Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

டெல்டா பிளஸ் குறித்து அச்சம் வேண்டாம்!: அனுராக் அகர்வால் பேட்டி

பிந்து ஷாஜன் பேரப்பாடன்

அனுராக் அகர்வால் டெல்லியில் உள்ள, மரபியலுக்கும் ஒருங்கிணைந்த உயிரியலுக்கு மான நிறுவனத்தின் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர். கரோனா வைரஸின் டெல்டா வேற்றுருவங்கள், தடுப்பூசிகளின் திறனில் அவை ஏற்படுத்தும் தாக்கம், வைரஸில் ஏற்படும் திரிபுகளின் (mutation) காரணம், வைரஸின் வேற்றினத்துக்கும் வேற்றுருவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு போன்றவற்றைப் பற்றி அவர் பேசியதிலிருந்து…

டெல்டா வேற்றுருவம் என்றால் என்ன? டெல்டா பிளஸ் வேற்றுருவத்திடமிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது?

சார்ஸ்-கோவ்-2, பி.1.617.2 வைரஸின் ஒரு வேற்றுருவத்துக்குத் தற்போது டெல்டா வேற்றுருவம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கூர்ப் புரதங்களில் அது திரிபுகளைக் கொண்டிருக்கிறது, இது அந்த வைரஸ் மேலும் அதிகமாகப் பரவுவதற்கும் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியிடமிருந்து தப்பிக்கவும் வழிவகுக்கிறது. இந்த வடிவம் ஏற்கெனவே உலகெங்கும் 80 நாடுகளில் பரவிவிட்டது. இந்தியாவை அடுத்து இந்த வைரஸ் பிரிட்டனிலும், அமெரிக்காவின் சில மாநிலங்களிலும், சிங்கப்பூர், தெற்கு சீனா போன்றவற்றிலும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

டெல்டா வேற்றுருவம் முக்கியமான கூடுதல் திரிபுகளை அடையும்போது, அது டெல்டா பிளஸ் என்று அழைக்கப் படுகிறது. தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, டெல்டா பிளஸ் என்று மக்கள் வழக்கமாகக் கூறும்போது கே417என் திரிபையே குறிப்பிடுகிறார்கள், இது பீட்டா வேற்றுருவத்தில் ஏற்கெனவே இனம்காணப்பட்டதுதான். இது டெல்டா/ பீட்டா கலப்பினம் இல்லை. ஆனால், இது ஒத்திசைந்த பரிணாமத்துக்கு ஒரு உதாரணம், இதில் திரிபுகள் எதையும் சாராமல் தாமாகவே ஏற்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை டெல்டா தொற்றுப்பரவல் ஏற்பட்ட இடங்களில் டெல்டா பிளஸினால் பெரிய பிரச்சினைகள் இருக்காது. அங்கெல்லாம் டெல்டா வடிவத்துக்கு எதிராக உருவான நோய் எதிர்ப்பு அணுக்கள் டெல்டா பிளஸை ஓரளவுக்குச் செயலிழக்கச் செய்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். ஆகவே, உடனடி அச்சுறுத்தலோ பீதி அடைவதற்கான காரணமோ இருப்பதாக நான் கருதவில்லை. கடந்த மாதம் டெல்டா பரவிய வேகத்தைவிட தற்போது டெல்டா பிளஸ் அதிக வேகத்துடன் பரவவில்லை. அது மட்டும் நிச்சயம். எனினும், ஒன்றிய அரசு கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது, ஏனெனில், டெல்டாவின் எந்த உள்வகையும் கவலை தரும் வேற்றுருவம் மட்டுமல்லாமல் அதைக் குறித்து மேலும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

மூன்றாவது அலை மிக விரைவில் வரப்போகிறதா?

வைரஸ் தொற்றுப் பரவலானது அதற்கு அதிக சாத்தியமுள்ள மக்கள்தொகை உள்ள பகுதியில் பரவுவதன் மூலம் தொடங்கும், பிறகு நோய்த்தொற்றுக்கு எளிதில் இலக்காகக் கூடியவர்களுக்கு அதிக அளவில் பரவுகிறது. தொற்றுக்குள்ளாகி மீண்டவர்களுக்கு அந்த வைரஸுக்கு எதிரான இயற்கையான எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். பிறகு, தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கப்பெற்ற மக்கள் இருப்பார்கள். போதுமான அளவிலான மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைத்த பிறகு, வைரஸால் எளிதில் பரவ முடியாது, அதனால் பரவல் குறையும். சில காலம் கழித்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போதோ, நோய் எதிர்ப்புச் சக்தியை எதிர்கொள்ளக்கூடிய திறனைப் பெறும் வகையில் வைரஸானது பரிணாமம் அடையும்போதோ வைரஸ் திரும்பவும் தாக்குகிறது, இதனால் பரவல் மறுபடியும் ஆரம்பிக்கிறது. இந்தச் சுழற்சியை அலை என்று நாம் கூறலாம்.

நாடு முழுவதிலும் உள்ள நிலையைப் பார்த்தோமென்றால் சமீபத்திய அலையானது வெறுமனே இரண்டாவது அலை மட்டும் கிடையாது. எடுத்துக்காட்டாக, டெல்லியில் வந்தது நான்காவது அலை – முதல் அலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வந்தது, இரண்டாம் அலை செப்டம்பர் மாதம், அடுத்தது நவம்பரில், அடுத்த அலை தற்போது. அடுத்த பரவல் எப்போது என்பதை அறிந்துகொள்ளப் பலரும் விரும்புகிறார்கள். தற்போதைய பரவலுக்கு டெல்டா வேற்றுருவம் காரணமாகியுள்ள நிலையில், அடுத்த அலையானது விரைவில் வருமென்று நான் கருதவில்லை. பெரும்பாலான மக்கள் தற்போதைய அலையின்போது நோய் எதிர்ப்புச் சக்தி பெறுவார்கள். ஆகவே, அங்கங்கே தொற்றுப் பரவல்கள் ஏற்படும் என்று நான் கருதினாலும் நாடு முழுவதிலும் பெரும் அலை கூடிய விரைவில் தாக்கும் என்று நான் கருதவில்லை.

