

பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்துக்காக உருவாக்கப் படவில்லை. நாட்டின் அடிப்படை கட்டுமானத்துக்கும், ஒட்டுமொத்தப் பொருளா தார வளர்ச்சிக்கு உதவவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அரசால் மக்களின் வரிப் பணத்திலிருந்து உருவாக்கப்பட்டவை. ஆனால், இந்த நோக்கங்களைத் தாண்டியும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏராளமான லாபம் ஈட்டுகின்றன. இது அரசைச் சென்றடைகிறது.
லாபங்கள் எவ்வளவு?
2013-14ல் வெளியிடப்பட்ட பொதுத்துறைக் கணக் கெடுப்பு 2004-05ல் 143 பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கின. இந்த எண்ணிக்கை 2013-14-ல்
163 ஆகக் கூடியது. மொத்த லாபம் ரூ.74,432 கோடியிலிருந்து ரூ.1,49,164 கோடியாக உயர்ந்தது. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் 2013-14-ல் அரசுக்குப் பங்கு ஆதாயமாக ரூ.65,115 கோடியும், வட்டியாக ரூ.8,700 கோடியும் கொடுத்துள்ளன.
பல நூல் ஆலைகள் நஷ்டத்தில் இயங்கியபோது, தொழிலாளர்களின் நலம் காப்பதற்காகவும், ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும் அரசு 1968-ல் தேசிய ஜவுளிக் கழகத்தை (National Textile Corporation) உருவாக்கி 23 ஆலைகளை ஏற்றது.
தனியார் வங்கிகள், கிராமப்புற மக்களுக்கும் விவசாயம் மற்றும் சிறுதொழில் முனைவோருக்கும் கடன் கொடுக்காமல், தங்கள் உறவினர்களுக்கு மட்டுமே கடன் வழங்கிய சூழ்நிலையில், 1969-ல் மத்திய அரசு 14 தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்றியது.
1969-லிருந்து 2014 வரை 23 தனியார் வங்கிகளை அவை முறையாகச் செயல்படாததாலும், நஷ்டத்தில் இயங்கியதாலும் அரசு உத்தரவுப்படி பொதுத்துறை வங்கிகள் தங்களுடன் இணைத்துக்கொண்டு லாபகரமாகச் செயல்படுகின்றன. இந்தியாவிலுள்ள 98% கிராமங்களுக்கு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.தான் தொலைபேசி இணைப்புகளைக் கொடுத்துள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்தான் (ஒஎன்ஜிசி) இந்தியாவில் எங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறது எனக் கண்டுபிடித்து, அதனைப் பிரித்தெடுத்து இந்திய மக்களுக்குக் கொடுக்கிறது. தனியார் நிறுவனமான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், ஒஎன்ஜிசியின் எரிவாயுவில் ரூ.30,000 கோடி மதிப்புள்ள எரிவாயுவைத் திருடியுள்ளதாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
நம் நாட்டுக்குத் தேவையான எரிசக்தியில் பெரும்பங்கை இந்திய நிலக்கரி நிறுவனம்தான் தருகிறது. நெய்வேலி அனல் மின் திட்டம் ரூ.2.30-க்கு ஒரு யூனிட் மின்சாரம் வழங்குகிறது. ஆனால், அதானி குழுமம் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 7.01 கேட்கிறது.
இந்திய ரயில்வே துறை மிகக் குறைந்த கட்டணத்தில் ஒரு நாளைக்கு 2 கோடியே 30 லட்சம் பயணிகளைத் தினமும் ஏற்றிச் செல்கிறது. ரயில்வே தன் கையில் 10.65 லட்சம் ஏக்கர் நிலம் வைத்துள்ளது. 2014-15ல் மட்டும் ரூ.73,962 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
ரூ.5 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ரூ.43,18,982 கோடிக்கு மக்களுக்குக் காப்பீடு செய்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் அரசுக்கு, அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி, வீட்டுவசதித் துறைக்கு ரூ.56,825 கோடியும், மின் உற்பத்தித் துறைக்கு ரூ.1,17,759 கோடியும், நீர்வசதிக்கு ரூ.2,670 கோடியும், சாலை மற்றும் இதர போக்குவரத்துக்கு ரூ.10,119 கோடியும், தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.34,433 கோடியும் மூலதனமாகக் கொடுத்துள்ளது.
இந்திய தபால் துறைக்கு 1,39,182 கிராமப்புறக் கிளைகளும் 15,700 நகர்ப்புறக் கிளைகளும் உள்ளன. பல்வேறு மக்கள் சேமிப்புத் திட்டங்களில் ரூ.61,50,215 கோடி இருப்பில் உள்ளது.
ஏன்.. ஏன்.. ஏன்?
பொதுத்துறை நிறுவனங்கள் அர்த்தமற்றவை என்றால், இன்று பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும், இந்தியப் பெருமுதலாளிகளும் ஏன் இந்தப் பொதுத்துறை நிறுவனங்களை வாங்கத் துடிக்கின்றனர்? காரணம், இந்த நிறுவனங்களிடம் ஏராளமான அசையாச் சொத்துகள் உள்ளன. ஏராளமாக லாபமீட்டும் வாய்ப்புகளுடன் உள்ளன.
இந்தச் சொத்துகளும் லாபமும் அவர்களுக்கு வேண்டும். இதற்காக அரசுகளைப் பல்வேறு வகையில் தங்களுக்கு ஆதரவளிக்கத் தூண்டுகின்றன. உலகிலுள்ள மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பபெட் சொல்கிறார். ‘இது ஒரு வர்க்க யுத்தம்; அது சரிதான். ஆனால், இது என்னுடைய வர்க்கம் - முதலாளிவர்க்கம் நடத்தும் யுத்தம். இதில் நாங்களே வெற்றி பெறுகிறோம்.”
உண்மையில், இங்கே நடக்கும் யுத்தம் மக்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையிலானது. வெற்றிபெறப்போவது யார்?
- தொடர்புக்கு: senthikt@gmail.com