

இந்திய, தமிழ்ச் சிந்தனை, இலக்கிய மரபை அறிந்து அது இந்திய, தமிழ் மனத்தின் மேல் செலுத்தும் தாக்கத்தை நவீனத்தில் நின்று பரிசீலித்த அபூர்வமான எழுத்தாளர்களில் ஒருவர் நகுலன். இயற்பெயர் டி.கே.துரைசாமி. பாரதியின் கண்ணம்மாவைப் போல, இகரமுதல்வியாக சுசீலா என்ற மந்திரத்தன்மை கொண்ட கதாபாத்திரம், நகுலனின் சொல்வழியாக நித்தியமாக ஜீவித்துக்கொண்டிருக்கிறது. 1921-ல் கும்பகோணத்தில் பிறந்த நகுலன், திருவனந்தபுரத்தில் 14 வயதில் குடியேறியவர். தமிழின் சிறந்த விமர்சகர்களில் ஒருவரும் நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளருமான க.நா.சு.வின் தாக்கத்தைக் கொண்டிருந்த நகுலன் நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கியவர். ‘நிழல்கள்’ (1965), ‘நினைவுப் பாதை’ (1972), ‘நாய்கள்’ (1974), ‘நவீனன் டைரி’ (1978), ‘இவர்கள்’ (1983), ‘சில அத்தியாயங்கள்’ (1983), ‘வாக்குமூலம்’ (1992) ஆகிய ஏழு நாவல்களும் வெவ்வேறு பதிப்பகங்களாலும், சொந்தச் செலவிலும் பிரசுரிக்கப்பட்டவை. எட்டாவதாகப் பிரசுரமான ‘அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி’ நாவல் 2002-ல் ‘காவ்யா’ பதிப்பகம் வெளியிட்ட ‘நகுலன் நாவல்கள்’ என்ற தலைப்பிலான முழுமையான தொகுப்பில் நேரடியாக இடம்பெற்றது. வேதங்கள், உபநிடதங்கள், பழந்தமிழ் இலக்கியங்களின் ஓசையையும் அமைதியையும் உள்வாங்கி, இவர் தொடக்கத்தில் எழுதி வெளியிட்ட கவிதைத் தொகுதிகள் ‘மூன்று’, ‘ஐந்து’. பின்னர், ‘கோட்ஸ்டாண்ட் கவிதைகள்’ மூலம் இன்னொரு பருவத்துக்குள் மிகவும் நவீனமான கவிஞராக உருமாற்றம் அடைந்த கவிமொழி அவருடையது. 1968-ல் நகுலன் ஆசிரியராக இருந்து கொண்டுவந்த ‘குருக்ஷேத்திரம் இலக்கியத் தொகுப்பு’ தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் முக்கியமான முயற்சியாகும். ஆங்கிலத்திலும் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதியவர். திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவனீயோஸ் கல்லூரியில் நாற்பது ஆண்டுகளாக ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். நகுலனின் இறுதிக் காலத்தில் அபூர்வமான கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை எடுத்து அவரது கவிதைகளோடு, புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியிட்ட ‘கண்ணாடியாகும் கண்கள்’ தொகுப்பானது, நகுலன் குறித்த அபூர்வமான ஆவணம். திருவனந்தபுரத்தில் இறுதிவரை தனிமைவாசத்திலேயே இருந்து மறைந்தார் நகுலன்.