

மனக்கண் (காட்சிகளாகக் கற்பனை செய்துபார்க்கும் திறன்) என்ற விஷயத்தைப் பற்றி மருத்துவர் ஆடம் ஜிமான் பெரிதும் யோசித்ததில்லை, அதாவது அப்படியொன்று இல்லாத ஒருவரைச் சந்திக்கும் வரை. பிரிட்டிஷ் நரம்பியலாளரான ஆடமை 2005-ல் சந்தித்த பயனாளி ஒருவர், தனக்குச் சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்று செய்த பிறகு மனதில் காட்சிகளை உருவாக்கும் திறன் போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.
அந்த முதல் பயனாளியைச் சந்தித்த 16 ஆண்டுகளில் ஜிமானும் அவரது சகாக்களும் அதுபோன்ற மனக்கண் தங்களிடம் இல்லை என்று கூறிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைச் சந்தித்திருக்கிறார்கள். பல கோடிப் பேருக்கு இந்த நிலைமை இருப்பதாக அறிவியலர்கள் கணித்திருக்கிறார்கள். இதற்கு மனக்காட்சியின்மை நிலை (aphantasia) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இன்னும் பல கோடிப் பேர் மிகவும் அதீதமாக மனக்காட்சி தோன்றும் தன்மையைக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அதீத மனக்காட்சி நிலை (hyperphantasia) என்று பெயர். “எனக்குத் தெரிந்தவரை இது ஒரு கோளாறு அல்ல. மனித அனுபவத்தில் ஆர்வமூட்டும் ஒரு வகைதான் அது” என்கிறார் ஜிமான்.
ஜிமானை முதலில் வந்து பார்த்த பயனாளி ஒரு கட்டிட ஆய்வாளர். இதயத்தில் செய்யப்பட்ட சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தன் மனக்கண்ணை அவர் இழந்திருக்கிறார். அவரது அந்தரங்கத்தைக் காக்கும் பொருட்டு ஜிமான் அவரை எம்.எக்ஸ். என்று குறிப்பிடுகிறார். மனிதர்களையும் பொருட்களையும் எம்.எக்ஸ். நினைக்கும்போது, அவரது மனக்கண்ணில் அவர்களெல்லாம் காட்சியாகத் தோன்றவில்லை. எனினும், ஏற்கெனவே பார்த்தவற்றின் நினைவுகளைக் காட்சியாக அவரால் நினைவுகூர முடிந்தது. மனக்காட்சியின்மை நிலையை நன்கு புரிந்துகொள்வதற்காக ஜிமானும் அவரது சகாக்களும் கேள்விப் பட்டியல்களை உருவாக்கினார்கள். தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியவர்களை அந்தக் கேள்விப் பட்டியல்களை நிரப்புமாறு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இருட்டில் ஆப்பிளின் வடிவத்தை உணர்வது போன்றது தனது பிரச்சினை என்று ஒருவர் விவரித்தார்.
தங்களுக்கு மனக்கண் என்னும் திறன் இல்லை என்று கூறியவர்களில் பெரும்பாலானோருக்குப் பிறவியிலேயே அத்திறன் இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும் ஏற்கெனவே அவர்கள் பார்த்த விஷயங்களை நினைவுகூர்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மறுபுறம், மனக்காட்சியின்மை பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையின் விவரங்களைப் பிறர் அளவுக்கு நினைவுகூரும் திறனற்று இருக்கிறார்கள். புற உலகத்தைப் பற்றிய தகவல்களை நினைவுகூர்வதைவிட நீண்ட கால நினைவு என்று அழைக்கப்படும் நம் சொந்த அனுபவங்களை நினைவுகூர்வது மனக்கண்ணையே பெரிதும் சார்ந்திருக்கிறது.
ஜிமானும் அவரது சகாக்களும் ஆச்சரியம் அடையும் அளவுக்கு எம்.எக்ஸுக்கு நேரெதிரான நிலையைக் கொண்டவர்கள் அவர்களைத் தொடர்புகொண்டார்கள். அவர்களுக்கு மிகவும் வலுவாகக் காட்சிகள் தோன்றும் அதீத மனக்காட்சி நிலை இருந்திருக்கிறது. அதீத மனக்காட்சி நிலை என்பது இயல்பான கற்பனைத் திறன் என்பதைத் தாண்டி செல்லக்கூடியது என்கிறார் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிதிறன் நரம்பியல் அறிவியலர் ஜோல் பியர்ஸன். 2005-லிருந்து மனதின் காட்சித் திறனை அவர் ஆய்வுசெய்துவந்திருக்கிறார். “மிகவும் தீவிரமாகக் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அது உண்மையா இல்லையா என்று உறுதியாகத் தெரியாததைப் போன்றது இது” என்கிறார் அவர்.
உலக மக்கள்தொகையில் 2.6% மக்கள் அதீத மனக்காட்சி நிலையையும் 0.7% மக்கள் மனக்காட்சியின்மை நிலையையும் கொண்டிருக்கிறார்கள் என்று தங்கள் ஆய்வின் அடிப்படையில் ஜிமானும் அவரது சகாக்களும் முடிவுக்கு வந்தார்கள்.
