

பிரான்ஸில் மக்கள் மன்னராட்சியைக் கவிழ்த்ததற்கு ‘எல் நினோ’ ஒரு மறைமுக உந்துசக்தி
சென்னையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தின் தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டுவிட்டனர். எனினும், அம்மழை ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் இழப்புகள் மக்கள் மனதிலிருந்து அத்தனை சீக்கிரம் மறைந்துவிடாது. எனவே, ‘மாமழை போற்றுதும்’ என்று சென்னையில் யாரிடமும் சொல்லிவிட முடியாது.
வழக்கமாக இந்தியத் துணைக் கண்டத்தில் தென் மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். அதன் பிறகு சிறிது நாட்களுக்கு நல்ல வெயில் காயும். அக்டோபர் மத்தியிலிருந்து நவம்பர் இறுதிவரை வடகிழக்குப் பருவமழை பெய்யும். 1913-ம் ஆண்டில் தென்மேற்குப் பருவமழை அக்டோபருக்குப் பிறகும் நீடித்து, இந்தியாவின் மேற்கு - வடக்கு மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், டெல்லி போன்ற இடங்களில் கொட்டித் தீர்த்தது.
வானிலை நிபுணர்கள் ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ எனப்படும் விளைவுகளின் மேல் பருவ மழைக்கால மாறுபாடுகளுக்கான பழியைச் சுமத்துகிறார்கள். உலக ளாவிய வெப்ப நிலை உயர்ந்ததும், ‘மாடன் - ஜூலியன் காற்றலைவு’ என்ற விளைவும் இந்தியாவில் காலமில்லாத காலத்தில் கடும் மழை பொழியக் காரணமாகின்றன என்று ஐ.நா. நிபுணர்கள் கருதுகிறார்கள். ‘மாடன் ஜூலியன் காற்றலைவு’ என்பது புவியின் வெப்பமண்டலத்தில் அவதரித்து கிழக்குத் திசையில் பயணித்து, வெப்ப மண்டல நாடுகளைச் சுற்றிவரும் ஒரு வட்டக் காற்றோட்டம். அதன் விளைவாக வெப்ப மற்றும் தரைமட்ட வெப்ப நிலைகளில் தாக்கம் தோன்றும். அதன் காரணமாகச் சில இடங்களில் பெரும் மழை மற்றும் வெள்ளங்களும் வேறு சில இடங்களில் கடும் வறட்சியும் தோன்றும். 1913-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்கு அதுவே காரணமாயிற்று.
எல் நினோ பாதிப்புகள்
‘எல் நினோ’ என்பது பசிபிக் பெருங்கடலில் நீண்ட காலத்துக்குச் சராசரியைவிடக் கடல்பரப்பு வெப்பநிலை அதிகமாகிவிடுவதாகும். இந்த அதிகம் என்பது சுமார் அரை டிகிரி செல்சியஸ் மட்டுமே. ஆனாலும் அது உலகளாவிய அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்து கிறது. அது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றிச் சில மாதங்களுக்கு நீடிக்கும். அதன் காரணமாக இந்தியப் பெருங்கடல், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் வளியழுத்தம் உயரும். ஆஸ்திரேலியாவுக்கும் தென்அமெரிக்காவுக்கும் இடையிலான பசிபிக் கடலின் மையப் பகுதி மற்றும் கிழக்குப் பகுதி, டகிடி தீவுக் கூட்டம் போன்ற இடங்களில் வளியழுத்தம் குறையும்.
தென்பசிபிக் பகுதிகளில் பருவக்காற்று வலுவிழக்கும் அல்லது கிழக்கே நகரும். பெரு நாட்டின் அருகில் வெப்பக் காற்று மேலே எழும்பி அந்நாட்டின் வடபகுதிப் பாலைவனங்களில் மழையைப் பொழிவிக்கும். இந்தியப் பெருங்கடலில் இருந்தும் மேற்கு பசிபிக் கடலில் இருந்தும் சூடான கடல்நீர் கிழக்கு பசிபிக் கடலுக்குப் பாயும். அதன் கூடவே மழையும் நகர்ந்து மேற்குப் பசிபிக் பகுதியில் பரவலாகவும், கிழக்கு பசிபிக் பகுதியில் வழக்கத்துக்கு மாறாகவும் பெய்யும். சூடான கடல்நீர் கிழக்கே இடம் பெயர்வதன் மூலம், கடல்வாழ் உயிரிகளுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் நிறைந்த குளிர்ச்சியான நீர் கீழேயிருந்து கடலின் மேற்பரப்புக்கு வராமல் தடுக்கப்படும். அதன் காரணமாக மீன் வளம் குறையும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
‘எல் நினோ’ தோன்றும் ஆண்டுகளிலும் நடுநிலையான ஆண்டுகளிலும் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் ஜப்பான், கொரியா போன்ற நாடுகளை வழக்கமாகத் தாக்கும் புயல்களின் எண்ணிக்கை குறையும். தென்கிழக்கு ஆசியா, வடஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வறட்சி, காட்டுத்தீ, காற்றில் தூசிச் செறிவு அதிகரிப்பு, காற்றில் தூய்மைக் கேடு போன்றவை ஏற்படும்.
