Published : 10 Feb 2016 09:17 am

Updated : 10 Feb 2016 09:17 am

 

Published : 10 Feb 2016 09:17 AM
Last Updated : 10 Feb 2016 09:17 AM

மீத்தேன், கெயில் மட்டுமா... இன்னும் இருக்கு!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பையன் தேசியக் கொடிய எரிச்ச படத்த ஃபேஸ்புக்ல போட்ருந்தான். சில ‘தேச பக்தர்கள்’ தீயா வேலை பாத்து, அதை ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப்னு மூல முடுக்கெல்லாம் பரப்புனாங்க. ஒரே ஒரு வாசகத்தை மட்டும் எக்ஸ்ட்ராவா சேத்திருந்தாங்க. ‘உயிரினும் மேலான நம் நாட்டுத் தேசியக் கொடியை எரித்தவனின் போன் நம்பர் இது. திட்டுங்க, அவன் கதறணும்’ அப்படின்னு.

வழக்கமா ஜனகணமன பாடும்போதும், கிரிக்கெட் பாக்கும்போதும் மட்டுமே வர்ற தேசபக்தி, அந்த போட்டோவப் பாத்தப்பவும் வந்திருச்சி. நானும் பத்துப் பதினஞ்சி பேருக்கு ஃபார்வர்டு பண்ணிட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சி போலீஸ் அடிச்சி உடைச்ச கையோட அந்தப் பையனோட போட்டோவும், ‘நான் ஏன் தேசியக் கொடியை எரிச்சேன்’னு அவனோட தன்னிலை விளக்கமும் வந்துச்சி. தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்திய அரசு செய்த, செய்கிற துரோகங்களைப் புட்டுப்புட்டு வெச்சிருந்தான் அந்தப் பையன். அதைப் படிச்சதும் எனக்குத் தமிழ் உணர்வு பொங்கிருச்சி. இந்திய ஒன்றியத்துல இருந்து தமிழ்நாட்டைத் தனியா பிரிக்கிறதுதாம் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் தீர்வுன்னு ‘செறப்பா’சிந்திக்க ஆரம்பிச்சிட்டேன்.

நிறைவேறும் பிரதமர் கனவு

தமிழ்நாடு தனி நாடா இருந்தா எப்பிடியிருக்கும்னு மல்லாக்கப் படுத்து யோசிச்சிப் பாத்தேன். ஜெயலலிதாவோட பிரதமர் கனவு உடனே நிறைவேறிடும். அப்படியே நாலு மாகாணங்களா பிரிச்சிட்டா, திமுகவோட தலையாய பிரச்சினையும் தீர்ந்திரும். வடக்கு மாகாணத்துக்கு ஸ்டாலினையும், தெற்கு மாகாணத்துக்கு அழகிரியையும், மேற்குக்கு கனிமொழியையும் முதல்வர் வேட்பாளரா அறிவிச்சிட்டு, மிச்சம் இருக்கிற கிழக்கு மாகாண முதல்வர் வேட்பாளரா கலைஞரே களம் இறங்கலாம். தேமுதிக ரொம்ப முரண்டு பிடிச்சா, மேற்கை மட்டும் விஜயகாந்த்துக்கு விட்டுக்குடுத்திடலாம்.

மக்கள் நலக் கூட்டணியில, ஆளுக்கொண்ணுன்னு வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன்னு நான்கு பேரும் முதல்வர் வேட்பாளராகிடலாம். அன்புமணி ராமதாஸோட முதல்வர் ஆசையும் நிறைவேறிடும். தேர்தல் சீசன்ல ஊர் ஊருக்குக் கைக்காசப் போட்டு மாநாடு நடத்துறாங்க பாருங்க, அவங்களுக்கும் ஆட்சியில பங்கோ, எம்எல்ஏ சீட்டோ கெடைச்சிடும். எப்பூடி?!

