ஒலிம்பிக் திருவிழா: இவர்களையும் கொண்டாடுவோம்!

ஒலிம்பிக் திருவிழா: இவர்களையும் கொண்டாடுவோம்!
Updated on
1 min read

ஒலிம்பிக்கில் இந்தியா அதிகப் பதக்கம் வெல்ல முடியாதது விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். பதக்கங்கள் வெல்வதைத் தாண்டி, ஒலிம்பிக் போட்டிகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைய சில நல்ல அம்சங்கள் உள்ளன.

ஹரியாணாவைச் சேர்ந்த அசோக் குமார் மல்யுத்தப் போட்டிக்கான நடுவராகவும், குஜராத்தைச் சேர்ந்த தீபக் ஜிம்னாசியப் போட்டி நடுவராகவும் இந்த ஒலிம்பிக் போட்டியில் செயல்பட்டிருக்கிறார்கள். நடப்பு ஒலிம்பிக் ஜிம்னாசியப் போட்டிகளில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக இருந்த பிரணதி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறினார். 2016 ஒலிம்பிக்கில் பின்னப் புள்ளிகளில் வெண்கலப் பதக்கத்தை தீபா கர்மாகர் தவறவிட்டார். அதேநேரம், ஒலிம்பிக் ஜிம்னாசியப் போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் என்கிற பெருமையை தீபக் பெற்றுள்ளார்.

முன்னாள் ஜிம்னாசிய வீரரான இவர், அந்தப் போட்டிகளில் பெரிதாகச் சோபிக்க முடியாத நிலையில், இளம் வயதிலேயே நடுவராகிவிட்டார். 21 வயதில் நடுவரான அவர், 33 வயதில் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு நடுவராகியுள்ளார். முன்னதாக காமன்வெல்த் போட்டிகள், ஆசியப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் நடுவராகச் செயல்பட்டுள்ளார்.

மல்யுத்தத்தின் தாய்நிலமாகக் கருதப்படுகிற ஹரியாணாவைச் சேர்ந்த அசோக்குமார், இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர். பணிக் காலத்தில் மல்யுத்தப் போட்டிகளால் ஈர்க்கப்பட்டு, சர்வதேச நடுவராகும் அளவுக்கு வளர்ந்தார். முன்னதாக, இந்திய மல்யுத்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியா சோபித்த துறைகளில் ஒன்று மல்யுத்தம். ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட ஐந்து பதக்கங்கள் இதுவரை கிடைத்துள்ளன.

மதிப்புமிக்க உலகளாவிய போட்டிகளுக்கு நடுவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது சாதாரண காரியமல்ல. அந்த உயரத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களே எட்டுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in