இந்த எதிர்ப்புச் சக்தியைச் சமாளிக்கும் வகையில் வைரஸ் திரிபு அடைந்தாலோ, சில மாதங்களுக்கு முன்பு மக்கள் செய்ததுபோல் அலட்சியமாக இருந்தாலோ, நிச்சயம் இன்னொரு அலை தாக்கவே செய்யும். தற்போது தடுப்பூசிகள் வேகமாகப் போடப்படுகின்றன, வைரஸ் திரிபடைவதற்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும், நாங்கள் அவற்றின் திரிபுகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே, எதிர்காலத்தில் தாக்கக்கூடிய அலைகள் குறைந்த அளவிலானவையாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன். வைரஸ் இன்னும் நம்மிடையே இருக்கிறது என்பதையும் நமக்கு அவகாசம் இருக்கும்போது இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, நாம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுக்க வேண்டுமேயொழிய பீதியைப் பரப்புவதை முன்னெடுக்கக் கூடாது.

தடுப்பூசிகளின் செயல்திறனை வைரஸ் திரிபுகள் எந்த அளவுக்குப் பாதிக்கின்றன? வைரஸில் திரிபு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

ஒருவர் உடலில் வைரஸ் பல்கிப்பெருகும்போது, அது கோடிக்கணக்கில் தன்னை நகலெடுக்கிறது. அவற்றுள் சில நகல்கள் முழுமையானவை அல்ல, அவை சில வேறுபாடுகளை அதிகரித்துக்கொள்கின்றன, அவைதான் திரிபுகள் என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியிடமிருந்து தப்பிக்கும் திறன்தான் சில திரிபுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. அந்த வேற்றுருவங்கள் அவற்றின் மூல வைரஸ்களைவிட அதிக அளவில் பரவலாம், அவற்றுள் டெல்டாவும் ஒன்று.

ஒரு வைரஸில் ஏற்படும் இரட்டைத் திரிபுகள், மூன்று திரிபுகள் என்றால் என்ன? மரபணுப் பகுப்பாய்வு மூலம் திரிபுகளை இந்தியா கண்காணித்துக்கொண்டிருக்கிறதா?

விஷயத்தை, தேவைக்கும் மீறி எளிமையாக ஆக்குவதற்காகப் பயன்படுத்தும் தவறான சொல் பயன்பாடுகள்தான் இவை. தற்போதைய அனைத்து வைரஸ் வம்சாவளியும் பல்வேறு திரிபுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சில திரிபுகள் மட்டுமே அதிக அளவில் பரவுவதாலும் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துவதாலும் அவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. ஆமாம், வைரஸ்களில் ஏற்படும் திரிபுகளை இந்தியா கண்காணித்துக்கொண்டிருக்கிறது. இப்படிக் கண்காணிப்பது ஏற்கெனவே உள்ள வேற்றுருவங்களால் ஏற்படக்கூடிய தொற்றுப் பரவலின் ஆபத்துகளைக் கண்டறிவதில் உதவுகிறது, கவலை தரும் புதிய வேற்றுருவங்களையும் கண்டறிவதில் உதவுகிறது.

தனியினத்துக்கும் (strain) ஒரு வைரஸின் வேற்றுருவத்துக்கும் என்ன வேறுபாடு?

அறிவியல்ரீதியாகப் பார்த்தால், வைரஸில் பெரிய மாற்றம் ஏற்படாதவரை அது தனியினம்தான், அப்படிப்பட்ட மாற்றம் இதுவரை ஏற்படவில்லை. வேற்றுருவம் என்பது வைரஸில் ஏற்படும் திரிபுகளைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்.

அப்படியென்றால் ஒவ்வொரு திரிபுக்கும் ஏற்ற விதத்தில் அறிவியலர்கள் புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்குமா?

ஒவ்வொரு திரிபுக்கும் நாம் தடுப்பூசியை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எடுத்துக்காட்டாக, ஈ484கே வேற்றுருவங்களுக்காகத் தடுப்பூசியில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசிகளில் இப்படிப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் தற்போது கிடைக்கும் தடுப்பூசிகள் கரோனா வைரஸின் திரிபுகளுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கின்றனவா? ‘திரிபு’ அல்லது ‘தனியினம்’ என்பவை ஏன் பீதியைக் கிளப்புகின்றன? தடுப்பூசிகள் ஏன் இன்றியமையாதவையாகின்றன?

ஆம், இந்தியாவில் கிடைக்கும் அனைத்துத் தடுப்பூசிகளும் நோயின் தீவிரத்திலிருந்து பாதுகாக்கக் கூடியவை. வைரஸில் திரிபு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. பீதியடையத் தேவையில்லை. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுடன் கரோனா சூழலுக்குப் பொருத்தமான நடத்தையை (CAB) பின்பற்ற வேண்டும். இந்த நடத்தைதான் எல்லாத் திரிபுகளையும் எதிர்கொள்ளக்கூடிய திறனை நமக்கு வழங்குகிறது. ஏற்கெனவே கூறியதுபோல் தடுப்பூசிகள் நோயின் தீவிரத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x