

சமீபத்தில் அந்தக் காணொளி வைரலானது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், அரசு கட்டிய சில தொகுப்பு வீடுகளைத் திறந்துவைத்தார். ஒரு வீட்டின் நிலை வாசலின் நடுவே ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. இப்போது முதல்வர் ரிப்பனைக் கத்தரிக்க வேண்டும். அதற்குக் கத்தரிக்கோல் வேண்டும். முதல்வரின் அருகில் நிற்கும் ஓர் அமைச்சர் ‘கத்தரிக்கோலைக் கொண்டுவாருங்கள்’ என்கிறார். அந்த வேண்டுகோள், அடுத்த வரிசை உயர் அதிகாரிகளுக்கும், அவர்கள் வழியாக, பின்னால் நிற்கும் இளம் அதிகாரிகளுக்கும், உடன் ஊழியர்களுக்கும் போகிறது. ஆனால், கத்தரிக்கோல் வரவில்லை. பொறுமை இழந்த முதல்வர், விரல்களாலேயே ரிப்பனை முறித்துப் புதிய வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். அரசின் நலத்திட்டத்துக்குக் கிடைக்க வேண்டிய கவனம், காட்சிக்குள் வராத ஒரு கத்தரிக்கோலுக்குக் கிடைத்துவிடுகிறது. கத்தரிக்கோல் சின்ன விஷயம்தான். ஆனால், அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ளாத இந்தச் சின்ன விஷயம்தான் நிகழ்ச்சியில் பெரிய விஷயமாகிவிட்டது.
தினைத்துணை
பன்னெடுங்காலமாகப் பலரும் சொல்லிவந்ததுதான்... தினையளவு செய்யப்படும் உதவி பனையளவாகக் கருதப்படும். கூடுதலாக ஏற்றப்பட்டால் சிறிய மயிலிறகுகூடப் பெரிய வண்டியின் அச்சை முறித்துவிடும். எல்லாம் படித்திருக்கிறோம். ஆனால், நம்மில் பலர் சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
பல பெரிய மனிதர்கள் சிறிய விஷயங்களில் கருத்தாக இருப்பார்கள். நம்மில் ஒவ்வொருவரும் பிரமுகர்களையோ நட்சத்திரங்களையோ சந்தித்திருப்போம். அப்படியான சந்திப்பைப் பற்றி எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும்.
தொந்தி எனும் பெரியவரிடமும் ஒரு கதை இருந்தது. அப்படி ஒரு வினோதமான பெயரைத்தான் அவர் சூடியிருந்தார். பெரியாறு அணைக்கட்டில் லஸ்கராகப் பணியாற்றினார். லஸ்கர் என்பது பாரசீகச் சொல். பொதுப்பணித் துறையில் அணைப் பராமரிப்பு, தண்ணீர்க் கட்டுப்பாடு போன்ற சவாலான பணிகளில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களைக் குறிக்கும். சிவாஜி கணேசன் படப்பிடிப்புக்காகத் தேக்கடி வந்திருக்கிறார். பெரியாறு சரணாலயப் பரப்பில் படப்பிடிப்பு நடந்தது. படம் ‘சுமதி என் சுந்தரி’யாக இருக்கலாம் என்பது என் ஊகம். தொந்தி படப்பிடிப்புக்கு உதவியாக இருந்தார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சிவாஜி தனது குடும்பத்துடன் தேக்கடிக்கு வந்தார். அங்கிருந்து பெரியாறு சென்றார். அணைக்கட்டின் படகுத் துறையில் சிவாஜியையும் அவர் குடும்பத்தினரையும் வரவேற்க அதிகாரிகளும் ஊழியர்களும் நின்றுகொண்டிருந்தனர். படகில் ஒரு காலும் நிலத்தில் ஒரு காலுமாக இறங்கிக்கொண்டிருந்த சிவாஜியின் கண்களில் முதலில் பட்டவர், பின்வரிசையில் நின்றுகொண்டிருந்த தொந்தி. இரண்டாவது காலை நிலத்தில் ஊன்றுவதற்கு முன்பாகவே ‘என்ன தொந்தி, எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டாராம் சிவாஜி. தேக்கடி பொதுப்பணித் துறை வட்டாரத்தில் சில நாட்களுக்குத் தொந்தி ஒரு நட்சத்திரமாகத் திகழ்ந்தார். இதை என்னிடம் சொன்னபோது அந்தப் பெரியவரின் கண்கள் நிறைந்திருந்தன.
