Last Updated : 11 Aug, 2021 03:16 AM

 

Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

பெருந்தொற்றுக் காலத்தில் பழங்குடிக் குழந்தைகள்

‘என்ன படிக்கிற சதீஷ்?’ ‘மூணாம் வகுப்பு’. ‘தேவா! நீ என்ன படிக்கிற?’ ‘நானும் மூணாவதுதான் சார்’ - இப்படி ஓர் உரையாடல்... இடம், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச் சரகம் தாமரைக்கரை சோளகர் மக்களின் குடியிருப்பு.

12 மாணவர்கள் மற்றும் 8 மாணவிகள் இந்த உரையாடலில் பங்குகொண்டனர். ‘என்ன வகுப்பு படிக்கிறீங்க?’ என்றால், தடுமாற்றம் இன்றி, தங்கள் வகுப்பைச் சொல்கிறார்கள். ‘சரி, உங்க கிளாஸ் டீச்சர் யாரு.. பெயரென்ன?’ என்று கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. கிளாஸ் டீச்சர் பெயரைச் சரியாகச் சொன்ன மாணவர்களிடம், ‘அவர்தான் உங்க கிளாஸ் டீச்சர்னு எப்படித் தெரியும்?’ என்று திருப்பிக் கேட்டால், தான் கடைசியாகப் படித்த வகுப்பின் ஆசிரியர் பெயர் அது எனத் தெரியவந்தது.

கடந்த 16 மாதங்களாக, அவர்கள் வனத்திற்குள்தான் சுற்றித் திரிகிறார்கள். அந்த மலையில்தான் எவ்வளவு தாவரங்கள்! யானைகள் நடமாட்டமோ சகஜம். கரடிகள், செந்நாய்கள், புலிகள் எனப் பல்வகை விலங்குகளும் உண்டு. வனத்துக்குள் சென்று என்ன விளையாடினார்கள்? என்ன கற்றுக்கொண்டார்கள்? இது ஒரு மிகப் பெரிய கேள்வி. இது ஓர் அரிய, சிறந்த, திறந்தவெளிச் செயல்வழிக் கற்றல். மாணவர்கள் வீடு திரும்பிய பிறகு, தொலைக்காட்சி பார்க்கிறார்கள். கார்ட்டூன் படங்களை மிகவும் விரும்பிப் பார்க்கிறார்கள். நிறைய சினிமா பார்க்கிறார்கள்.

வேறொரு ஆய்வுக்காகச் சென்ற தருணத்தில், இந்தச் சந்திப்பு எதேச்சையாக நிகழ்ந்தது. கையில் இருந்த எளிய வாசகங்கள் அடங்கிய தாளைக் கொடுத்து வாசிக்கும்படி கோரினோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவரைத் தவிர, மற்ற அனைவருக்கும், எழுத்துக் கூட்டிக்கூட வாசிக்கத் தெரியவில்லை. இதில், பத்தாம் வகுப்பு படிக்கும் இருவரும் அடக்கம். இத்தனைக்கும், வாசிக்கக் கேட்டுக்கொண்ட தாளில், பெயர், வயது, கிராமம், ஊராட்சி ஒன்றியம் போன்ற சொற்களே இருந்தன.

‘கல்வி டிவி பார்க்கிறீர்களா?’ என்றால், எல்லோரும் இல்லை என்று தலையசைத்தார்கள். ‘ஒரே ஒருநாள் கூடப் பார்க்கவில்லையா?’ என்றால், ‘பார்த்தோம்’ எனச் சிலர் தலை ஆட்டினார்கள். ‘ஏன் தொடர்ந்து பார்ப்பதில்லை’ என்ற கேள்விக்கு, ‘புரியவில்லை’ என்பதுதான் பதிலாக இருந்தது.

‘ஆசிரியர்கள் யாரேனும் வந்து உங்களைச் சந்தித்தார்களா?’ என்று விசாரித்தபோது, ‘ஒருவர்கூட வரவில்லை’ என்று பதிலளித்தார்கள். ‘தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களோடு பேசினார்களா?’ அதற்கும் ‘இல்லை’ என பதில் அளித்தார்கள். ‘எங்க அப்பாவிடம் பேசினார்’ என்று மூன்று குழந்தைகள் கூறினார்கள். ‘தொலைபேசியில் என்ன பேசினார்கள்?’ ‘சத்துணவு உணவுப் பொருள் வாங்க வரச் சொன்னார்கள்’ என்ற பதில் வந்தது.

‘படித்து என்ன வேலைக்குப் போகப்போகிறீர்கள்?’ என்று கேட்டால் டிப்பர் லாரி, பொக்லைன், 12 வீல் லாரி, இட்டாசி லாரி போன்றவற்றின் ஓட்டுநர்களாக வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மாணவர்களின் விருப்பம். நூல் மில்லுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்றார்கள் இரண்டு மாணவர்கள். மர வேலை செய்ய வேண்டும் என்றார் ஒருவர். இருப்பதிலேயே சரளமாக வாசிக்கத் தெரிந்த சித்தலிங்கத்துக்குப் பேருந்து ஓட்டுநர் ஆக வேண்டும் என்று ஆசை.

