சி.டி.குரியன்: முன்னோடிப் பொருளியர்

சி.டி.குரியன்: முன்னோடிப் பொருளியர்
Updated on
2 min read

பொருளியல் ஆய்வுகளிலும் திட்டமிடலிலும் மிகப் பெரும் பங்களிப்புகளைச் செய் திருக்கும் பேராசிரியர் கிறிஸ்டோபர் தாமஸ் குரியன், 90-வது வயதில் அடியெடுத்துவைத்திருக்கிறார். அவர் தனிச்சிறப்பு மிக்க ஆய்வாளர் என்பதோடு, 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்விப் பணியோடு மிகச் சிறப்பான ஆய்வாளராகவும் விளங்கிவருபவர். மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியிலும் பின்பு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் பட்டம்பெற்ற அவர் 1962-ல் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதற்கு முன்பே அவர் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்த அவர், அதன் தொடக்கக் காலத்திலிருந்து இப்போது வரைக்கும் அந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நிறுவனத்தின் இயக்குநர், தலைவர், தற்போது ஆயுட்கால அறங்காவலர்களில் ஒருவர் என்று முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது தலைமையின் கீழ், எம்ஐடிஎஸ் இந்தியாவில் தேசிய அளவிலான மிகச் சிறந்த சமூக அறிவியல் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சிபெற்றிருக்கிறது.

சி.டி.குரியன் 1999-ல் மால்கம் மற்றும் எலிசபெத் ஆதிசேஷய்யா அறக்கட்டளையின் முதலாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2000-ல் இந்தியப் பொருளியல் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்புவகித்தார். அவர் இதுவரையில் 15-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இந்தியப் பொருளியலின் வெவ்வேறு கூறுகளைக் குறித்து எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

2012-ல் அவரது எண்பதாவது வயதில், ‘பொருள்வளமும் தோல்வியும்: நடைமுறை வாழ்வின் பொருளியலுக்குள் ஒரு பயணம்’ என்ற புத்தகம் வெளியானது என்பதே அவரது எழுத்தார்வத்துக்கும் ஆய்வுகளின் மீது கொண்டிருக்கும் பொறுப்புணர்வுக்கும் சான்று. 2018-ல் அவரது அடுத்த புத்தகமான ‘நடைமுறை வாழ்வின் பொருளியல்: ஒரு புதிய விளக்கம்’ வெளியானது.

சி.டி.குரியனின் ஆய்வுகள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் நிலவும் ஏற்றத்தாழ்வு குறித்த பிரச்சினைகளுக்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் மேம்பாட்டை உருவாக்குவதற்கான கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சிப் போக்கின் இயங்குவிசை குறித்த அவரது ஆய்வை இந்திய சமூக அறிவியல் ஆய்வு மன்றத்தின் (ஐசிஎஸ்எஸ்ஆர்) ஆய்வு ஆலோசனைக் குழுவானது அங்கீகரித்ததோடு மற்ற இந்திய மாநிலங்களிலும் அதுபோன்ற ஆய்வுகளை வடிவமைக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுமாறு எம்ஐடிஎஸ் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது. அதன் விளைவாக, அத்தகைய ஆய்வுகள் பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நடத்தி முடிக்கப்பட்டன.

1971 பொதுத் தேர்தலையடுத்து, மத்தியில் இந்திரா காந்தியும் மாநிலத்தில் மு.கருணாநிதியும் ஆட்சியில் தொடர்ந்த நிலையில், வளர்ச்சியை முடுக்கிவிடுவதற்கும் கிடைக்கும் வருமானத்திலிருந்து வறுமைநிலையைக் குறைப்பதற்குமான பொருளாதார யோசனைகள் செல்வாக்கு செலுத்தின. தமிழ்நாட்டின் மாநிலத் திட்டக் குழுவில், பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் மஹலனோபிஸ் போல தமிழ்நாட்டுக்கான திட்ட மாதிரி ஒன்றை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்த முக்கிய கமிட்டி ஒன்றில் குரியன் இடம்பெற்றிருந்தார். அவர் தனது பிரபலமான கட்டுரைகளில் இரண்டினை அப்போது எழுதினார்: ‘வளர்ச்சி என்றால் என்ன?’, ‘தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்புக்கான ஒரு கட்டமைப்பு’. எந்தெந்தத் துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சியென்று குறிப்பிடப்படாததும் விளங்கிக்கொள்ள முடியாததுமான வளர்ச்சி ஏழைகளுக்குப் பலனளிக்காது என்று முதலாவது கட்டுரை வாதிட்டது. இரண்டாவது கட்டுரையில், மாநிலத்தில் உள்ள ஏழைகளைத் தனித் தனிப் பிரிவுகளாக வகைபிரித்தார். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகும், நாம் இப்போதும்கூட வளர்ச்சியைக் குறித்தும் தரவுகளின் தரம் மற்றும் அதற்கான வாய்ப்புகளைக் குறித்தும் அதே விதமான கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

