

‘ஐயா, என் கிணத்தைக் காணோம்...’ மாயமான தனது கிணறு குறித்துக் கதறியபடி புகார் கொடுக்கச் செல்லும் நடிகர் வடிவேலுவின் கதறலைப் பார்த்து போலீஸாரே மிரண்டுபோகும் அளவுக்குப் பிரபல காமெடி இது. இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்கு உட்பட்ட கோயில்களில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் காணோம் என்பது பற்றிய வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கோயில்களுக்குச் சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டதாகவும், இதை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைக் கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர், “தமிழக அரசு 1985-87-ம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் உள்ள 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவரங்களையும், அதேபோல, 2018-20-ம் ஆண்டுகளில் வெளியிட்டுள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் சொத்துவிவரப் பட்டியலையும் தனி அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மாயமான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரின் இந்தக் குற்றச்சாட்டு அதிர்ச்சிகரமானது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். (‘இந்து தமிழ்’ – 10.06.2021)
கோயில் சொத்துகளைத் தனியார் அபகரிப்பதைத் தடுக்க அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிவருகின்றன. தனியாரிடம் கோயில் நிர்வாகத்தை விட்டால் ஊழல் பெருகும் என்றும், ஏற்கெனவே ஊழல்கள் நடந்ததால்தான் இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன என்றும் சொல்கிறது எதிர்த்தரப்பு.
இந்த வாதப் பிரதிவாதங்கள் திமிலோகப்படும் நேரத்தில், இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்ட காலம், அப்போதைய சூழலில் அதற்கு எழுந்த ஆதரவு, எதிர்ப்புக் கருத்துக்கள் ஆகியவற்றை அன்றைய காலகட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வழியே பார்ப்போம்.
கோயில் சொத்துகளை அரசின் கீழ் கொண்டுவர 1922-ல் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் பனகல் அரசரால் இந்து பரிபாலனச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு முன்பே இதற்கான முயற்சிகள் நடந்துவந்தன. எனினும், ஆங்கிலேயர் ஆட்சியில் அரசின் கொள்கைகளுக்கு முரணாக இருக்கிறது என்று கூறி, 1894-ல் இது தொடர்பான சென்னை மாகாண அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதுபற்றி இந்திய அரசு, சென்னை மாகாண அரசுக்குக் கடிதம் எழுதியது. அந்தச் செய்தி…
‘சென்னை மாகாணத்தில் இந்து சமய அறக்கட்டளைகளைச் சிறப்பாக நிர்வகிக்க, அரசு அறக்கட்டளை அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவானது, மத விவகாரங்களில் அரசு தலையிடாது என்ற கொள்கைக்கும் மத நிறுவனங்களுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற 1863-ன் இந்திய அரசின் சட்டத்துக்கும் முரணாக உள்ளது. 1863-ல் இயற்றப்பட்ட சட்டத்தின் நடைமுறைகளைத் திருத்தவோ மாற்றியமைக்கவோ கோரும் எந்தக் கோரிக்கைக்கும் எந்தச் சூழ்நிலையிலும் இந்திய அரசு அனுமதி வழங்க முடியாது.’ (‘தி இந்து’- 21.9.1894)
இந்தச் செய்தி வெளியான சில தினங்களில் கோயில் சொத்துகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று ‘தி இந்து’ தனது தலையங்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்தது.
‘மக்களின் மத உணர்வுகளை மதிப்பதுபோல் பாசாங்கு செய்யும் பொறுப்பற்ற, மத உணர்வுகளை அவதூறு செய்து அட்டூழியத்தில் ஈடுபடும் அறங்காவலர்களின் தவறான நிர்வாகத்தால் அழிந்துவரும் கோயில்களைக் காப்பாற்றுவதில் தலையிட அரசு மறுக்கிறது. இந்துக்களுக்குப் பொதுவான சிந்தனை நோக்கு இல்லாததால் கோயில்கள் அழிவதை அரசு வேடிக்கை பார்க்கிறது.’ (‘தி இந்து’ - 26.09.1894)
பின்னர், சென்னை மாகாண அரசின் பல்வேறு தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, கோயில் சொத்துகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் மசோதா 1922-ல் சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பேசிய நீதிக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சிவஞானம் பிள்ளை (இவர் பின்னர் பனகல் அரசரின் இரண்டாவது அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்) முக்கியமான கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.
