

பிரிட்டிஷ் இந்தியாவின் ஏனைய மாகாணங்களில் சுதந்திரப் போராட்டம்தான் பிரதான பிரச்சினை. அங்கெல்லாம் காங்கிரஸே பிரதான கட்சி.
ஆனால், சென்னை மாகாணத்தில் பிராமணர் - பிராமணர் அல்லாதார் விவகாரமே மையப் பிரச்சினை. சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பிராமணர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக பிராமணர் அல்லாதாரின் உரிமைக் குரலாக ஒலித்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்கிற நீதிக் கட்சிதான் களத்தில் காங்கிரஸின் அரசியல் எதிரி.
ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியானபோது காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தது. தேர்தல் புறக்கணிப்பு என்று கல்கத்தா காங்கிரஸ் மாநாடு தீர்மானித்துவிட்டது. அதில் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களுக்கு விருப்பமில்லை. ஆனாலும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டனர். அப்போது நீதிக் கட்சிக்கு எதிராகத் தேர்தல் களத்தில் நின்றது ஹோம்ரூல் கட்சி. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆசியோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி.
காங்கிரஸ் ஆதரவாளர்களும் தேர்தல் விரும்பிகளும் நீதிக் கட்சிக்கு எதிராக ஹோம்ரூல் கட்சி சார்பில் போட்டியிட்டனர். மேலும், சென்னை மாகாணச் சங்கம், முஸ்லிம் லீக் மற்றும் சுயேச்சைகள் களத்தில் இருந்தன. ஆக, போட்டி நீதிக் கட்சிக்கும் காங்கிரஸின் மறைமுக ஆதரவோடு போட்டியிட்ட ஹோம்ரூல், சுயேச்சைகளுக்கும்தான். 30 நவம்பர் 1920 அன்று வன்முறை, கலவரம், தகராறுகளுக்கு மத்தியில் தேர்தல் நடந்துமுடிந்தது.
களத்தில் காங்கிரஸ் நேரடியாக இல்லாததால் நீதிக் கட்சியின் வெற்றி சுலபமானது. தேர்தல் நடந்த 98 இடங்களில் 63 இடங்களை நீதிக் கட்சி வென்றது. எஞ்சிய இடங்களை ஹோம்ரூல் கட்சியினரும் சுயேச்சைகளும் கைப்பற்றினர். பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்சினை பிரதான தேர்தல் பிரச்சினையாக முன்னிறுத்தப்பட்ட தேர்தலில் நீதிக் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது சென்னை மாகாண அரசியலில் முக்கியமான திருப்புமுனை.
17 டிசம்பர் 1920 அன்று நீதிக் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதல் அமைச்சராகத் (First Minister) தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமராய நிங்காரும் வேங்கட்ட ரெட்டி நாயுடுவும் முறையே இரண்டாம், மூன்றாம் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் களமிறங்காவிட்டால் எது நடக்கக்கூடும் என்று சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்கள் பயந்தார்களோ அதுவே நடந்தேறியது. அது அவர்களை உந்தித்தள்ளியது.
மாகாணங்களின் ஆட்சிக் காலம் மூன்றாண்டுகள் மட்டுமே. அதுவரைக்கும் அமைதி காப்போம். அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் நீதிக் கட்சியை வீழ்த்தியாக வேண்டும். அதற்கு ஏதுவாகத் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், அதற்கு காந்தியும் காங்கிரஸும் சம்மதிக்கவில்லை. விளைவு, காங்கிரஸ் கட்சியின் முதல் அதிகாரபூர்வ பிளவு அரங்கேறியது!
- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: kalaimuthukumar@gmail.com
(கோஷம் போடுவோம்)