அந்தக் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை

அந்தக் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை
Updated on
2 min read

சென்னையின் கடும் மழைக்குச் சில நாட்களுக்கு முன்பாக பாரிஸில் நடக்கும் விழா ஒன்றுக்கான பயணத் திட்டத்தைத் துவக்கியபோது, அந்நகரத்தில் நிகழ்ந்திருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த குழப்பம் மனதில் ஊடாடிக்கொண்டிருந்தது. பலமுறை அங்கு சென்றிருந்தாலும், இப்போது காணவிருக்கும் அந்நகரம் முன்பு நான் பார்த்ததைப் போல இருக்குமா என்னும் குழப்பம்.

நியாயமாகப் பார்த்தால் பயம்தான் உண்டாகியிருக்க வேண்டும் என்றாலும், பாரிஸைப் பார்த்துப் பயம் கொள்வது என்பது எனக்குச் சாத்தியமில்லாத விஷயம்.

தோஹாவிலிருந்து பாரிஸ் நோக்கிய பயணம் துவங்கியபோது, அந்தப் பிரம்மாண்டமான இரண்டடுக்கு போயிங் விமானத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாகக் கிடந்தன. விமானப் பணியாளரிடம், ‘‘என்ன இப்படி’’ என்றேன். ‘‘கேன்சல் நிறைய’’ என்றவர், சென்னையின் கடும் மழை குறித்து விசாரித்தார். அப்போதைக்கு வெள்ளம் ஏதும் இல்லை.

பாரிஸின் நிலை ஓரளவுக்கு விமானத்தில் தெரிந்தது எனில், மீதியைப் பிரமாண்டமான சிடிஜி விமான நிலையத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. காலியாகக் கிடந்த விமான நிலையத்தையும் ஒரு சில நிமிடங்களில் முடிந்த கடவுச்சீட்டுப் பரிசோதனையையும் வியந்தபடி வெளியே வந்தேன். மறுநாள் நான் நடுவராகக் கலந்துகொண்ட படவிழாவில் இரவு நேரத் திரையிடல்களுக்குப் பார்வையாளர்கள் குறைவாகவே வந்தனர். எல்லோரும் பயந்ததுபோலவே அந்நகரம் தன் இயல்பிலிருந்து விலகிவிட்டதோ என்று தோன்றியது.

தெருக்களில், மெட்ரோவில், சுற்றுலாத் தலங்களில் வழக்கத்துக்கு மாறாக எண்ணற்ற காவல் துறையினரையும், ராணுவத்தினரின் நடமாட்டத்தையும் மட்டும்தான் காண முடிந்தது. தன்னுடைய தனித்துவத்தை இழந்துவிடாமலிருக்க அந்நகரம் சற்றுத் தடுமாறுவதுபோலத் தோன்றியது.

தாக்குதலுக்குப் பிறகு, சில நாட்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் டவரின் கீழாகவும், லூவர் மியூசியத்தின் சுற்றுப்புறத்திலும் விக்டர் ஹியூகோ மற்றும் நாட்டர் டாம் தேவாலயம் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மேலதிகக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. எங்கு திரும்பினாலும் காணப்பட்ட ராணுவ நடமாட்டத்துக்கு அங்கு துவங்கியிருந்த உலக வெப்பமயமாதல் குறித்த மாநாடும் ஒருகாரணமாக இருக்கக்கூடும். அப்போது அங்கு மாகாணத் தேர்தலும் நடந்துகொண்டிருந்தது.

அராபியர்களாலும், கறுப்பர்களாலும், இந்தியர்களாலும், விபசாரத்துக்காகத் தெருக்களில் நின்றுகொண்டிருக்கிற சீனப் பெண்கள், குளிரில் விறைத்தபடி பிச்சையெடுக்கும் பல்வேறு நாடுகளின் அகதிக் குடும்பங்கள் ஆகியோரால் சூழப்பட்ட தெருக்களிலும் பிற இடங்களிலும் நடந்து திரிந்தபோது பாரிஸின் சமூக வாழ்வியலில் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை. ஒரு நாடோ அல்லது நகரமோ அவ்வளவு எளிதில் தனது இயல்பினை விட்டுக்கொடுத்துவிடுமா என்கிற நம்பிக்கை ஏற்பட்டது.

ஒரு நாள் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் பாஸ்போர்ட் சோதனைக்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்து, ஒவ்வொரு பயணியாகச் சோதனைசெய்துகொண்டிருந்தார்.

அவருடன் வந்த ஒரு ராணுவ வீரர் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில், நீட்டிய துப்பாக்கியோடு எங்கள் அசைவுகளைக் குரூரமான கூரிய விழிகளால் கண்காணித்தபடி நின்றுகொண்டிருந்தார். ஒரு நொடிதான். அதற்கு மேல் அந்தக் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. பீதியினால் உந்தப்பட்டுத் தலையை மடியில் புகுத்திக்கொண்டேன். சின்னஞ்சிறிய சந்தேகத்துக்கிடமான அசைவு கிடைத்தாலும் குண்டுகளைப் பொழியத் தயங்காத துப்பாக்கியும், அதில் பதிந்திருந்த விரல்களும், கூர்மையான பார்வையும் உருவாக்கிய பீதி இன்றும் எனக்குள் மிச்சமிருக்கிறது.

இஸ்லாமியர்களை மனப்பூர்வமாக வரவேற்ற அந்த நாடு, இனி அப்படி இருக்கப்போவதில்லை என்பது பல காட்சிகளின் மூலமும் நுட்பமான சில அறிகுறிகள் மூலமாகவும் தெரிந்தது. இனி வரும் காலங்களில் அதுவும் உலகின் அநேக நகரங்களைப் போல ஆகிவிடலாம். சமீபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஆகப் பெரிய மாற்றம் இது.

உலக வெப்பமயமாதலின் விளைவாக பாரிஸில் கடந்த இரண்டாண்டுகளாகப் பனிப்பொழிவு இல்லை. இவ்வருடமும் இருக்காது என்றே நம்பப்படுகிறது என்றார்கள்.

விடைபெற்றது பனிப்பொழிவு மட்டுமல்ல!

- சல்மா, கவிஞர், ‘மூன்றாம் ஜாமங்களின் கதை’ நாவலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: tamilpoetsalma@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in