‘சிவஞானம் பிள்ளை பேசுகையில், “இந்து மத நிறுவனங்களின் உபரி நிதி மதச்சார்பற்ற வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. உபரி நிதி இருந்தால், அந்த நிதியைச் சம்பந்தப்பட்ட கோயில்களுக்கோ அல்லது அருகில் உள்ள கோயில்களின் பராமரிப்பு மற்றும் மராமத்துப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” (‘தி இந்து’ - 19.12.1922)
சட்டசபையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விவாதங்களுக்குப் பின், இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம்-1923 சென்னை மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு 1925-ல் இந்திய அரசுக்கான செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். இந்தச் செய்தி 06.08.1925 ‘தி இந்து’வில் வெளியாகியுள்ளது.
இந்தச் சட்டத்துக்கு அப்போது எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் இந்தச் சட்டம் செல்லாது என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேவஸ்தானம் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், ‘1843 ஜூலை 10-ம் தேதியிட்ட கடிதத்தின்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான வகையறாக்கள் தலைமை அர்ச்சகர் சேவாதாஸ்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. சட்டபூர்வமான அந்த ஒப்பந்தத்துக்கு எதிராக எந்தச் சட்டமும் நிறைவேற்ற மாகாண சட்டசபைக்கு அதிகாரம் இல்லை. எனவே, அறக்கட்டளைகள் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. (‘தி இந்து’ – 15.10.1925)
பிறகு, 1927-ல் இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டு, திருக்கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள், மடங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இந்து சமய அறக்கட்டளைகள் வாரியம் அமைக்கப்பட்டது தொடர்பான சட்டம் செல்லும் என்று 1928 ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்துள்ளது. இதுபற்றி ‘தி இந்து’வில் வெளியான செய்தி...
‘இந்து சமய அறக்கட்டளைகள் வாரியம் அமைக்கப்பட்டது செல்லும். 1927 சட்டம் 2 பிரிவு 7-ன் கீழ் சென்னை மாகாண சட்டசபை தனது அதிகாரத்துக்கு உட்பட்டுதான் இந்து சமய அறக்கட்டளைகள் வாரியத்தை முறையாக அமைத்துள்ளது. இது தொடர்பான சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அரசின் சட்டம் செல்லும்’ என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (‘தி இந்து’ - 08.08.1928)
பின்னர், காலப்போக்கில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையங்கள் வாரியத்தை சீர்படுத்தும் வகையில் 1940-ல் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். அவர் பரிந்துரைப்படி இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம்-1951 இயற்றப்பட்டு, சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு, அறக்கட்டளைகள் நிர்வாகத்தை அரசே ஏற்றது. சில நடைமுறைச் சிக்கல்களைக் களைய 1959-ல் இந்து சமய மற்றும் அறக்கட்டளைகள் சட்டம் 22/1959 இயற்றப்பட்டு, இச்சட்டம் 01.01.1960 முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் காலத்திற்கேற்பத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கோயில்களுக்குச் சொந்தமான, காணாமல்போன 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட வேண்டும், கோயில்களின் நிர்வாகம் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதோடு, கோயில்கள் ஊழல்வாதிகளான கொடியவர்களின் கைகளில் சிக்கக் கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
1952 அக்டோபர் 17-ம் தேதி வெளியாகி, வசனகர்த்தாவாக கருணாநிதிக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த ‘பராசக்தி’ திரைப்படத்தில் அவர் எழுதிய வசனம்தான் இது… ‘‘கோயிலிலே குழப்பம் விளைவித்தேன்.. கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக….. !’’
கொடியவர்கள் யார் என்பதுதான் இப்போது கேள்வியே!
தகவல் உதவி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம் ஏ.சங்கரன், விபா சுதர்ஷன்.