

இந்தியாவைப் பொறுத்தவரையில் விளையாட்டு என்பது சரிவரப் படிப்பு வராதவர்களுக்கான மாற்றாகவே கருதப்படுகிறது. ‘விளையாட்டு இடஒதுக்கீடு’ என்பது மதிப்புக்குரிய ஒன்றாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. விளையாட்டுத் துறையில் நாம் பின்தங்கியிருப்பதற்கு இதுபோன்ற மனநிலையும் ஒரு காரணமே. விளையாட்டுத் திறமை உரிய வகையில் மதிக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்த ஒலிம்பிக் மற்றொரு சாட்சியமாகியிருக்கிறது.
படிப்பு, விளையாட்டு என இரண்டு துறைகளிலும் ஒருவர் உச்சத்தைத் தொட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கணிதவியல் ஆய்வாளர், மருத்துவ மாணவி, தொற்றுநோயியல் முதுகலை மாணவி ஆகியோர் பதக்கம் வென்று, இரண்டு துறைகளிலும் பரிமளித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த எத்தனையோ பேர் அந்நாட்டு அதிபர், ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர், நடிகர்களாக ஆகியிருக்கிறார்கள். ஆனால், ஹார்வர்டில் படித்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் பெண் ஆகியிருக்கிறார் கேப்ரியேலா தாமஸ். ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாவதாக வந்து இதைச் சாதித்தார். ஃபிளாரன்ஸ் கிரிஃப்பித் ஜாய்னருக்குப் பிறகு 200 மீட்டர் ஓட்டத் தொலைவைக் குறைந்த நேரத்தில் கடந்த சாதனையை ஏற்கெனவே அவர் புரிந்திருக்கிறார்.
அமெரிக்காவின் கென்டகி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துவரும் வாள்வீச்சு வீராங்கனை லீ கீஃபர், ஃபாயில் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் ஆனார். அவர் வீழ்த்தியது 2016 ஒலிம்பிக் சாம்பியன் ரஷ்யாவின் இன்னா டெரிக்ளாசோவாவை. கீஃபரின் கணவர் ஜெரெக் மெய்ன்ஹார்டும் ஒரு மருத்துவ மாணவர், வாள்வீச்சு வீரரும்கூட. அவர் அணிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
கேப்ரியேலாவும் கீஃபரும் மருத்துவ மாணவிகள் என்றால், ஆஸ்திரியாவைச் சேர்ந்த அன்னா கீசன்ஹோபர் கணிதவியல் ஆய்வாளர். பெண்களுக்கான நெடுந்தூர சைக்கிள் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது லோசான் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவருகிறார்.