Last Updated : 01 Feb, 2016 08:42 AM

 

Published : 01 Feb 2016 08:42 AM
Last Updated : 01 Feb 2016 08:42 AM

தேச விரோதம் எனும் முத்திரை!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பெருமை மிகு தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வருகைதரு பேராசிரியர் பணியிலிருந்து பேராசிரியர் சந்தீப் பாண்டே நீக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவரைச் சந்தித்தேன். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த சுமாரான விருந்தினர் விடுதியில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நீண்ட தூரம் ரயில் பயணம் செய்து அப்போதுதான் வந்திருந்தார் சந்தீப் பாண்டே. சுருக்கங்கள் விழுந்த குர்தா - பைஜாமா, ரப்பர் ஸ்லிப்பர் என்று பழைய பாணி இந்திய இடதுசாரியின் எல்லா அம்சங்களுடனும் இருந்தார்.

அவர் நீக்கப்பட்டதற்குக் காரணமே அதுதான். “தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தியல் கொண்டவன் நான்” என்றார் அவர். “மாற்றுக் கருத்தை மட்டுமல்ல, கருத்து வேறுபாட்டைக்கூட இவர்கள் சகித்துக்கொள்வதில்லை. தங்களுடன் முரண்படும் ஒவ்வொருவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று சொன்னார். அவர் குறிப்பிட்டது பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பாஜகவை - இன்னும் குறிப்பாகச் சொன்னால் - பாஜகவின் கலாச்சார ஊற்றான ஆர்.எஸ்.எஸ்ஸை!

ஆர்.எஸ்.எஸ். - பாஜக உறவு!

இந்து தேசிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ்., மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு வலுவான மாற்றாக 1925-ல் நிறுவப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹிட்லரைப் புகழ்ந்தவர். 1948-ல் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் மறைமுகத் தூண்டுதல் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்து மதத்தின் புனிதம் தொடர்பான தனது கற்பனைக் கருத்துகள் மற்றும் தவறான முன்முடிவுகளுடன் இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பின் நிதர்சனங்களை விட்டு விலகி நிற்கிறது பாஜக. அதே சமயம், தேர்தலில் வெற்றிபெற வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஆர்.எஸ்.எஸ்ஸின் கலாச்சாரக் கொள்கையிலிருந்து விலகி நிற்கவும் பாஜக தயங்காது.

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் மோடி அடைந்த வெற்றிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. அவரது ஆளுமை மற்றும் வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகள்தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தன. எனினும், ஆர்.எஸ்.எஸ். அதை அப்படிப் பார்க்கவில்லை. கற்பனைக் கதைகளில் வரும் சித்திரக் குள்ளர்களைப் போல், மோடியின் வெற்றிக்கு உதவியதற்குப் பிரதிபலனை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தாங்கள் செய்த அந்த உதவிக்கு நன்றிக்கடனாக நாட்டின் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. முக்கியமாக, பல்கலைக்கழகங்களின் தலைமைப் பொறுப்புகளில் தங்கள் ஆட்களை அமர வைப்பதன் மூலம், எப்போதும் தங்களை விமர்சித்துவந்த இடதுசாரி அறிவுஜீவி அமைப்புகளைப் பழிதீர்க்க விரும்புகிறது.

கல்வி நிறுவனங்கள் மீது குறி!

புகழ்பெற்ற திரைப்படப் பயிற்சிக் கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவராக ஆர்.எஸ்.எஸ். கொள்கை கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராடிவருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். கொள்கையை முன்னெடுத்துச் செல்வதுதான் அந்த நபரின் ஒரே தகுதி என்றே மாணவர்கள் கருதுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்விக் கொள்கையில் தாங்கள் விரும்பிய மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில், கல்வித் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களின் ஆலோசனைக் குழுக்களில் வலதுசாரி சித்தாந்தம் கொண்ட, தகுதியற்ற நபர்களை நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். வரலாற்று ஆய்வுக்கான இந்திய கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்.) போன்ற முக்கியமான கலாச்சார நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிலும் தங்கள் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களை அமர வைக்க விரும்புகிறது.

சந்தீப் பாண்டே பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி இதுதான். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிரிஷ் சந்திர திரிபாதி ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர். மோடி பிரதமரான பின்னர் அவரை அந்தப் பதவியில் அமர்த்த கல்வித் துறை உதவியது. “கிரிஷ் சந்திர திரிபாதி ஒரு கல்வித் துறை ரவுடி. தகுதியே இல்லாதவர்” என்கிறார் அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய (பெயர் தெரிவிக்க விரும்பாத) பேராசிரியர் ஒருவர்.

விரைவிலேயே சந்தீப் பாண்டேவுக்கு உலை வைத்துவிட்டார் அந்தத் துணைவேந்தர். “எல்லாம் திட்டமிடப்பட்டது” என்றார் பாண்டே, என்னிடம். முதலில் பாண்டேயை ஒரு மாணவர் விமர்சனம் செய்தார். பின்னர், ஆயுதம் தாங்கிய கெரில்ல இயக்கத்துடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக உள்ளூர் செய்தி இணைய இதழ் ஒன்று கதை கட்டிவிட்டது. (உண்மையில், சந்தீப் பாண்டே ஒரு காந்தியவாதி. வன்முறையை எதிர்ப்பவர்!) அதைத் தொடர்ந்து, திரிபாதியின் பரிந்துரையின்படி பாண்டேவை நீக்க தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழு முடிவெடுத்தது. சந்தீப் பாண்டே அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயர் பட்டம் பெற்றவர். சமூக சேவைக்காக மகசேசே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். எதுவுமே பயன்படவில்லை. ஒரு மாத காலத்துக்குள் வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்.