கற்பனையும் யதார்த்தமும்

எப்பவுமே கற்பனை நல்லாத்தான் இருக்கும். ஆனா, யதார்த்தம் அப்பிடியில்ல. தமிழ்நாடு தனி நாடானா சீக்கிரமே மன்னர் காலத்துல இருந்த மாதிரி சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடாப் பிரிஞ்சிபோயிடும். எப்படி தமிழ்நாட்டுப் பிரச்சினைய இந்திய அரசு கண்டுக்கிடலைன்னு சொத்தப் பிரிச்சி வாங்கிட்டு வந்தோமோ, அதே மாதிரி கேட்கிறதுக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்காரனுக்கும் ஒரு மனக்குறை இருக்கத்தான் செய்யுது.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரா அந்தப் பகுதிக்காரங்க 20 வருஷமா போராடிக்கிட்டே இருக்காங்க. போராடுன குத்தத்துக்காக 2 லட்சத்தி 27 ஆயிரம் பேர் மேல 380 வழக்குப் போட்டாங்களே, அப்ப சென்னைக்காரங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க? “என்னது… சிங்காரச் சென்னையில ஒரு மணி நேர மின்தடையா? உடனே, கூடங்குளம் அணு உலையத் திறங்கய்யா”ன்னு சவுண்ட் விட்டாங்க. 8 மணி நேர மின் தடைய அனுபவிச்ச மதுரைக்காரங்க ஒரு படி மேல போய், அணு உலையைத் திறக்கச் சொல்லிக் கடையடைப்புப் போராட்டமே நடத்துனாங்க.

என்ன ஒரு ஒற்றுமை!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில ஆறு மாவட்ட விவசாயிங்க கம்பத்துல போராடுனாங்க. குமுளி பாதைய மறிச்சிட்டதால கேரளாவுக்கு காய்கறிலேருந்து ஆடு, மாடு வரைக்கும் எதுவும் போகல. கேரளாக்காரன் சரணடையப்போறாம் பாருன்னு எதிர்பார்த்த நேரத்துல, ஒரு திருநெல்வேலிக்காரன் என்ன செஞ்சாம் தெரியுமா? ‘ஏலே கூமுட்டப் பயல்வளா, எதுக்குல்ல குமுளியில காத்துக்கிடக்கிய? பக்கத்துல தானல செங்கோட்டை கணவாய் இருக்கு, அதுவழியா கேரளா போங்கல’ன்னு லாரிக்காரங்களுக்கு வழி காட்டிட்டான். என்ன ஒரு ஒற்றுமை!

வைகைக் கரையில கூல்டிரிங்ஸ் கம்பெனிக்காரன் பிளாண்ட் போட்டப்ப திருநெல்வேலிக்காரன் வாய் தொறக்கல, தாமிரபரணிக்கரையில போடும்போது மதுரைக்காரன் வாய் திறக்கல. நொய்யல் ஆத்துல சாயக்கழிவு கலந்தா என்ன; பாம்பாத்துக்குக் குறுக்க கேரளாக்காரன் அணை கட்டுனா என்ன; அது கொங்கு மண்டலப் பிரச்சினைன்னு விட்டுட்டோம். குமரி மாவட்டத்துக்குத் தண்ணி தந்த நெய்யாற்றங்கரை ஷட்டரை 2004-ல அடைச்ச கேரளாக்காரன், இன்னும் தொறக்கல. இப்பிடியொரு ஆறு இருக்கிறதாவது வட மாவட்டத்துக்காரங்களுக்குத் தெரியுமா?

மாநிலப் பிரச்சினையா, மாவட்டப் பிரச்சினையா?

கிரானைட் குவாரி, மீனவர் பிரச்சினை, தாது மணல் கொள்ளை, ஆத்து மணல் கொள்ளை, மேகதாது அணை, சீனப் பட்டாசு, ஜல்லிக்கட்டு, கவுரவக் கொலைன்னு மாநில பிரச்சினையப் பூராம் அந்தந்த மாவட்டப் பிரச்சினையா மாத்திவுட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கோம். இவ்வளவு ஏன்? தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தையே நாசமாக்கக் காத்திருக்கிற மீத்தேன் திட்டத்துக்கு எதிரா, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள்ல எத்தன போராட்டங்க நடந்திருக்கு?

அணுஉலை, நியூட்ரினோ, கோகோ கோலான்னு கேரளாக்காரன் வெரட்டிவிட்ட திட்டத்தைப் பூராம் தமிழ்நாட்ல நிறைவேத்த நாம அனுமதிச்சதால தாம், இன்னைக்கு கேரளாவுல இருந்து பெங்களூருக்கு கேஸ் கொண்டு போறதுக்கு, சம்பந்தமே இல்லாம தமிழ்நாட்டுல குழாய் பதிக்காங்க. படிச்சவங்க சில பேரு, ‘வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கக் கூடாது’ன்னு வெவரங்கெட்டத்தனமா பேசுறாங்க. ஏன்யா, திட்டமே வேணாம்னா போராடுறாங்க, விவசாயிக சோத்துல மண்ணப் போடாம ரோட்டோரமா குழாய் பதிங்கன்னு தானய்யா போராடுறாங்க? பாவம் ஏழு மாவட்ட விவசாயிங்க.

