

புகழ்பெற்ற ஐஸ்கிரீம் நிறுவனமான பென் அண்ட் ஜெர்ரிஸ், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாகச் சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த, யூதர்கள் நடத்தும் நிறுவனமான பென் அண்ட் ஜெர்ரிஸின் இந்த அறிவிப்பு இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கடும் கண்டனத்தையும் சர்வதேச அளவில் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. யூதர்களாக இருப்பதில் பெருமைப்படும் அதே நேரத்தில், இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாளர்களாக இருந்தாலும் அந்நாட்டின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கொள்கையை எதிர்க்கிறோம் என்ற தங்கள் நிலைப்பாட்டை அவர்கள் அறிவித்துள்ளனர். ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளும் தங்கள் நிலைப்பாடு ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் வலுப்படுத்துவது என்றும் கூறியுள்ளனர்.
பேரிடர் சூழல்களிலும்கூட மக்களின் துயரங்களிலும் லாபத்தை ஈட்டும் பெருநிறுவனங்களையே கண்டுவரும் சூழலில், பென் அண்ட் ஜெர்ரிஸ் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனர்களான கோஹனும் கிரீன்பீல்டும் தங்கள் வர்த்தகத்துக்கும் லாபத்துக்கும் எதிரான முடிவொன்றை எடுத்துள்ளது அபூர்வமானது. தங்கள் நிலைப்பாடு குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் எழுதிய குறிப்பில், பரந்த பொது நலனை முன்னிட்டு, தங்கள் சக்தியையும் செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
“சமூகத்தில் வர்த்தகம் என்பது மிக சக்திவாய்ந்த உறுப்புகளில் ஒன்று என்பதை நாங்கள் நம்புகிறோம். பரந்த பொது நன்மைக்காகத் தங்கள் சக்தியையும் செல்வாக்கையும் நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டியது அவற்றின் பொறுப்பு என்றும் கருதுகிறோம். தனிநபர்களின் வாழ்வில் உள்ளதைப் போலவே வர்த்தகத்தின் ஒரு பகுதியாக ஆன்மிக அம்சமும் இருக்கிறது என்பதை எங்கள் அனுபவத்தில் கண்டுணர்ந்துள்ளோம். கொடுக்கும்போதுதான் பெறவும் முடியும்.”
பென் அண்ட் ஜெர்ரிஸின் இந்த நடவடிக்கை புதிதொன்றும் அல்ல. உலக அமைதியை முன்னிட்டு அமெரிக்கா தனது ராணுவ நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிறுவனம் இது. 1991-ல் தொடங்கிய வளைகுடா போரையும் எதிர்த்த நிறுவனம் இது. தேசியப் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் பணத்தை உலகம் முழுக்க நடக்கும் சமாதான நடவடிக்கைகளுக்கு ஒதுக்கும்படி வலியுறுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ‘பீஸ் பாப்’ என்ற ஐஸ்கிரீம் குச்சியை அறிமுகப்படுத்தி, அதன் விற்பனையில் ஒரு சதவீதத்தைக் கொடுத்த நிறுவனம் இது.
பென் அண்ட் ஜெர்ரிஸ் அளித்திருக்கும் அறிக்கையில், இஸ்ரேலின் ஜனநாயகப் பிராந்தியத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதியையும் பிரித்துக் காட்டியுள்ளது. இஸ்ரேலின் ஜனநாயகரீதியான எல்லைகளுக்கு வெளியே தங்கள் வர்த்தகத்தை நிறுத்துவது இஸ்ரேலைப் புறக்கணிக்கும் செயல் அல்ல என்றும் கூறியுள்ளது.
இரண்டாயிரமாவது ஆண்டில் பென் அண்ட் ஜெர்ரிஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை யுனிலிவர் வாங்கியது. ஆனாலும், பென் அண்ட் ஜெர்ரிஸ் என்னும் பிராண்டின் கொள்கைகளையும் சமூகரீதியான பொறுப்பையும் விட்டுக்கொடுக்காத நிலையிலேயே யுனிலிவருடனான ஒப்பந்தம் இன்னும் நீடிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. லட்சியமும் சமூகப் பொறுப்பும்தான் பென் அண்ட் ஜெர்ரியின் இதயம் என்று அதன் நிறுவனர்கள் தங்கள் கடப்பாட்டை உறுதிசெய்துள்ளனர்.
அமெரிக்க மாகாணமான வெர்மாண்டில் செயல்படாத நிலையில் இருந்த பழைய எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 43 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய கடையாகத் தொடங்கப்பட்ட நிறுவனம், பெரிய பிராண்டாக நீடித்திருப்பதற்குத் தாங்கள் பகிர்ந்துகொள்ளும் மதிப்பீடுகள்தான் காரணம் என்று கூறியுள்ளனர். தாராளவாத எண்ணமுடைய இரண்டு நண்பர்களான பென் கோஹனும் ஜெர்ரி கிரீன்பீல்டும் சேர்ந்து புதிய வகை ஐஸ்கிரீம்களோடு தங்கள் முற்போக்கு எண்ணங்களையும் அமெரிக்கா முழுவதும் பரப்ப உருவாக்கிய நிறுவனம்தான் பென் அண்ட் ஜெர்ரிஸ்.
அமெரிக்காவில் இஸ்ரேலின் நடவடிக்கை களுக்கு எதிராகத் திரளும் மக்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாகவே பென் அண்ட் ஜெர்ரிஸின் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. நிறவெறிக்கு எதிரான இயக்கம் நடக்கும்போதும் அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்களை அந்த இயக்கத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. நிறவெறிக்கு எதிராக அடித்தளத்திலிருந்து சாதாரண மக்களும் குரல்கொடுக்கத் தொடங்கிய போதுதான் அங்குள்ள நிறுவனங்களும் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கின. சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்துக்கும் நைக் போன்ற ஷூ நிறுவனங்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவித்தன.
கடந்த மே மாதம் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 253 பாலஸ்தீனிய மக்களும் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 12 இஸ்ரேலியர்களும் பலியானதைத் தொடர்ந்து, பென் அண்ட் ஜெர்ரிஸ் சமூக ஊடகங்களில் இருபது நாள் மௌனம் அனுஷ்டித்தது. அமெரிக்க வாக்காளர்களிடம், குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் யூத மக்களில் ஒரு பகுதியினர், இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கத் தொடங்கியுள்ளதைச் சமீபத்தில் வந்துள்ள கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால், வழக்கம்போல, இஸ்ரேலின் அரசியல்வாதிகள் பென் அண்ட் ஜெர்ரிஸ் நிறுவனத்தை யூத எதிர்ப்பாளர்கள், தீவிரவாதிகள் என்று வசைபாடத் தொடங்கியுள்ளனர்.
லாபமும் தனிநலனும் ஆளும் தரப்புகளின் முகம் கோணாமல் நடந்துகொள்வதுமே வர்த்தகம் என்று கருதப்படும் காலகட்டம் இது. இந்தப் பின்னணியில் பென் அண்ட் ஜெர்ரிஸ் போன்ற அபூர்வமான நிறுவனங்கள், குறுகிய தனிநலனைத் தாண்டி, பரந்த பொது நலன்தான் முக்கியமானது என்ற விழுமியத்துடன் தனது நலனுக்கு எதிராகவே முன்னுதாரணமான முடிவொன்றை எடுத்துள்ளது.