அதீதமான மனச் சித்திரங்களை உணரும் மேலும் அதிகமான மக்களைத் தற்போது ஜிமானும் பியர்ஸனும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஜிமானால் தொடக்கத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 21 பேரில் ஒருவர் கனடாவில் ஒன்டாரியோவைச் சேர்ந்த தாமஸ் எபெயர். அஃபேன்டஸியா நெட்வொர்க் (Aphantasia Network) என்றொரு இணையதளத்தை இவர் உருவாக்கினார். இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் அவர்களை ஆராய்பவர்களுக்குமான கேந்திரமாக இந்த இணையதளம் உருவாகியிருக்கிறது. இந்தத் தளத்தில் உள்ள கருத்துக் கணிப்பில் 1.50 லட்சம் பேர் பங்குகொண்டிருக்கிறார்கள். இவர்களில் 20 ஆயிரம் பேரின் மதிப்பெண்கள் அவர்களுக்கு மனக்காட்சியின்மை நிலை இருப்பதாக உணர்த்துகின்றன. “இதுவொரு உலகளாவிய நிகழ்வு” என்கிறார் எபெயர்.
மனக்காட்சியின்மை நிலைக்கும் அதீத மனக்காட்சி நிலைக்கும் காரணமான நரம்பமைப்பைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சியாளர்கள் மூளை ஸ்கேன்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஒன்றுக்கொன்று தகவல் தொடர்பில் இருக்கும் மூளைப் பகுதிகளின் வலைப்பின்னலிலிருந்துதான் மனக்காட்சி உருவாகிறது என்பதை இந்த ஸ்கேன்கள் உணர்த்துகின்றன. மூளையின் முன்புறம் இருப்பதும், முடிவெடுத்தலுடன் தொடர்புடையதுமான பகுதிகள் மூளையின் பின்புறத்தில் உள்ள பகுதிகளுக்கு சமிக்ஞைகள் அனுப்பும்; இந்தப் பின்புறப் பகுதிகள்தான் கண்களிலிருந்து வரும் தகவல்களைப் புரிந்துகொள்கின்றன. இந்த சமிக்ஞைகளால் காட்சிகள் தொடர்பான பகுதிகளில் அங்கு இல்லாத பிம்பங்களை உருவாக்க முடியும்.
மனக்கண்ணின் வலிமையானது மக்களின் வாழ்க்கைப் போக்கில் நுட்பமான தாக்கத்தைச் செலுத்தலாம். மனக்காட்சியின்மை நிலை கொண்டவர்கள் சராசரியானவர்களைவிட அதிகமாக அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் ஈடுபட்டிருப்பது ஜிமானின் கேள்விப் பட்டியலிலிருந்து தெரியவந்தது. தனக்கு மனக்காட்சியின்மை நிலை இருப்பதால், அது ஓர் அறிவியலராக கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதற்குத் தனக்கு உதவியது என்று மரபணுத் தொழில்நுட்ப முன்னோடியான கிரெய்க் வென்ட்டர் உறுதிபடக் கூறியுள்ளார்.
ஆனால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. சார்லஸ் டார்வினின் எழுத்துகளைப் படித்துப் பார்க்கும்போது அவருக்கு அதீத மனக்காட்சி நிலை இருந்தது தெரியவருகிறது: காலையில் அவரது சாப்பாட்டு மேசையில் என்னென்ன இருந்தன என்று நினைவுகூரும்படி கேட்கப்பட்டபோது, அவையெல்லாம் “என் முன்னே புகைப்படங்கள் இருப்பதுபோல் மிகத் தெளிவாக” காட்சிகள் தனக்குத் தோன்றின என்று அவர் எழுதியிருக்கிறார்.
அதேபோல், மிகத் தெளிவான மனக்காட்சிகளைக் கொண்டவர்களுக்கு மட்டும்தான் படைப்புத் திறன் இருக்கும் என்று இல்லை. பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோவின் முன்னாள் தலைவர் எட் கேட்மல் தனக்கு மனக்காட்சியின்மை நிலை இருப்பதாக 2019-ல் அறிவித்தார்.
அதீத மனக்காட்சி நிலை ரொம்பவும் நிஜமானது போன்ற காட்சிகளை உருவாக்குவதால், அது பொய்யான நினைவுகளுக்கு வழிவகுக்கலாம். அதேபோல், வேதனை மிகுந்த அனுபவங்கள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும் சுமையிலிருந்து மனக்கண் இல்லாதவர்கள் கொஞ்சம் தப்பிக்கலாம். ஏனெனில், அந்த அனுபவங்கள் அவர்கள் மனதில் காட்சியாக மறுபடியும் ஓடாது.
மனக்காட்சியின்மை நிலை உள்ளவர்களுக்கு இல்லாத மனக்கண்ணைத் தருவதற்கு என்றாவது ஒரு நாள் சாத்தியம் ஏற்படலாம் என்று பியர்ஸன் கூறுகிறார். சராசரியான மக்களின் மூளையின் பார்வை தொடர்பான பகுதிகளுக்கு காந்தத் துடிப்புகளை வெளியிலிருந்தே செலுத்துவதன் மூலம் அவர்களின் மனக்காட்சித் திறனை மேலும் தெளிவானதாக ஆக்க முடியும் என்பதை அவர் கண்டறிந்திருக்கிறார்.
பியர்ஸனின் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் மனக்கண் சில நாட்கள் மட்டும் நீடித்தால்தான் நான் அந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளத் தயாராக இருப்பேன் என்கிறார் எபெயர். தேவையற்ற காட்சிகளெல்லாம் தனது மனதை ஆக்கிரமித்துக்கொள்ளத் தான் விரும்பவில்லை என்கிறார் அவர்.
“ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு எப்போதும் நம் மனக்கண்ணில் காட்சியைக் காணலாம் என்ற நிலை ஏற்படுமானால், நான் அந்த நிலையைத் தேர்ந்தெடுக்க மாட்டேன்” என்கிறார் எபெயர்.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை