Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

இணையம் மட்டுமே உலகம் அல்ல!

ஜி.ஆர்.கோபிநாத்

அண்மையில் நிறைவடைந்த சொமேட்டோ நிறுவனத்தின் முதற்கட்ட பங்கு விற்பனை மூலம் அந்த நிறுவனம் வெற்றிகரமாக ரூ. 9,000 கோடியை, பங்குகளின் ரூ.66,000 கோடி என்ற மிகப் பெரிய சந்தை மதிப்போடு, பெற்றுள்ளது. பணம் மரத்தில் காய்க்கும் என்பதை இது நம்பவைக்கிறது.

150 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகப் பெரிய நாவலாசிரியர்களில் ஒருவரும் சிந்தனையாளருமான லியோ டால்ஸ்டாய், தான் எழுதிய ‘நாம் செய்ய வேண்டியது என்ன?’ என்ற புத்தகத்தில் இப்படி ஆச்சரியப்பட்டுக் கேட்கிறார்: கிராமப்புறப் பகுதிகளில்தான் மதிப்புமிக்க எல்லாப் பொருட்களும் உற்பத்தியாகின்றன. ஆனால், கிராமங்கள் வறுமையிலும் நகரங்கள் செழிப்பிலும் ஏன் இருக்கின்றன? அந்தக் கேள்வி நம்மைத் தொடர்ந்து குழப்பிக்கொண்டிருக்கிறது.

1980-களில் என் வாழ்க்கை தொடர்பான நினைவுகளை இந்த எண்ணங்கள் இழுத்துவந்தன. ஒரு விவசாயியாக மிகச் சிரமப்பட்ட நாட்கள் அவை. கர்நாடக மாநிலத்தின் ஒரு மூலையில், பழைய, விலைக்கு வாங்கிய ராணுவக் கொட்டகையில் தங்கிக்கொண்டு நாள் முழுவதும் நிலத்தில் உழைத்த நாட்கள் அவை. ஒருநாள், விளைந்த வாழைக் குலைகளை அறுத்து, அதிகாலைக்கு முன்பே ஏற்றிக்கொண்டு மாவட்டத் தலைநகர் ஹாசனில் உள்ள வார உழவர் சந்தைக்கு என் டிராக்டரை ஓட்டிச் சென்றேன். நான் சந்தைக்குச் செல்லும் பிரதான சாலையை நெருங்கியபோதே பிற விவசாயிகள் கொண்டுவந்த வண்டிகளும் டிரக்குகளும் நூற்றுக்கணக்கில் வரிசையாக எனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தன. ஒரு கிமீ தூரத்தை நடந்து கடக்கும்போதே எரிச்சலுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளைப் பார்த்துவிட்டேன். அப்போதுதான் பறித்துக் கொண்டுவந்த பச்சை மிளகாயையும் தக்காளிகளையும் சாலையில் கொட்டி இறைத்திருந்தனர். சாலையின் கருப்பு நிறம் மறைந்து சிவப்பும் பச்சையுமாக இருந்தது. மிதிபட்ட மிளகாய்களிலிருந்து வந்த கடுமையான கார நெடி சுவாசிக்க முடியாமல் ஆக்கியது. கொண்டுவந்த பொருட்களின் விலை சரிந்துவிட்டதை அறிந்து, போக்குவரத்துச் செலவுகளைக்கூட ஈடுகட்ட முடியாதென்று கூறி, அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். அதனால், அவர்கள் சாலைகளை மறித்திருந்தனர். நண்பகல் வேளையில், அந்தக் குழப்பச் சூழ்நிலையிலிருந்து இறுதியாக என்னை நான் விடுவித்துக்கொண்டு, எனது விளைச்சலையும் விற்க முடியாமல் ஏமாற்றமுற்று, வாழைக் குலைகளை மீண்டும் எனது பண்ணைக்கே கொண்டுவந்து எனது கால்நடைகளுக்கு உணவாக இட்டேன்.

சொமேட்டோவின் பங்குகள் விற்பனையான செய்தி, விவசாயக் கடனாக ஒரு லட்சம் கேட்ட எனது விண்ணப்பத்தைத் தொடர்ந்து புறக்கணித்த வங்கிகளை எனக்கு ஞாபகப்படுத்தின. ஆனால், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, எனது மலிவு ரக விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பங்குகள் வெளியிடப்பட்டபோது, மிகவும் மதிக்கப்படும் பங்குகளைக் கொண்ட நிறுவனம் என்ற அடிப்படையில் 500 கோடி ரூபாய்க் கடனை வங்கியொன்று சர்வசாதாரணமாக அளித்தது.

