரிவில் இளம் வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றிருக்கிறார். இவருக்கு வழங்கப்பட்ட 6 வீச்சுகளில் 3 வீச்சுகளை உலக சாதனையாக்கிக் காட்டி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். ஹரியாணா மண்ணுக்கே உரிய மல்யுத்த மல்லுக்கட்டுகளோடு வளர்ந்த இவர், ஒரு விபத்தில் காலை இழந்தார். மல்யுத்தத்துக்குச் செல்ல முடியாத நிலை. ஆனால், முடங்கிவிடவில்லை. ஈட்டியைக் கையிலெடுத்தார். இன்று உலகமே சுமித்தைக் கொண்டாடுகிறது.

உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார். 2016-ல் தங்கம் வென்றிருந்தார். இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் ஒலிம்பிக் அரங்கில் கணிசமாகப் பங்கேற்றிருந்தாலும் ஹாக்கி தவிர மற்ற போட்டிகளில் பெரிதாகப் பதக்கம் வென்றதில்லை. அந்தக் குறையைத் தொடர்ச்சியாகப் போக்கிக்கொண்டிருக்கிறார் மாரியப்பன். மாரியப்பனின் கடந்த கால கரடுமுரடான பயணங்கள் அனைவரும் அறிந்ததே.

இப்படி பாராலிம்பிக்கில் ஜொலித்தவர்களையும் அவர்களின் பின்னணிக் கதைகளையும் எழுதினால் பக்கங்கள் கொள்ளாது. அந்த அளவுக்கு இந்திய வீரர்/வீராங்கனைகள் சாதனைகளை நிகழ்த்திவருகின்றனர். ஆனாலும், இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. பாராலிம்பிக்கில் நடைபெறும் 22 போட்டிகளில் 9 போட்டிகளில்தான் பங்கேற்றிருக்கிறோம். இன்னும் வேகமெடுக்க வேண்டும். இந்தியாவைத் தாண்டியும் பாராலிம்பிக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கின்றன. ஒலிம்பிக் தொடங்கப்பட்ட காலத்தில் அது அனைவருக்குமானதாக இருந்திருக்கவில்லை. பெண்கள் பார்வையாளர்களாகக்கூட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக் அப்படியே தேங்கிவிடவில்லை. பரிணாம வளர்ச்சியடைந்தது. அந்த உலக மேடை அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி மெதுமெதுவாக முன்நகர்ந்தது. பெண்கள் பங்களிக்கத் தொடங்கினார்கள். அடுத்த கட்டமாக மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பாராலிம்பிக் தொடங்கப்பட்டது. ஆங்கிலத்தில் ‘Paralympic’ என்பதை ‘Parallel Olympics’ எனவும் புரிந்துகொள்ளலாம். முதலில் தனியாக நடைபெற்றுக்கொண்டிருந்த பாராலிம்பிக்ஸ், கொஞ்ச காலத்துக்குப் பிறகு கோடைக்கால ஒலிம்பிக்குடன் இணைந்தே நடக்கும் நடைமுறை உண்டானது. அந்த ஒலிம்பிக்குக்குக் கொடுக்கப்படும் அத்தனை கவனமும் பாராலிம்பிக்ஸுக்கும் கொடுக்கப்பட்டது. எல்லாரையும் உள்ளடக்கிய எல்லாருக்குமான சமதள வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஒலிம்பிக்கின் எத்தனிப்பு போற்றப்பட வேண்டியது. அந்த எத்தனிப்பின் வெளிப்பாடாக இந்த முறை மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய அகதிகள் அணி முதல் முறையாக பாராலிம்பிக்கில் பங்கேற்றிருந்தது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் பாராலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. அப்போதும்கூடத் தொடக்க விழா அணிவகுப்பில் தன்னார்வலர்கள் மூலம் ஆப்கானியக் கொடியை ஏந்தச் செய்து, அந்த நாட்டுக்கான ஒரு அங்கீகாரத்தையும் கண்ணியத்தையும் உறுதிசெய்திருந்தனர். பாராலிம்பிக்கில் பங்கேற்க விரும்பிய இரண்டு ஆப்கானிய வீரர்/வீராங்கனைகள் பலகட்டப் போராட்டத்துக்குப் பிறகு டோக்கியோவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொருவரும் தன்னளவுக்கே உரிய பாதிப்புகளையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். இப்படியான சூழலில் ஒட்டுமொத்த உலகத்துக்குமே தேவையான நம்பிக்கைக் கீற்றை பாராலிம்பிக் வீசியிருக்கிறது. டேபிள் டென்னிஸில் எகிப்து சார்பில் இப்ராஹிம் ஹமத்து எனும் வீரர் பங்கேற்றிருந்தார். ரயில் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவர். மட்டையை வாயில் பிடித்துக்கொண்டு கால் விரல்கள் மூலம் பந்தைத் தூக்கிப்போட்டு, சர்வ் அடித்து ஆடினார். கடைசி மூச்சு இருக்கும் வரை எந்த முற்றுப்புள்ளியும் நம்மை நெருங்கிவிடக் கூடாது. அதற்குத் தேவை தன்முனைப்பு. அந்தத் ‘தன்முனைப்பு' என்பதற்கான உயிர் சாட்சியாக அத்தனை பேர் மனதிலும் இப்ராஹிம் ஹமத்தின் சித்திரம் பதிய வேண்டும்!

- உ.ஸ்ரீராம், விளையாட்டு விமர்சகர். தொடர்புக்கு: sriramanarayanan3199@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x