ஒவ்வொரு நாளும் பலரைச் சந்திக்கும் ஒரு உச்ச நட்சத்திரத்தால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ஒரு எளிய மனிதரைப் பெயர் சொல்லி அழைக்க முடிகிறது. இது நினைவாற்றல் மட்டுமல்ல. யாரையும் சிறியார் என்று கருதாத பண்பு. சின்னச் சின்ன விஷயங்களைப் பொருட்படுத்துபவர்களே பெரிய விஷயங்களைச் சாதிக்கிறார்கள். ஆனால், அந்த இடத்துக்குப் பலரது சாபங்களைக் கடந்துதான் அவர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள். அப்படிச் சாபமிட்டவர்களில் ஒருவன் நான். சாபமேற்றவர் பெயர் செங். இது ஹாங்காங்கில் நடந்தது.
102 சின்னத் தவறுகள்
செங் என்பதைச் சீன உச்சரிப்புக்கு இசைவாக Cheng, Ching, Cheung என்று ஆங்கிலத்தில் பலவாறாக எழுதுவார்கள். எனக்கு மூத்த பொறியாளராக இருந்த செங், தனது பெயரை Cheng என்று எழுதுவார். ஹாங்காங்கில் எல்லாப் பொறியியல் வரைபடங்களையும் கட்டிடத் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அரசின் பதிவுபெற்ற பொறியாளர் அவற்றில் ஒப்பமிட வேண்டும்.
ஒரு ஒப்பந்தக்காரர் சில கட்டுமான வரைபடங்களைக் கட்டிடத் துறையின் ஒப்புதல் பெறுவதற்காக நான் வேலை பார்த்த நிறுவனத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். நான் படங்களைச் சரிபார்த்துவிட்டு, செங்கின் கையெழுத்துக்காக அனுப்பி வைத்தேன். செங் ஒப்பமிடவில்லை. படங்களில் பிழையில்லை. அவர் ஒப்பமிட வேண்டிய இடத்தில் அவரது பெயர் Cheung என்று இருந்தது. அது Cheng என்று இருந்திருக்க வேண்டும். ‘சின்னத் தவறுதானே?’ என்றேன். மொத்தம் 102 வரைபடங்கள் இருந்தன. ‘102 சின்னத் தவறுகள்’ என்றார் செங். வரைபடங்களைத் திரும்ப அனுப்பி, திருத்தத்தைப் பெறுகிற வேலை என்னிடம் வந்தது. அது ஆயாசம் அளித்தது. ஆனால், சின்ன விஷயங்களில் சமரசம் செய்துகொள்பவர்களால் பெரிய விஷயங்களை அடைய முடியாது என்கிற பாடமும் அதில் இருந்தது.
சமரசம் எனும் தேசிய குணம்
நாம் நாள்தோறும் பல சின்ன விஷயங்களில் சமரசம் செய்துகொள்கிறோம். ஓர் எடுத்துக்காட்டு. சஞ்சயன், டெல்லியின் பெருமிதங்களில் ஒன்றாகிய குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் போகிறார். சஞ்சயன் சூழலியல் விஞ்ஞானி. எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் மகன். சஞ்சயன் அந்த மாளிகைக்குச் சென்றது ஓர் ஆவணப்பட நேர்காணலுக்காக. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். நேர்காணலின்போது தனது உதவியாளரை அழைக்க மேசையில் இருந்த பொத்தானை அழுத்துகிறார் கலாம். சஞ்சயன் சொல்கிறார்: ‘அந்தப் பொத்தானை அவருடைய மேசையில் ஒருவித ஒளிவுமறைவுமின்றிப் பொருத்தி வைத்திருந்தார்கள். அதிலே இருந்த, தாறுமாறாகச் சென்ற வயர்கள் மேசையின் ஓரத்தில் ஸ்டேப்பிள் செய்யப்பட்டிருந்தன.’ குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அலுவலர்களில் யாருக்கும் அந்த வயர்களை மறைத்துவைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அதாவது, அது அவர்கள் கண்ணை உறுத்தவில்லை. ஆனால் சஞ்சயனுக்கு அது உறுத்தியது.
தெலங்கானா அதிகாரிகளுக்குக் கத்தரிக்கோல் சின்ன விஷயம். எனக்கு செங்கின் பெயரில் இருந்த எழுத்துப் பிழை சின்ன விஷயம். ஜனாதிபதி மாளிகை அலுவலர்களுக்கு நாட்டின் தலைமைக் குடிமகனின் மேசையில் தாறுமாறாகத் தொங்கும் வயர்கள் சின்ன விஷயம். சின்னச் சின்ன விஷயங்களில் சமரசம் செய்துகொள்வது நமது தேசிய குணமோ என்று எனக்குப் பல முறை தோன்றியிருக்கிறது. சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்துவோம். சின்னச் சின்ன விஷயங்களால்தானே பெரிய விஷயங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com