

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில்லை. எனினும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர் என்ற கருப்பினச் சிறுவனுக்கு (வயது 14) மரண தண்டனை அளிக்கப்பட்டது இன்றுவரை சர்ச்சையாக இருக்கிறது. தெற்கு கரோலினாவில் உள்ள கிளாரண்டன் கவுன்ட்டி பகுதியில் இரண்டு வெள்ளைக்காரச் சிறுமிகளைக் கொன்றதாக அவன் மீது குற்றம்சாட்டப்பட்டது. 1944 மார்ச் 24-ல் ஜார்ஜ் கைது செய்யப்பட்டான். ஒரு மாதத்துக்குப் பிறகு விசாரணை நடந்து அவன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 1944 ஜூன் 16-ல் மின்சார நாற்காலியில் அமர்த்தி மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்டான். அவன் உண்மையான குற்றவாளியா என்பதைத் தெரிந்துகொள்ள யாரும் அக்கறை காட்டவில்லை என்பதுதான் சோகம். அத்துடன் அவனது குடும்பத்தினரும் நகரை விட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் அதற்கு முன்னால் கிரிமினல் வழக்குகளில் ஆஜரானதே இல்லை. தன்னுடைய வாதத்துக்கு வலுசேர்க்க அவர் யாரையுமே சாட்சியாக அழைக்கவில்லை. வழக்கு விசாரணை 3 மணி நேரம் மட்டுமே நடந்தது. ஜூரி என்று அழைக்கப்படும் நடுவர் 10 நிமிஷத்தில் தனது கருத்தைத் தெரிவித்தார்.
20-ம் நூற்றாண்டில் அரசால் மரண தண்டனை வழங்கப்பட்ட மிகக் குறைந்த வயதுச் சிறுவன் அவன்தான். உருவம் மிகச் சிறியதாக இருந்ததால் அவனைச் சுற்றி பெல்ட் போட்டு அவனை நாற்காலியுடன் சேர்த்துக் கட்டுவதே காவலர்களுக்குக் கடினமாக இருந்தது. தண்டனை நிறைவேற்றப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு அலாஸ்கா மாநிலத்தின் மான்ட்கோமரி நகரில் உள்ள ‘சமநீதிக்கான முயற்சிகள்’ என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரியான் ஸ்டீவன்சன் ஜார்ஜுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அவன் குற்றவாளி அல்ல என்று தெரிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இன்றும் அதுதொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மெளனம் காக்கிறது கிளாரண்டன் கவுன்ட்டி. உண்மை அந்தச் சிறுவனுடன் சேர்ந்தே கருகிவிட்டது!
- தி நியூயார்க் டைம்ஸ்