

தமிழக மக்கள்தொகையில் 40% பேர் விவசாயத்தை நம்பியிருப்பவர்கள். ஆனால், விவசாயத்தின் இன்றைய நிலை என்ன என்பதை தமிழக வேளாண் துறையின் சுயவிவரக் குறிப்பே தெளிவுபடுத்துகிறது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 1960-1961-ல் சுமார் 42.46% ஆக இருந்த வேளாண்மையின் பங்கு அடுத்த அரை நூற்றாண்டில் 7.5 % ஆகக் குறைந்தது. பொருளாதாரத்தில் விவசாயப் பங்களிப்பு குறைவது பெரிய குற்றம் அல்ல. ஆனால், விவசாயிகளை விளிம்புநிலையில் இன்றைய தமிழகம் வைத்திருக்கிறது. தேர்தலுக்குத் தேர்தல் ஏமாற்றங்களையே விவசாயிகள் சந்திக்கிறார்கள். இன்றைய சூழலில், விவசாயிகளை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் பேசுவதும் குறைந்துவிட்டது.
உண்மையில், தமிழக விவசாயிகளின் அதிமுக்கியமான கோரிக்கைகள் என்ன, வரவிருக்கும் அரசாங்கத்திடம் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
ஆறுபாதி கல்யாணம், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்.
விவசாயிகள் வாழ்வு வளம்பெறவும், கிராமங்களைக் காலி செய்துவிட்டு மக்கள் நகரங்களை நோக்கி ஓடாதிருக்கவும், நாட்டின் உணவுத்தேவை தன்னிறைவு பெறவும் ஒட்டு மொத்தமான ஒரே தீர்வு ஜே.சி.குமரப்பா வகுத்த ‘தற்சார்பு பசுமைக் கிராமங்க’ளை உருவாக்குவதுதான். அதனை நிறைவேற்றும் வழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட்டும், 20% நிதி ஒதுக்கீடும் வேண்டும். காவிரி, முல்லைப்பெரியாறு எனத் தமிழகத்தின் நீராதார உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாடும் செயல்திட்டமும் வேண்டும்.
உ.மாயாண்டி, பொட்டல், திருநெல்வேலி.
தாமிரபரணி நல்லா இருந்தாத்தாங்க நாங்கெல்லாம் நல்லபடியா விவசாயம் செய்ய முடியும். அதனால, தாமிரபரணி ஆத்துக்குப் பங்கம் வராமப் பாத்துக்கணும். தண்ணீரைத் தனியார் ஆலைகளுக்கு விக்கிறதும், மணலைக் கொள்ளை அடிக்கிறதும், சாக்கடையையும், கழிவையும் ஆத்துல கொட்டுறதையும் அரசாங்கம் தடுக்கணும்.