எம்ஐடிஎஸ்-ல் அவர் மேற்கொண்ட பல புதிய முயற்சிகளுள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று, மிகச் சிறந்த ஆலோசனைக் குழு ஒன்றுடன் இணைந்து ‘ரிவ்யூ ஆஃப் டெவலப்மென்ட் அண்ட் சேஞ்ச்’ (ஆர்டிசி) என்ற குறிப்பிடத்தக்கதொரு அரையாண்டு ஆய்விதழைத் தொடங்குவதற்கான அவரது எண்ணம். அந்த ஆய்விதழின் நோக்கம் அன்றும் இன்றும் இதுதான்: நமது சமூகத்தில் இடம்பிடிக்கின்ற மாற்றங்களின் வெவ்வேறுபட்ட அம்சங்களையும் ஆராய்வதற்கு ஒப்புவித்துக்கொள்ளுதல். மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்தின் பிரச்சினைகளை ஆழமாக உணர்ந்துகொள்ளும் ஆய்வுகளை ஊக்கப்படுத்துவதும் அவற்றைக் கவனத்துடன் ஆவணப்படுத்துவதும், அதே கவனத்துடன் அவற்றை விளக்குவதும் கண்டடைதல்களை வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் வாசகர்கள் ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறையில் சொல்வதும் இந்த ஆய்விதழின் நோக்கம். ஆர்டிசி ஆய்விதழானது தற்போது எம்ஐடிஎஸ் நிறுவனத்திற்காக சேஜ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுவருகிறது.

எம்ஐடிஎஸ்-ம் குரியனும் ‘இடதுபக்க’ சாய்வுநிலையொன்றைக் கொண்டிருப்பதாக நிலவும் பொதுக் கருத்து பகுத்தாராயப்பட வேண்டியது. அவர் தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘நடைமுறை வாழ்க்கையின் பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள், அதைப் பகுத்தாராயவும் அதன் மீது வெளிச்சம் காட்டவும் உங்களுக்கு உதவக்கூடிய எந்தக் கொள்கையையும் பயன்படுத்துங்கள்’. பேராசிரியர் குரியனின் இந்தப் பாரபட்சமற்ற அறிவுரை, இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு மதிப்புமிக்க வழிகாட்டலாகும். அவர் ஒரு முன்னுதாரணமான ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும், ஆய்வு மேற்பார்வையாளராகவும் இருந்திருக்கிறார். எம்ஐடிஎஸ் நிறுவனத்தில் அவரது முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களில் வி.கே.ராமச்சந்திரன், ஜெ.ஜெயரஞ்சன் ஆகிய இருவரும் முறையே கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் திட்டமிடும் குழுக்களின் துணைத் தலைவர்களாக இருக்கிறார்கள்.

விசேஷமான ஒரு சூழலில் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வேறொரு சூழலில் பார்க்கும்போது, அவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் அங்கே இருப்பதாகத் தோன்றும் உணர்வைப் பற்றி பேராசிரியர் குரியன் ஒருமுறை எழுதியிருக்கிறார். அத்தகைய புகைப்படங்கள் கால எல்லைகளைத் தாண்டியவை. விரிந்து பரந்த கல்வி வட்டத்துக்கு, அவரே அப்படியொரு பழைய நினைவுகளைக் கிளர்த்தும் புகைப்படங்களின் தொகுப்பாக இருக்கிறார்.

- பி.ஜி.பாபு, இயக்குநர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், தொடர்புக்கு: babu@mids.ac.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in