துணைவேந்தரின் கருத்து

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரிபாதியிடம் பேச முடிவெடுத்தேன். அவர் ஊரில் இல்லை. எனினும், பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். சந்தீப் பாண்டேயின் பெயரை எடுத்ததுமே சூடாகிவிட்டார்! காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா என்று சந்தீப் பாண்டே கேட்டார் என்றும், தடை செய்யப்பட்ட ‘இந்தியா’ஸ் டாட்டர்’ ஆவணப்படத்தைத் திரையிட முயன்றார் என்றும் என்னிடம் கூறினார்.

நான் அதிர்ச்சியடைந்ததுபோல் காட்டிக்கொள்ள வில்லை. உடனே, வேறொரு உபாயத்தை திரிபாதி கையாண்டார். அமெரிக்காவின் அச்சுத் துறையில் எனக்குப் பரிச்சயம் இருப்பதைத் தெரிந்துகொண்ட அவர், “நீங்களே சொல்லுங்கள். அமெரிக்காவிலேயே பேராசிரியராக இருந்துகொண்டு அமெரிக்க அரசை உங்களால் விமர்சிக்க முடியுமா?” என்று கேட்டார். “ஏன், முடியுமே!” என்றேன். அவர் மீண்டும் முயற்சி செய்தார். “உங்களால் முடியுமா?” என்றார். “அமெரிக்காவிலேயே பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டு, அமெரிக்காவின் நலனுக்கு எதிரான விஷயங்களைப் போதிக்க முடியுமா?” என்று கேட்டார். என்னுடன் பயின்றவரும், தற்போது ஆர்மெஸ்ட் கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிபவருமான ஒரு நண்பர், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டதைப் பற்றிச் சொன்னேன். “இருக்கலாம்” என்றார் திரிபாதி. “ஆனால், அமெரிக்காவில் வேண்டுமானால் அப்படிச் செய்ய முடியும். இந்தியாவில் எல்லாம் அப்படிச் செய்ய முடியாது” என்றார் வெறுப்பு கலந்த குரலில்.

கடைசியாக ஒரு கேள்வி மிச்சமிருந்தது. பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட பூசாரி, பண்டைய இந்தியாவிலேயே வாடகைத் தாய் தொடர்பான அறிவியல் இருந்ததாகக் கூறியிருந்தார். பண்டைய இந்தியர்களிடம் பல தொழில்நுட்பங்கள் இருந்தன. எனினும், ஆயிரம் ஆண்டுகள் அடிமை வாழ்க்கை வாழ்ந்த நாம் அவற்றை மறந்துவிட்டோம். அல்லது மறக்கடிக்கப்பட்டோம் என்று அந்தப் பூசாரி கூறியிருந்தார். திரிபாதி மற்றும் அவரைப் போன்றவர்களும் இந்தப் பூசாரியின் மனநிலையில் இருப்பவர்கள்தான் என்று சந்தீப் பாண்டே என்னிடம் கூறியிருந்தார். பண்டைய இந்தியாவில் விமானங்களும் கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளும் இருந்ததாக நம்பும் ஆட்கள்தான் இவர்கள் என்றும் சொல்லியிருந்தார்.

துணைவேந்தரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன். அவர் இவற்றையெல்லாம் நம்புகிறாரா? “நான் இன்னமும் அப்படிச் சொல்கிறேன்” என்றார் கவனமாக. விளக்கமாகச் சொல்லச் சொல்லிக் கேட்டேன். இதெல்லாம் தொலைபேசியில் பேசும் விஷய மல்ல என்றும், பின்னர் இதற்கான ஆதாரங்களைத் தருவதாகவும் சொன்னார். அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தேச விரோதி

துணைவேந்தர் வலதுசாரி என்பதல்ல பிரச்சினை. பிரச்சினை, அவர் அந்தப் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதுதான். கல்வி நிறுவனம் ஒன்றில் மாற்றுக் கருத்து களுக்குத் தர வேண்டிய மதிப்பை உணர்ந்துகொள்வதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது தெளிவு.

ஆனால், சந்தீப் பாண்டே தன் வாழ்நாளை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பணிகளில் செலவழித்தவர். தேச விரோதி என்று முத்திரை குத்தி அவரைப் பதவி நீக்கம் செய்வது கொடுமையின் உச்சம். தேச விரோதி எனும் பதம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் ஆதரவாளர்களால் தற்போது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த, ஹைதராபாத் பல்கலைக்கழக முனைவர் ஆய்வுப் பட்ட மாணவரது செயல்பாடுகளுக்காக அவர் மீது தேச விரோத முத்திரை குத்தியது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவு. பல்கலைக்கழகத்தின் எல்லா இடங்களிலும் அம்மாணவருக்குத் தடை விதிக்கப்பட்டது. கடைசியில், அந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஒரு பெரும் சொத்தாக இல்லை. மாறாக, அது ஒரு சுமையாகவே இருந்துவருகிறது. வளர்ச்சி தொடர்பான மோடி அரசின் உறுதிமொழிகளுக்கு இடையில், கலாச்சாரம் மற்றும் கல்விப் புலத்தில் தனது தீவிரக் கொள்கைகளைப் புகுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். காத்திருக்கிறது. அவர்களுக்கு மட்டும் மோடி வாய்ப்பு தருவார் எனில், அவர்கள் அவரைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள். அவருக்குக் கிடைத்த பெரும்பான்மை பலத்தை, ஒரு சிலரின் பைத்தியக்காரத்தனத்துக்குப் பலியிட்டுவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இந்தியர்கள்’ என்பதற்கான பரந்துபட்ட கருத்தாக்கத்துக்கு அளவிட முடியாத சேதத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.

© ‘நியூயார்க் டைம்ஸ்’,

தமிழில்: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x