வைகோவும் இனி போராட முடியாது

நமக்கு ஒரு பிரச்சினைன்னா டாண்ணு வந்து நிக்க அரசியல்வாதிங்க என்ன கடவுளா? நாம போராடுனா, கூட்டத்தப் பாத்து தானா வருவாங்க. எவ்வளவுதாம் நாம கிண்டல் பண்ணுனாலும், எந்த ஊர் பிரச்சினைன்னாலும் வைகோ மட்டும்தாம் நேர்ல போய் உணர்வோட போராடுறாரு. இனிமே அவரும் போராட முடியாது. கூடங்குளத்துக்கோ, நியூட்ரினோவுக்கோ எதிரா அவர் போராடுனா, ‘கம்யூனிஸ்ட்டுகளுடன் வைகோ உரசல், மக்கள் நலக் கூட்டணியில் விரிசல்’னு ரைமிங்கா செய்தி வாசிப்பாங்க. செல்ஃபில ஒருத்தர் மட்டும் ‘டைமிங்’ல சிரிக்காம இருந்தாலே, அவருக்கு மனக்கசப்புன்னு அடிச்சிவிடுற பயல்கதான நாம?!

இந்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கது இருக்கட்டும்... நாம கன்னியாகுமரியை எப்பிடி வெச்சிருக்கோம்? ராசா வீட்டுப் பிள்ளை, ஒரு குடிகாரனை நம்பி வந்த கதையாப்போச்சி இந்த ‘குமரி’யோட வாழ்க்கை. வெறும் 80 கிலோ மீட்டர்ல தலைநகர் இருந்த மாநிலத்தை விட்டுட்டு, 700 கி.மீ. தள்ளி ‘தலை’ இருக்கிற தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, அவங்க படுற பாடு ஒண்ணா ரெண்டா? அங்க ஓடுற போன நூற்றாண்டு ஓட்ட பஸ்களே ஓராயிரம் கதை சொல்லும்.

அரசாங்கத்துக்கிட்ட கேட்டா, ‘நாங்க குமரிய மட்டும் இப்பிடிப் புறக்கணிக்கல. சென்னையத் தவுர, எல்லா மாவட்டத்தையும்தாம் புறக்கணிக்கோம், ஸாரி ஒரே மாதிரிதாம் நடத்துறோம்'னு சொல்வாங்க.

நம்ம நாட்டு வரைபடமே பொய். நமக்கு மண்டை உண்டு, கொண்டை கெடையாதுங்கிற உண்மைய எவ்வளவு காலம் மக்கள்கிட்ட மறைக்கப்போறோமோ தெரியல. இந்த லட்சணத்துல தமிழ் தேசியம், இந்திய தேசியம்னு கூப்பாடு போடுறாங்க.

தென்னிந்தியாவிலேயே அதிக எம்பிக்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு(39) தாம். ஆந்திரா(25), கர்நாடகா(28), கேரளா(20), தெலுங்கானா(17)ன்னு பக்கத்து மாநிலங்கள சமாளிக்கிறதுக்கு நமக்குத் தேவை ஒத்துமை மட்டும்தாம்.இல்லன்னா, மீத்தேன், கெய்ல் மாதிரி இன்னும் நூறு அழிவுத் திட்டம் தமிழ்நாட்டுக்கு வரும். பக்கத்து வீட்டுத் தீயை அணைக்காம வேடிக்கை பாத்தா, நம்ம வீட்டுக்கும் தீ பரவும்ங்கிறத அனுபவிச்சித்தான் புரிஞ்சிக்கணுமா?

ஆமா, அனைத்துக் கட்சிக் கூட்டம்னு ஒண்ணு தமிழ்நாட்ல நடந்து எத்தன வருஷமாச்சி?!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மீத்தேன் திட்டம்தமிழக பிரச்சினைகள்அரசியல் கட்சிகள்போராட்டம்அப்புறம் என்னாச்சுனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author