மனிதனான கணினி

மனிதனான கணினி
Updated on
1 min read

மனிதனாகவே மாறிப் பல கேள்விகளுக்குப் பதில் அளித்து அறிவியலாளர்களை அசத்தியுள்ளது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். அமெரிக்காவில் வசிக்கும் ரஷ்யரான விளாடிமிர் வசிலோவ் தயாரித்த சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் யூஜின் கூஸ்த்மன். அது 13 வயதுள்ள சிறுவனைப் போலவே சிந்தித்து, பேசி ஆச்சரியப்படுத்துகிறது. இதைப் பரிசோதித்த லண்டனில் உள்ள பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி விஞ்ஞானிகள் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டனர்.

இரண்டாவது உலகப் போரின்போது, சங்கேத வார்த்தைகளைக் கண்டுபிடித்து பொருளை விளக்கும் நிபுண ராகப் பணியாற்றியவர் ஆலன் டூரிங். கணினி அறிவியலின் முன்னோடியான அவர்தான், கணினிகளை மனிதர்களைப் போலச் சிந்திக்க வைக்கவும் பேச வைக்கவும் முடியும் என்று முதன்முதலில் கூறியவர்.

சில செயல்களைச் செய்து, கேள்விகளுக்குப் பதில் அளித்துச் செயல்பட்டால் அந்த சூப்பர் கம்ப்யூட்டரை மனிதன் என்றே ஒப்புக்கொள்ளலாம் என்பது அவர் வகுத்த நியதி. இது ‘டூரிங் டெஸ்ட்' என்று அழைக்கப்படுகிறது.

யூஜின் கூஸ்த்மனிடம் நடுவர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். கிட்டத்தட்ட 33% அளவுக்கு அவர்கள் யூஜின் கூஸ்த்மன் ஒரு சிறுவன்தான் என்றே நம்பினர்.

பல விஷயங்கள்குறித்த கேள்விகளுக்கு அசத்தலாகப் பதிலளித்தது அதன் திட்டநிரலுக்கும் கிடைத்த வெற்றி என்று பிரிட்டனின் ரீடிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் கெவின் வார்விக் புகழ்கிறார்.

“ஓர் ஆளுமையுடன் கூடிய பாத்திரத்தை சூப்பர் கம்ப்யூட்டராக வடிவமைத்தோம், அதில் எங்களுக்கு வெற்றி கிட்டியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று வசிலாவ் பெருமிதத்துடன் கூறுகிறார்.

“தர்க்கரீதியாக உரையாடுவது எப்படி என்பதை இந்தக் கணினிச் சிறுவனுக்குக் கற்றுத்தருவதே அடுத்த கட்டம்” என்று புன்னகையுடன் கூறும் வசிலாவ், இயந்திர அறிவின் இன்னொரு பக்கத்தைத் திறந்துவைத்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in