சமவெளிக் குழந்தைகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் டாக்டர், இன்ஜினீயர், கலெக்டர் என ஆளுக்கு ஒன்றைச் சொல்லி அசத்துவார்கள். அத்தகைய கனவுகள் இவர்களிடம் இல்லை. ஆனால், இவர்களைப் பொறுத்தவரை இவையே பெருங்கனவுகள். இது பலருக்கும் அதிர்ச்சியூட்டலாம். அந்தியூர் - கொள்ளேகால் மலைப் பாதையின் ஓரத்தில் அமைந்துள்ள மலைக் கிராமம் இது. நாள்தோறும் அவர்களை பிரமிக்க வைப்பது அவர்கள் கூறிய வாகனங்கள்தான். அவற்றைச் சார்ந்தே தங்கள் வாழ்நாள் பணியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

இதே மலைப் பகுதியில், சோளகனை என்ற மற்றுமொரு சோளகர் பழங்குடிக் கிராமம் இருக்கிறது. பேருந்தையே பார்க்காத குழந்தைகள் இக்கிராமத்தில் ஏராளமாக உள்ளனர். பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் காட்டுக்குள் நடந்து சென்றால்தான், இந்தக் கிராமத்தை அடைய முடியும். பழங்குடியினர் நலத் துறையின் நடுநிலைப் பள்ளி ஒன்று அங்கு உள்ளது. அதில் படிக்கும் 17 குழந்தைகளைச் சந்தித்து உரையாடினோம். வாகனங்களையே பார்க்காத இவர்களில், ஒருவருக்குக்கூட வாகனம் ஓட்டும் கனவு வரவில்லை. வனத் துறை கார்டாக, தலைமை ஆசிரியராக, ஆசிரியராக ஆக வேண்டும் என்று ஓரிருவர் கூறினார்கள். சமையல்காரராக வர வேண்டும் என்றே பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். உணவளித்து, விடுதியில் உடனிருந்து, ஆசிரியர் இல்லாத நேரத்தில் பாடம் சொல்லித்தரும் சமையல்காரரே மாணவர்களின் மனம் கவர்ந்த மனிதர் என்று அறிய நேர்ந்தது.

நாங்கள் சந்தித்த எட்டுப் பெண் குழந்தைகளில், மூவர் மருத்துவர் கனவில் இருக்கிறார்கள்; இன்னுமொரு மூவர் செவிலியராக வர வேண்டும் என்றார்கள். ஆசிரியராக வர ஆசைப்படுகிறது ஒரு குழந்தை. எந்தக் கனவும் இல்லை என்று கூறிய குழந்தை ஒன்று.

ஆசிரியர்களின் செல்பேசி அழைப்புகள் ஏதும் இல்லை. கல்வி தொலைக்காட்சி பார்ப்பதில்லை. பார்த்தாலும் புரிவதில்லை. திறன்பேசி இல்லை. இணைய வசதியும் இல்லை. ஆண் குழந்தைகளைப் போலவே, பெண் குழந்தைகளுக்கும் எந்த வசதிகளும் இல்லையென்றாலும், பெண் குழந்தைகள் இந்த ஒன்றரை ஆண்டுகளில் கற்றதை மறக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாப் பெண் குழந்தைகளும் சரளமாக, எழுத்துக் கூட்டாமல் வாசித்துக் காட்டினார்கள். இவர்கள் அனைவரும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்துக்கொண்டிருப்பவர்கள். ஆனாலும், மருத்துவர், செவிலியர், ஆசிரியர் என்ற பெருங்கனவு இருக்கிறது.

பெண் குழந்தைகளின் விளையாட்டுகளுக்கும் ஆண் குழந்தைகளின் விளையாட்டுகளுக்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. பெண் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டைச் சுற்றியே விளையாடுகிறார்கள். பாட்டு, கதை என்று உட்கார்ந்த இடத்திலிருந்து விளையாடும் விளையாட்டுகளாக அவை இருக்கின்றன. தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.

ஆண் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகள் நிறைவேறுமா? தெரியவில்லை. ஆனால், பெண் குழந்தைகளின் கனவுகள் பொய்த்துப்போகவே அதிக சாத்தியம் இருப்பதை அறிந்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

ஆண்டுதோறும், 4 முதல் 6 மாதங்கள் வரை குடிப்பெயர்ச்சி நடக்கிறது. இதனால் படிப்பு வீணாகிறது. கல்வி உரிமைச் சட்டத்தால் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பதாலும், எட்டாம் வகுப்பு படித்திருந்தால்தான் பழங்குடிப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை என்பதாலும், எட்டாம் வகுப்பு வரை ஏதோ வந்து சேருகின்றனர். பெண் குழந்தைத் திருமணங்களும் மலைக் கிராமங்களில் அதிகம். இச்சூழலில், இந்தப் பெண் குழந்தைகள் எங்கே மருத்துவர்களாகவோ செவிலியர்களாகவோ ஆகப்போகிறார்கள் என்று நினைக்க நினைக்க ஆழ்ந்த வருத்தமே வெளிப்படுகிறது.

பழங்குடி மக்கள் வேலைக்காகக் குடிபெயராமல் இருப்பது இந்தக் கரோனா காலத்தில்தான். பர்கூர் மலைப் பகுதியில் 25 கிராமங்கள் உள்ளன. இங்கெல்லாம், முதல் அலையின்போது ஒருவருக்குக்கூடத் தொற்று ஏற்படவில்லை. இரண்டாம் அலையில், ஒரே ஒரு கிராமத்தில் ஒருவருக்கு மட்டும் தொற்று ஏற்பட்டிருந்தது. ஆசிரியர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வந்து இக்குழந்தைகளுக்குப் பாடம் நடத்தியிருந்தால், ஒன்றரை வருடம் தொடர்ச்சியாகக் கல்வி கிடைத்திருக்கும்.

ஜூலை 10 மற்றும் 11 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கள ஆய்வை மேற்கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளித் திறப்பைப் பொதுமைப்படுத்தாமல் பகுதிவாரியாக ஆராய்ந்து திறக்க வேண்டும் என தமிழ்நாட்டு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது. இக்கோரிக்கை, இந்த மலையகப் பழங்குடி மக்களின் வாழிடங்களுக்கு நிச்சயம் பொருந்தும்.

- நா.மணி, பேராசிரியர். தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x