நிலத்தைச் சொந்தமாகக் கொண்டு, பாடுபட்டு, உழுது நம்மால் சாப்பிடவும் குடிக்கவும் தொடவும் உணரவும் முடியக்கூடிய நிஜமான பொருட்களை உற்பத்திசெய்பவர்கள், நமது வயிற்றை நிரப்பி, கதகதப்பாக நம்மை வைத்திருப்பவர்கள், ஏன் வறுமையில் இருக்கிறார்கள்? ஆனால், அந்த விவசாயிகள் உற்பத்திசெய்யும் பொருட்களை எடுத்துச் சென்று விற்பவர் அல்லது அதன் விலையை ஊகபேரம் செய்யும் தரகர் எப்படி பணக்காரராக இருக்க முடிகிறது? எஃகு ஆலைகள், வாகனங்கள், கட்டிடங்கள், பாலங்கள், கப்பல்கள், ரயில் பாதைகள் கட்டுமானம் மற்றும் ஹோட்டல் நிறுவனங்களை நடத்திக்கொண்டு, பலசரக்குகள் மற்றும் பிற உணவுப் பொருட்களைச் சில்லரைக்கு வாங்கும் பன்னாட்டு நிறுவனங்களைப் பங்குச் சந்தை மதிப்பில் அமேசானும் மைக்ரோசாஃப்ட்டும் டிசிஎஸ்ஸும் இன்ஃபோஸிஸும் பின்தள்ளும்போது, அந்த நிறுவனங்கள் நாம் ஏன் இத்தனை பிரயத்தனப்பட வேண்டுமென்று கருதலாம்.

இப்போது பைஜூஸ், சொமேட்டோ மற்றும் பேடிஎம் ஆகிய புதிய குழந்தைகள் வளாகத்துக்குள் புகுந்து, பல தசாப்தங்களாக அங்கே இருக்கும் நிறுவனங்களை மிஞ்சியுள்ளன.

தகவலும் தரவுகளும் நவீனப் பொருளாதாரத்தின் புதிய எரிபொருள் என்று சொல்லப்படுகின்றன. ஆனால், தகவலை உண்ண முடியாது. நமக்கு உணவு, துணி, தண்ணீர், வீடு, போக்குவரத்து, மின்சாரம், மருத்துவமனைகள் வேண்டும். அத்துடன் மலர்கள், கவிதை மற்றும் கலைகள் வேண்டும். பள்ளிகள் வேண்டும். பல்கலைக்கழக வளாகங்கள் வேண்டும். அங்கே ரத்தமும் சதையுமாக ஆசிரியர்கள் வேண்டும். குளிர்ந்த காற்றுடன் அங்கே சூடுபறக்கும் உரையாடல், விவாதம், நட்பு, இசை மற்றும் சிரிப்பு ஆட்சி செய்ய வேண்டும். நமக்கு உணவகங்களும் பயணமும் கடற்கரைகளும் சூரியனுடன் வேண்டும். வைனும் முத்தங்களும் உடன் வேண்டும். உலகம் முழுவதற்கும் தேவையானதைத் தங்கள் கைகளால் உழைத்து வழங்குவதற்கு மனம்நிறைந்த புஷ்டியான ஆண்களும் பெண்களும் வேண்டும். இத்தனையும் சேர்ந்துதான் நல்ல வாழ்க்கையை உருவாக்குவது.

இதெல்லாம் உங்களைக் கோடீஸ்வரனாக்காது, ஆனால், இணையப் பொருளாதாரம் உருவாக்கும் மலட்டு உலகத்தால் உங்களைக் கோடீஸ்வரனாக்க முடியும். ஆனால், ஏமாற்றமுற வேண்டிய அவசியமில்லை. மண்ணில் வேர்கொண்டிருக்கும் உண்மையான உலகத்திலிருந்து செல்வத்தை உருவாக்க முடியும். நமது பணியை ஆத்மார்த்தத்துடனும் நேசத்துடனும் செய்தால் அது அபரிமிதமான மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொடுக்க முடியும்.

விவசாயிகள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கட்டுமானத் துறையினர், தச்சர்கள், கருமான்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள், பலசரக்குக் கடைக்காரர்கள் என்று இந்தியாவில் ஏராளமான துறைகளில் ஏராளமானோர் இருக்கிறார்கள். தங்கள் சமூகங்களுக்கு அவர்கள் சேவை செய்து வேலைகளைத் தந்து வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பையும் கொடுப்பவர்கள் அவர்கள். அவர்கள்தான் இந்த உலகத்தை அற்புதமாக மாற்றுகிறார்கள்.

மனிதர்கள் இணையத்தால் மட்டும் வாழ்ந்துவிட முடியாது.

- கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத், ராணுவ வீரர், விவசாயி மற்றும் ஏர்டெக்கான் நிறுவனர்.

‘தி இந்து’, தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x