பஞ்சமும் வறட்சியும்
கடந்த 10,000 ஆண்டுகளாகவே சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ‘எல் நினோ’ தோன்றுகிறது. அதனால் ஏற்படும் வெப்ப நீரோட்டம் பெரும்பாலும் கிறிஸ்துமஸ் பருவத்தில் தென்பட்டதால் பெரு நாட்டு மாலுமிகள் ‘பாலகன்’ எனப் பொருள்படும் ‘எல் நினோ’ என்ற பெயரை அதற்குச் சூட்டினார்கள். முன்பு கொலம்பி யாவிலும் பெருவிலும் செழித்திருந்த புராதனச் சமூகங்கள் அழிந்துபோனதற்கு அவை காரணமாயின. 1789 -1793 காலகட்டத்தில் அவை ஐரோப்பாவில் உணவு உற்பத்தியைப் பாதித்தன. பிரான்ஸில் உணவு கிடைக்காத மக்கள் புரட்சி செய்து மன்னராட்சியைக் கவிழ்த்ததற்கு ‘எல் நினோ’ ஒரு மறைமுக உந்துசக்தியாக இருந்தது. 1876-77 களில் எல் நினோக்கள் உலகின் பல பகுதிகளில் கடும் வறட்சியையும் பஞ்சத்தையும் தோற்றுவித்தன.
‘எல் நினோ’வுக்கு நேர் எதிரான விளைவுகளை ‘லா நினா’ என்ற நிகழ்வு ஏற்படுத்துகிறது. அச்சொல்லுக்கு ‘சிறு பெண்’ என்று பொருள். அது நிலநடுக்கோட்டுப் பகுதியில் மத்தியக் கிழக்கு பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலையை 3.5 டிகிரி செல்சியஸ் வரை குறையச் செய்யும். இந்தியாவைப் பொறுத்தவரை எல் நினோ தென்மேற்குப் பருவ மழையின் போக்கைக் குலைக்கிறது. ஆனால், லா நினா சரியான நேரத்தில், சரியான அளவில் மழை பொழியவைக்கும். அதன் செயல்பாட்டின் காரணமாக 2010-ம் ஆண்டில் சாதகமான தென்மேற்குப் பருவமழை அமைந்தது.
ஆனால், அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ் லாந்து பிராந்தியத்திலும் தென்கிழக்கு பிரேசிலிலும், இலங்கையிலும் பெரு மழையும் புயலும் தோன்ற ‘லா நினா’வைக் காரணமாகச் சொல்கிறார்கள். அதே ஆண்டில் வடஅமெரிக்காவில் கடும் பனிப்புயல்களும் அதன் மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் கடுமையான டோர்னடோ புயல்கள் தோன்றியதற்கும் டெக்சாஸ், வோக்லஹாமா, அர்க்கன்சாஸ் மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டதற்கும் அதுவே காரணமாயிற்று. 2011-ம் ஆண்டில் உலகளாவிய வளிமண்டல வெப்பநிலை சற்று குறைந்து பூமித் தரைப்பரப்பின் வெப்ப நிலை சற்று கூடியது. உலகின் சராசரி மழையளவு அதிகரித்தபோதிலும் கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி நிலவியது.
ஐ.நா.வின் சர்வதேச வானிலைக் கணிப்பு அமைப்பு இனி வரும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் மழைப்பருவம் முன்னதாகத் தொடங்கித் தாமதமாக முடியும் என்று கணித்துள்ளது. அதற்கு உலகளாவிய வளிமண்டல வெப்ப நிலை உயர்வதும் கடல் பரப்பிலிருந்து அதிகமாக நீராவி வெளிப்பட்டு நிலப்பரப்புக்கு வந்து மழையாகப் பொழிவதும் காரணமாயிருக்கலாம்.
இது எல்லா ஆண்டுகளிலும் நிகழாமல் போனாலும் ஓரிரு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அதிகத் தீவிரத்துடன் நிகழும். அதற்கேற்ற வகையில் விவசாயிகள் தமது சாகுபடிக் கால அட்டவணையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். மழை நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளப் போதுமான நீர்நிலைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.