

கடந்த அதிமுக ஆட்சியில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் அது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அதே தேதியிட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்துசெய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இவ்வழக்குகளில் பதிலளிக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் உள் இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்தாலும், தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுக்கான அரசாணையில் அடிப்படையிலேயே தவறான ஓரிடம் உள்ளது. 2.5% இடஒதுக்கீட்டில் உள்ள 22 சாதிகளில், 21-வது சாதியாக மூன்றாம் பாலினத்தவரைச் சேர்த்திருக்கிறார்கள். திருநங்கை/ திருநம்பி எனத் தனித்த சாதி கிடையாது. ஆண்பால், பெண்பால்போல் அவர்கள் மூன்றாம் பாலினத்தவர். சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடும் பாலின அடிப்படையிலான இட ஒதுக்கீடும் வெவ்வேறானவை.
மூன்றாம் பாலினத்தவர் அனைவரையும் 2.5% இடஒதுக்கீட்டில் கொண்டுவந்து சேர்ப்பதன் மூலம் உடனடியாகத் தோன்றும் நடைமுறைக் குழப்பங்கள்:
1.பட்டியலினத்தில் பிறந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த திருநங்கையோ / திருநம்பியோ, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு உயர்த்தப்படுகிறார்கள். 18% இடஒதுக்கீட்டிலிருந்து 2.5% இடஒதுக்கீட்டுக்குள் அவர்கள் வந்துவிடுவார்கள். இதனால் சாதி அடிப்படையில் கிடைக்கும் உரிமையை, பாலின அடிப்படையில் பறிகொடுக்க நேரும்.
2. வன்னியர் இனத்தில் பிறந்த மூன்றாம் பாலினத்தவர், இதுவரை தங்களுக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்த 20% இடஒதுக்கீடு வாய்ப்பை இழக்கின்றனர். தற்போதைய அரசாணை மூலம் 10.5% கிடைத்துள்ள உள்ஒதுக்கீடும் அவர்களுக்குக் கிடையாது. 2.5%-க்குள் முடக்கப்படுகிறார்கள்.
3. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வந்தாலும், அவர்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டிலிருந்து, 22 சாதியினரோடு சேர்ந்து 2.5%-ல் போட்டி போட வேண்டிய நிலை.
4.பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள் 26.5% இடஒதுக்கீட்டை இழந்து, 2.5% இடஒதுக்கீட்டுக்குள் வந்துவிடுவார்கள்.
5.பிற்படுத்தப்பட்ட, பொதுப் பிரிவைச் சார்ந்த திருநங்கைகள் அனைவரும் 22 சாதியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் வரும்போது, ஏற்கெனவே அந்தப் பிரிவுக்குள் உள்ள 21 சாதியினரின் வாய்ப்புகள் குறையும்.
இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, சமூகத்தின் புறக்கணிப்புகளைத் தாங்கி, மூன்றாம் பாலினத்தவர் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புகளில் அரசு நிறுவனங்களின் வழியாக அவர்கள் பெறும் அங்கீகாரம் மட்டுமே அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.
சாதிரீதியிலான இடஒதுக்கீட்டில், பாலின இடஒதுக்கீட்டை நுழைத்த சமூக விஞ்ஞானிகள் யாரென்று தெரியவில்லை. அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ? அடிப்படைப் புரிதலற்ற சிலரின் முடிவுகள் அரசாணையாக்கப்பட்டால் அதைச் சரிசெய்யவே மீண்டும் எத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்? அரசிடம், அரசுப் பிரதிநிதிகளிடம், நீதிமன்றங்களிடம் என நடையாய் நடந்து, அரசாணையின் குழப்பங்களை விளக்குவதற்குள் கால் நரம்பு வெளித் தெரிந்துவிடும்.
மேற்சொன்ன வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான நாகேஸ்வர ராவ், “1994-ல் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே 69% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அது தொடர்பான வழக்கில் இத்தனை ஆண்டுகள் ஆகியும்கூட இன்னும் எந்த ஒரு இறுதி முடிவும் வராமல் இருக்கக்கூடிய சூழலில், இந்த வழக்கை நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதால் என்ன பலன் ஏற்படப் போகிறது” என்று கேட்டிருக்கிறார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு என்பதில் தமிழ்நாடு மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடம் இது. பாலின அடிப்படையிலான இடஒதுக்கீடு போன்ற குழப்படிகள் வெளிப்படும்போது, உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை நம்மால் தீர்மானிக்க முடியாது.
சமூக நீதியைக் காக்க, தற்போதைய தமிழ்நாடு அரசு முந்தைய ஆட்சியின் அரசாணையை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். சமூகத்தின் புறக்கணிப்பிலிருந்து மேலேறி வருபவர்களைக் கைப்பிடித்துத் தூக்கிவிடுவதற்குப் பதில், அவர்களை மேலும் ஒடுக்கிவிடக் கூடாது. சென்ற திமுக ஆட்சியில்தான் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டு, அவர்களின் நலன்காக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேற்சொன்ன அரசாணையை இன்றைய திமுக அரசு சரிசெய்வதோடு, மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் பாலின அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுப்பது குறித்தும் யோசிக்கலாம். அது, சமூக நீதியின் இன்னொரு மைல்கல்லாக அமையும்.
- அ.வெண்ணிலா, எழுத்தாளர், ‘சாலாம்புரி’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: vandhainila@gmail.com